தலைவன் பொருள் ஈட்டிக்கொண்டு வரச் சென்றது பற்றித் தலைவியும் தோழியும் பேசிக்கொள்கின்றனர்.
1
தோழி, இதனைக் கேள்.அணிந்துகொள்ள முடியாத கண்ணீர் முத்து முலையில் விழுந்து மார்பகம் புலம்பும்படி விட்டுவிட்டுத் துறந்து சென்றவர் அருள் இல்லாதவர்.
2
உறவுக்காரக் கரடிகள் பலவற்றைக் கொண்ட ஆண் கரடி, இரும்பைப் பூக்களை உண்டு தெவிட்டும்போது, செம்மண் புற்றை அதில் உள்ள கறையான்களை உண்ணுவதற்காகக் கிண்டும். இப்படிப்பட்ட காட்டின் கொடுமையை எண்ணிப்பார்க்காமல் அதன் வழியில் செல்கிறார்.
3
மனிதர் பகையைக் கொல்லும் யானைகள் நடமாடும் துன்பம் தரும் வழி என்று எண்ணிப் பார்க்காமல் பல வழிகளைக் கடந்து செல்கிறார்.
4
இறந்து அழுகி முடைநாற்றம் வீசும் உடலுக்காக மர உச்சியில் கழுகுகள் காத்திருக்கும் வழியில் செல்கிறார்.அவர் அருள் இல்லாவர், தோழி.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை
நல் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர்
அருள் இலர் வாழி, தோழி! பொருள் புரிந்து,
2
இருங் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை,
கருங் கோட்டு இருப்பை வெண் பூ முனையின், 5
பெருஞ் செம் புற்றின் இருந் தலை இடக்கும்
அரிய கானம் என்னார், பகை பட
3
முனை பாழ்பட்ட ஆங்கண், ஆள் பார்த்துக்
கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும்
ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி, 10
4
படு முடை நசைஇய பறை நெடுங் கழுத்தின்
பாறு கிளை சேக்கும் சேண் சிமைக்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட
தலைமகளது வேறுபாடு கண்டு, வேறுபட்ட தோழிக்குத்
தலைமகள் சொல்லியது.
மதுரை மருதங் கிழார்
மகனார் பெருங்கண்ணனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment