Pages

Sunday, 18 September 2016

கலித்தொகை Kalittogai 30

அருந்தவம் செய்தவர் அந்தத் தவத்தின் பயனை நுகர்வது போல கிளையெல்லாம் பூத்திருக்கும் பூக்கள் வண்டுகளும் தும்பிகளும் மொய்ப்பதால் தாது உதிர்ந்து இன்பம் நுகரும் வேனில் காலம் இது.
தரவு
  1. நான் இங்கே தூக்கம் இல்லாமல் இருக்கிறேன். அவன் தொழுவை (தொழுநை = யமுனை) நீரில் மயில் போன்ற மகளிருடன் ஆடுகிறானோ என்னவோ? இங்கே வெயில் அறியாத விரிமலர்ச் சோலையில் குயில் கூவுகிறது என்று அவனுக்குக் கூறுவார் இருந்தால் எனக்கு நல்லது.
  2. நள்ளிரவில் நான் துன்புறுகிறேன். என் தோள் வாடுகிறது. அவன் மான் போல் பார்க்கும் மற்றொருத்தியோடு என்னை மறந்து, வாழ்கின்றானோ என்னவோ? இங்கே, கூடல் நகரில் முல்லை பூத்து ஈக்கள் தேனை உண்கின்றன என்று அவனுக்குச் சொல்லுவார் இருந்தால் எனக்கு நல்லது.
  3. அவனைத் தழுவ எண்ணி நான் ஒளி இழந்து வாடுகிறேன். அவன் காமன் விழாவில் அணிகலன் பூண்டவளோடு விளையாடுகிறானோ என்னவோ? இங்கே வையை ஆற்று வரிமணலில் பூக்கள் உதிர்ந்து கிடக்கின்றன என்று அவனுக்குச் சொல்லுவார் இருந்தால் எனக்கு  நல்லது.

மூன்றும் தாழிசை
என்றெல்லாம் சொல்லிக்கொண்டு,
தனிச்சொல்
தணியாத காம நோயுடன் உன் தகையவள் துன்புறுகின்றாள். பகைவர் போல நடுங்குகிறாள். அவள் மகிழ, நீ உன் தேரில் செல்க. உன் காலடி பணிந்து வேண்டுகிறேன். – இவ்வாறு பாணன் தலைவனிடம் சொல்கிறான்.
சுரிதகம்

உயர்ந்தவன் விழா
காமன்-இரதி ஆட்டம்
காமாண்டி ஆட்டம் 
பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

'அருந்தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல், அணி கொள
விரிந்து ஆனாச் சினை தொறூஉம், வேண்டும் தாது அமர்ந்து ஆடி,
புரிந்து ஆர்க்கும் வண்டொடு, புலம்பு தீர்ந்து எவ் வாயும்,
இருந் தும்பி, இறை கொள எதிரிய வேனிலான்;
தரவு
துயில் இன்றி யாம் நீந்த, தொழுவை அம் புனல் ஆடி,         5
மயில் இயலார் மரு உண்டு, மறந்து அமைகுவான்மன்னோ
'வெயில் ஒளி அறியாத விரி மலர்த் தண் காவில்
குயில் ஆலும் பொழுது' எனக் கூறுநர் உளராயின்;

பானாள் யாம் படர் கூர, பணை எழில் அணை மென் தோள்
மான் நோக்கினவரோடு மறந்து அமைகுவான்மன்னோ 10
'ஆனார் சீர்க் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை,
தேன் ஆர்க்கும் பொழுது' எனத் தெளிக்குநர் உளராயின்;

உறல் யாம் ஒளி வாட, உயர்ந்தவன் விழவினுள்
விறல் இழையவரோடு விளையாடுவான்மன்னோ
'பெறல் அரும் பொழுதோடு, பிறங்கு இணர்த் துருத்தி சூழ்ந்து,  15
அறல் வாரும், வையை' என்று அறையுநர் உளராயின்'
மூன்றும் தாழிசை
என ஆங்கு,
தனிச்சொல்
தணியா நோய் உழந்து ஆனாத் தகையவள் தகை பெற,
அணி கிளர் நெடுந் திண் தேர் அயர்மதி பணிபு நின்
காமர் கழல் அடி சேரா        20
நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே.
சுரிதகம்
பருவ வரவின்கண் ஆற்றாத தலைமகள் இறந்தது சிந்தித்து
நம்மாட்டு அன்பிலராயினும் இக்காலத்து இவ்வூரின்கண் பண்டுதாம் விளையாடியவாறு நினைந்து வருவர்
இக்கால வரவு சொல்லலுவார் உளராயினெனக் கேட்ட பாணன்
பாசறைக்கண் சென்று தலைவனைக் கண்டு கூறியது.

பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ
திணை - பாலை
கி.மு. காலத்துப் பாடல்


No comments:

Post a Comment