பனிக்காலத்தில் அவர் போர்ப் பாசறையில் இருக்கிறார்; நான் வாடை தாக்கத்தில் வாடிக் கிடக்கிறேன்; என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
1
மேகக் கூட்டத்துடன் செல்லும் பெருமழை-மேகம் விண் அதிரும்படி முழங்கி, துள்ளியோடும் மழைக்கட்டிகளுடன் மழை பொழிந்தது.அதன் பின்னர் பூக்களின் உட்புறமெல்லாம் புள்ளிப் புள்ளியாக பூக்களில் பனித்திவலைகள் நிறையும்படி செய்துகொண்டு பனி பொழிந்துகொண்டிருக்கிறது.கருவிளை என்னும் காக்கணம் பூக்கள் காதலரைப் பிரிந்த மகளிரின் கண்ணீர் போலப் பனித்துளிகள் வழிய மலர்ந்துள்ளன.பஞ்சு போன்ற தலையுடன் ஈங்கைப் பூ, நெய்யில் நனைத்தது போன்று நீரில் நனைந்த தளிரோடு, இரண்டாகப் பிளந்த ஈரல் (ஈருள்) போல் பனி ஈரத்துடன் மலர்ந்துள்ளது.அவரையின் இளம் பூக்கள் மலர்ந்துள்ளன.அகன்ற வயலில் நெல் கதிர் வாங்கி வணங்கியிருக்கிறது.இவற்றிலெல்லாம் பனித்துளி தூங்கும் அற்சிரக் காலத்து நள்ளிரவு நேரம் இது.
2
அவர் காயும் சினம் கொண்ட வேந்தனின் போர்ப் பாசறையில் இருக்கிறார்.என் நோய் அறியாமல் அறம்-இல்லாதவராக இருக்கிறார்.பனிக்காலத்தில் நான் படும் வேதனையை எண்ணி அவர் வருவாரோ என்று எண்ணிக்கொண்டு, வீசும் வாடைக் காற்றைத் தாங்க முடியாமல் தனிமையில் துன்புற்றுக்கொண்டிருக்கிறேன்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, முல்லை
1
மங்குல் மா மழை
விண் அதிர்பு முழங்கி,
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை,
புகைஉறப்
புள்ளி நுண் துவலை
பூவகம் நிறைய,
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
நீர் வார் கண்ணின்
கருவிளை மலர, 5
துய்த் தலைப் பூவின்
புதல் இவர் ஈங்கை
நெய்த் தோய்த்தன்ன நீர்
நனை அம் தளிர்
இரு வகிர் ஈருளின்
ஈரிய துயல்வர,
அவரைப் பைம் பூப்
பயில, அகல் வயல்
கதிர் வார் காய்
நெல் கட்கு இனிது இறைஞ்ச, 10
சிதர் சினை தூங்கும்
அற்சிர அரை நாள்,
2
''காய் சின வேந்தன்
பாசறை நீடி,
நம் நோய் அறியா
அறனிலாளர்
இந் நிலை களைய
வருகுவர்கொல்?'' என
ஆனாது எறிதரும் வாடையொடு 15
நோனேன் தோழி! என்
தனிமையானே.
பருவ வரவின்கண் வற்புறுக்கும்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
கழார்க்கீரன் எயிற்றியார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment