Pages

Saturday, 17 September 2016

கலித்தொகை Kalittogai 29

குழந்தையைப் பெற்றெடுக்க வருந்திய தாய் பெற்றெடுத்த பின்னர் மகிழ்ச்சியுடன் மல்லாந்து படுத்துக் கிடப்பது போல, விளைந்து பயன் உதவிய நிலம் வருத்தம் நீங்கி இளவேனிலில் பொலிவுடன் திகழ்கிறது. இளம்பெண்ணின் கூந்தல் நெளிவு போல் ஆற்றுமணல் அறல்பட்டுக் கிடக்கிறது. திருமகள் மேனியில் திதலை இருப்பது போல, மாந்தளிரில் அதன் பூந்தாதுகள் கொட்டிக் கிடக்கின்றன. இப்படி இளவேனில் காலம் வந்திருக்கிறது.
தரவு

  1. சில மொழிகளைப் பேசும் தோழி! நீ சொல்கிறபடி தொலைவில் இருப்பவரிடம் சென்ற என் நெஞ்சத்தைக் கட்டுப்படுத்தி நிறுத்திப் பார்க்கிறேன். வாயை விரித்துக்கொண்டிருக்கும் பூவைத் தொட்டுவிட்டு வாடைக்காற்று நாள்தோறும் என்னைத் தாக்குவது என் கட்டுப்பாட்டைக் கலைத்துவிடுகிறது.
  2. காலப்பொழுதை நினைத்துப் பார்க்காமல் அவர் என்னை விட்டுப் பிரிந்துள்ளார். எண்ணிப் பார்த்து, நீ சொல்கிறபடி அதனை மறைக்கிறேன். மாலை வந்ததும் பூவில் விருந்து உண்ணும் பெரிய தும்பி-வண்டு மகிழ்ந்து பாடுவது என் கட்டுப்பாட்டைக் கலைத்துவிடுகிறது.
  3. என் வளையலைக் கழலச் செய்தவரோடு என் உயிர் ஒன்றிக் கிடக்கிறது. அவருக்குப் பழி வந்துவிடக் கூடாதே என்று எண்ணி என் உயிரை என்னிடம் நிறுத்திப் பார்க்கிறேன். நிலா வெளிச்சத்தில் வாயை விரிக்கும் பூக்களிலிருந்து வரும் மணம் இரவில் என்னைத் துன்புறுத்தி என் கட்டுப்பாட்டைக் கலைத்துவிடுகிறது.  
மூன்றும் தாழிசை
என்றெல்லாம் சொல்லி,
தனிச்சொல்
நீ (தலைவி) உன் வளையல் கழல வருந்துகிறாய். பொருள் தேடச் தொலைவிலுள்ள நாட்டுக்குச் சென்றவர் உன் துன்பத்தைப் போக்கி, உன் புன்சிரிப்பில் சில சொற்களைக் கேட்பதற்காக வருகிறார். கலங்காதே என்று தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.
சுரிதகம்

ஈன்றவள் கிடக்கை
பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

'தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின்,
அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கை போல்,
பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம்
புல்லிய புனிறு ஒரீஇப் புது நலம் ஏர்தர;
வளையவர் வண்டல் போல், வார் மணல் வடுக் கொள;   5
இளையவர் ஐம்பால் போல், எக்கர் போழ்ந்து அறல் வார;
மா ஈன்ற தளிர்மிசை, மாயவள் திதலை போல்,
ஆய் இதழ்ப் பன் மலர் ஐய கொங்கு உறைத்தர;
மே தக இளவேனில் இறுத்தந்த பொழுதின்கண்;
தரவு
சேயார்கண் சென்ற என் நெஞ்சினை சின்மொழி!     10
நீ கூறும் வரைத்து அன்றி, நிறுப்பென்மன் நிறை நீவி,
வாய் விரிபு பனி ஏற்ற விரவுப் பல் மலர் தீண்டி,
நோய் சேர்ந்த வைகலான், வாடை வந்து அலைத்தரூஉம்;

போழ்து உள்ளார் துறந்தார்கண் புரி வாடும் கொள்கையைச்
சூழ்பு ஆங்கே சுடரிழாய்! கரப்பென்மன் கைநீவி       15
வீழ் கதிர் விடுத்த பூ விருந்து உண்ணும் இருந் தும்பி
யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம்;

தொடி நிலை நெகிழ்த்தார்கண் தோயும் என் ஆர் உயிர்
வடு நீங்கு கிளவியாய்! வலிப்பென்மண் வலிப்பவும்,
நெடு நிலா, திறந்து உண்ண, நிரை இதழ் வாய் விட்ட          20
கடி மலர் கமழ் நாற்றம், கங்குல் வந்து, அலைத்தரூஉம்'
மூன்றும் தாழிசை
என ஆங்கு,
தனிச்சொல்
வருந்தினை வதிந்த நின் வளை நீங்க, சேய் நாட்டுப்
பிரிந்து செய் பொருட் பிணி பின் நோக்காது ஏகி, நம்
அருந் துயர் களைஞர் வந்தனர் 25
திருந்து எயிறு இலங்கு நின் தே மொழி படர்ந்தே.
சுரிதகம்
பருவ வரவின்கண் ஆற்றாத தலைவியைத் தோழி வற்புறுப்ப,
வன்புறை யெதிரழிந்தாட்கு, தோழி அவன் வரவுணர்ந்து கழியுவகையாற் கூறியது.

பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ
திணை - பாலை
கி.மு. காலத்துப் பாடல்


No comments:

Post a Comment