கற்பழித்தவனுக்குச் சங்ககாலத் தண்டனை
1
பழமையான சேற்று வயலில் ஆமை மேயும் ஊரனே!வள்ளைக்கொடி மண்டிக்கிடக்கும் நீர்ச்சோலை.அதில், வளைந்த நகம் கொண்ட ஆமை உறங்கும்.கல்லில் மோதிய கல் போல் அது நகரும்.கிழிந்த வாய் நிறையக் கள் உண்டவன் தள்ளாடி நடப்பது போல அது நடக்கும்.வயல்களை நாசமாக்கும்.ஆம்பல் இலைக்கடியில் பதுங்கிக்கொள்ளும்.இப்படிப்பட்ட நிலம் கொண்ட ஊரன் நீ.
2
பொய் சொல்லாதே.உன் மாயம் எனக்குத் தெரியும்.கையும் களவுமாக நீ பிடிபட்டுக்கொண்டது எனக்குத் தெரியும் என்பது உனக்குத் தெரியாது.
3
நேற்று வையைப் புனலில் உன்னவளோடு நீராடி அவளை உரிய முறையில் துய்த்தாய்.அதனை அவளது உடன்பரத்தைத் தோழிமார் மறைத்தனர்.
என்றாலும் அதனை ஊரெல்லாம் பலபடப் பேசுகிறது.
4
கள்ளூர் என்னும் ஊரில் வாழ்ந்த சிறுமி நல்லவளை ஒருவன் தன் வலிமையைப் பயன்படுத்தி அவள் பெண்மையை நுகர்ந்துவிட்டான்.அந்தக் கொடுமைக்காரன் ஊரார் முன்னிலையில் “அவளை எனக்குத் தெரியாது” என்றான்.ஊரார் கரியாளர்களை (சாட்சியாளர்களை) வினவினர்.அவன் அவளைக் கெடுத்தது உண்மை எனத் தெரியவந்தது.ஊர் மன்றத்தார் அவனது உறவினர்களைக் கூட்டினர்.அவர்கள் முன்னிலையில் கொதிக்கும் சுண்ணாம்பு நீற்றை அவன் தலையில் கொட்டினர்.அப்போது ஊரே ஆரவாரம் செய்தது.அந்த ஆரவாரம் போல உன் பரத்தை-உறவு பற்றி ஊரார் பேசிக்கொள்கின்றனர்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, மருதம்
1
பிணங்கு அரில் வள்ளை
நீடு இலைப் பொதும்பில்
மடி துயில் முனைஇய
வள் உகிர் யாமை
நொடி விடு கல்லின்
போகி, அகன்துறைப்
பகுவாய் நிறைய, நுங்கின்
கள்ளின்
நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு
நடையொடு 5
தீம் பெரும் பழனம்
உழக்கி, அயலது
ஆம்பல் மெல் அடை
ஒடுங்கும் ஊர!
2
பொய்யால்; அறிவென், நின் மாயம். அதுவே
கையகப்பட்டமை அறியாய்; நெருநை
3
மை எழில் உண்கண்
மடந்தையொடு வையை 10
ஏர் தரு புதுப்
புனல் உரிதினின் நுகர்ந்து,
பரத்தை ஆயம் கரப்பவும்,
ஒல்லாது
கவ்வை ஆகின்றால், பெரிதே;
காண்தகத்
4
தொல் புகழ் நிறைந்த
பல் பூங் கழனி,
கரும்பு அமல் படப்பை,
பெரும் பெயர்க் கள்ளூர், 15
திரு நுதற் குறுமகள்
அணி நலம் வவ்விய
அறனிலாளன்,''அறியேன்'' என்ற
திறன் இல் வெஞ்
சூள் அறி கரி கடாஅய்,
முறி ஆர் பெருங்
கிளை செறியப் பற்றி,
நீறு தலைப்பெய்த ஞான்றை, 20
வீறு சால் அவையத்து
ஆர்ப்பினும் பெரிதே.
தோழி தலைமகற்கு வாயின்
மறுத்தது.
மதுரைத் தமிழ்க் கூத்தனார்
கடுவன் மள்ளனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment