Pages

Saturday, 17 September 2016

கலித்தொகை Kalittogai 28

பூக்கள் சங்கப்பாடல்களில் புகழ்ந்து பாடப்படுபவை. அவை நிலத்துச் செடிகளிலும் நீர்ச்சுனையிலும் பூத்திருக்கின்றன. தேடிப் பறிக்க வேண்டா, நானே தருகிறேன் என்று கூறுபவை போலப் பூத்திருக்கின்றன. மாலையும் தழையாடையும் தொடுப்பவர்களுக்காகக் கொத்துக் கொத்தாகப் பூத்திருக்கின்றன. துறை துறையாகப் பூத்திருக்கின்றன. திருமகள் மார்பில் ஆரம் போல் பூத்து, அவள் கூந்தல் போன்ற வையை ஆற்று வரிமணலில் கிடக்கின்றன. இப்படிப் பூத்திருக்கும் காலம் இந்த இளவேனில்.
தரவு
  1. விரிந்து தாங்கமுடியாமல் பூத்துள்ளது என்றால், குயில் துணையை அழைத்துக் கூவுகிறது என்றால், அவர் பிரிந்திருக்கிறார் என்றால், என் நெஞ்சம் பித்தாகும் காலம் என்றால், இவள் துன்புறுவாளே என்று எண்ணாமல், பிரிவு-நோய் வருத்துகிறது என்றால், என் தோளைத் தழுவிதல் என்னவாயிற்று எனக் கேட்டுத் தூது விடலாமா?
  2. புதர் எல்லாம் மலர் என்றால், கொட்டிக்கிடக்கும் பூக்களில் எல்லாம் வண்டுகள் மொய்க்கின்னறன என்றால், அயலார் அலர் தூற்றுகிறார்கள் என்றால், இப்படி இருந்தும் அவர் என்னை விட்டு அகன்று இருக்கிறார் என்றால், துணை இல்லாதவளாகத் தோளில் பசப்பு ஊர, உன் அளி பெறாமல் கிடக்கிறாள் என்று தூது விடலாமா?
  3. ஆற்று வரிமணலிலும், கிளையிலும் உள்ள பூக்களில் வண்டுகள் மொய்க்கின்றன என்றால், மாமரம் தளிர்த்திருக்கிறது என்றால், என் கண்-பூ மட்டும் புலம்பிக்கொண்டு, கண்ணுறக்கம் இல்லாமல் கிடக்கிறது. உன் அளி என்ன ஆயிற்று என்று தூது விடலாமா? தோழி!
மூன்றும் தாழிசை
என்று வினவுகிறாயே ஆயிழை! (தெரிந்தெடுத்த அணிகலன்களை அணிந்தவள்)
தனிச்சொல்
அப்படிக் கேட்காதே. தொலைவில் உள்ளவர்க்கு நாம் தூது விடுதல் வேண்டா. உன்னைக் காட்டிலும் பிரிந்து வாழ முடியாத மனம் படைத்தவர் அவர். நீ வருந்துவதால் என்ன பயன். விரைந்து வந்துவிடுவார், என்கிறாள் தோழி.
சுரிதகம்

ஆயிழை
பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

'பாடல் சால் சிறப்பின் சினையவும், சுனையவும்
நாடினர் கொயல் வேண்டா, நயந்து தாம் கொடுப்ப போல்,
தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார்கண்
தோடுறத் தாழ்ந்து, துறை துறை கவின் பெற,
செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணி கொள்பு,        5
தொய்யகம் தாழ்ந்த கதுப்புப் போல் துவர் மணல்
வையை வார் அவிர் அறல், இடை போழும் பொழுதினான்
தரவு
விரிந்து ஆனா மலராயின், விளித்து ஆலும் குயிலாயின்,
பிரிந்து உள்ளார் அவராயின், பேதுறூஉம் பொழுதாயின்,
அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது          10
வருந்த, நோய் மிகுமாயின் வணங்கிறை! அளி என்னோ?

புதலவை மலராயின், பொங்கரின வண்டாயின்,
அயலதை அலராயின், அகன்று உள்ளார் அவராயின்,
மதலை இல் நெஞ்சொடு மதனிலள் என்னாது
நுதல் ஊரும் பசப்பாயின் நுணங்கிறை! அளி என்னோ?    15

தோயின அறலாயின், சுரும்பு ஆர்க்கும் சினையாயின்,
மாவின தளிராயின், மறந்து உள்ளார் அவராயின்,
பூ எழில் இழந்த கண் புலம்பு கொண்டு அமையாது
பாயல் நோய் மிகுமாயின் பைந்தொடி! அளி என்னோ?'
மூன்றும் தாழிசை
என ஆங்கு,  20
தனிச்சொல்
ஆயிழாய்! ஆங்கனம் உரையாதி; சேயார்க்கு
நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா; நம்மினும்
தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர்,
பரிந்து எவன் செய்தி வருகுவர் விரைந்தே.
சுரிதகம்
இளவேனில் வரவின்கண் ஆற்றாத தலைவி தூது விடக் கருத, தோழி,
அவர் பிரிந்திருத்தலை நம்மினுந் தாம் வல்லர் அல்லர் எனச் சொல்லி வற்புறுத்தியது.

பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ
திணை - பாலை
கி.மு. காலத்துப் பாடல்


No comments:

Post a Comment