Pages

Sunday, 18 September 2016

அகநானூறு Agananuru 266

பரத்தையிடமிருந்து வந்த கணவனை மனைவி ஏற்றுக்கொள்ளும் பாங்கு.

1
மகிழ்ந! கரை உச்சியைத் தொடுமாறு பெருகி வந்த வெள்ளத்துக்கு அந்திவிழா எடுத்து வழிபட்டுக்கொண்டு, அந்த நீர்ப்பரப்பில் நேற்று நீ விளையாடினாய். யானை போல் நீராடினாய். முன்புறமாக உந்தும் தலைப்புணை மேல் ஏறிக்கொண்டு நீராடினாய். துணையாக, நரந்தம் பூசி மணக்கும் கூந்தலை உடைய இளம்பெண்களைச் சேர்த்துக்கொண்டு நீராடினாய். அவளை ஈரமாக்கி, கலவியுடன் நீராடினாய். அவள்மீது நீரைத் தெளித்து விளையாடியபோது அவளது அழகிய கண்களைப் பார்க்கப் பார்க்க ஆசை மேலிட்டு தவிர்க்காமல் மீண்டும் மீண்டும் நீராடினாய். நாணம் இல்லாமல் நீராடினாய் என்றெல்லாம் கூறுகின்றனர்.
2
அதைப் பற்றி ஊரே பேசுகிறது. நீடூர் யாழிசை கேட்கும் தெருக்களைக் கொண்டது. அதன் அரசன் எவ்வி. இவன் வாள் வீச்சில் வல்லவன். இவன் ஏவியபடி பசும்பூண் என்னும் அடைமொழி கொண்ட வேந்தனின் பகைவர்கள் நெடுமிடல் என்பவனை கொன்றுவிட்டு, அரிமணவாயில் (அரிமழம், இக்கால ஊர்) ஊரை அடுத்த உறத்தூர் என்னுமிடத்தில் கள்ளும் சோறும் உண்டு களித்திருந்தனர். இந்தக் களிப்பு ஆரவாரம் போல, ஊர் உன்னைப் பற்றி அலர் தூற்றுகிறது.
3
இனி, அந்த அலர் எனக்கு அவலம் தருவது அன்று. வயலில் உழவர் முழக்கிய இசையைக் கேட்டுப் பயந்து ஓடும் மயில்கள் அணங்கு-மகளிர் நடமாடும் மலைமுகடுகளில் வந்து தங்கும் அலைவாயில் (திருச்செந்தூர்) முருகன் முன்பு என்னைப் பிரியமாட்டேன் என்று சூள் உரைத்தாயே. அந்தச் சூள் என்னவாயிற்று? தவறு செய்த உன்னை முருகன் தண்டிப்பானோ என எனக்கு அச்சமாக இருக்கிறது. இவ்வாறு சொல்லிக்கொண்டு பரத்தையிடமிருந்து வந்த தலைவனைத் தலைவி ஏற்றுக்கொள்கிறாள்.


பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, மருதம்

1
கோடுற நிவந்த நீடு இரும் பரப்பின்
அந்திப் பராஅய புதுப் புனல், நெருநை,
மைந்து மலி களிற்றின் தலைப் புணை தழீஇ,
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல்
இளந் துணை மகளிரொடு ஈர் அணிக் கலைஇ,          5
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக் கண்
நோக்குதொறும் நோக்குதொறும் தவிர்விலை ஆகி,
காமம் கைம்மிகச் சிறத்தலின், நாண் இழந்து,
ஆடினை என்ப மகிழ்ந! அதுவே
2
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன் 10
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர்
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண்,
கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன,
கவ்வை ஆகின்றால் பெரிதே; இனி அஃது  15
3
அவலம் அன்றுமன், எமக்கே; அயல
கழனி உழவர் கலி சிறந்து எடுத்த
கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை
அணங்குடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும்
திரு மணி விளக்கின் அலைவாய்ச்       20
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே!

பரத்தையிற் பிரிந்து வந்து கூடிய தலைமகற்குத் தலைமகள் சொல்லியது.
பரணர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

அலைவாய் 

No comments:

Post a Comment