Pages

Sunday, 2 October 2016

அகநானூறு Agananuru 305

தலைவி காதலில் துடிக்கிறாள். 
தோழி பொறுத்துக்கொள் என்கிறாள். 
தலைவி முடியவில்லையே முணவுகிறாள்.

1
வேண்டாம் என்றாலும் நீங்காமல் மழை பொழிகிறது. ‘ஐ’ என்று வியக்கும்படி வற்றாமல் வெள்ளம் பாய்கிறது. வாடைக்காற்றும் வீசுகிறது. நள்ளிரவில் உடலெல்லாம் நடுங்குகிறது.
2
பல விரிப்பு அடுக்குகளை உடைய மெத்தையின் மேல், ஒருவரை ஒருவர் அள்ளிக் குடிப்பது போல் இணைந்திருக்கும் காதலர், உடம்புக்குள் உடம்பு புகுந்துகொண்டிருப்பது போல தழுவிக்கொண்டு ஒரே உயிராகிக் கிடக்கும்போதும் இந்த வாடைக்காற்றில் வருந்துவர். அப்படிப்பட்ட வாடையில், அருள் இல்லாத என் காதலர் பொருளுக்காகப் பிரிந்து சென்றிருக்கும்போது, துன்பம் நிறைந்த நெஞ்சத்தோடு நான் எப்படி இருக்கிறேனோ, எனக்கே புரியவில்லை. தோழி! இதுதான் என் நிலைமை.
3
பருத்த அடி கொண்ட பனைமரத்தில் தனித்திருக்கும் அன்றில் தன் துணையை அழைக்கும் குரல் கேட்கிறது. அந்தக் குரல் என் உள்ளத்தில் பற்றி எரியும் காதல் தீயை ஊதி மேலும் கனன்று எரியச் செய்வது போல இருக்கிறது. அத்துடன் என்னைப் பற்றி நினைக்காமல் கோவலர் ஊதும் குழலிசையும் கேட்கிறது. இந்த நிலைமையில் “பொறுத்திரு” என்றால் எப்படி வேதனை இல்லாமல் இருக்க முடியும்?

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  பாலை

1
பகலினும் அகலாது ஆகி, யாமம்
தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழிய,
தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு
பனி மீக்கூரும் பைதல் பானாள்,
2
பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை,        5
பருகு அன்ன காதலொடு திருகி,
மெய் புகுவன்ன கை கவர் முயக்கத்து,
ஓர் உயிர் மாக்களும் புலம்புவர் மாதோ;
அருளிலாளர் பொருள்வயின் அகல,
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து    10
யான் எவன் உளெனோ தோழி! தானே
3
பராரைப் பெண்ணைச் சேக்கும், கூர்வாய்,
ஒரு தனி அன்றில் உயவுக் குரல் கடைஇய,
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக்
கனை எரி பிறப்ப ஊதும் 15
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே?

பிரிவு உணர்த்தப்பட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது;
தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம்.
வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

புல்லாங்குழல் ஆயன்

No comments:

Post a Comment