Pages

Saturday, 10 September 2016

அகநானூறு Agananuru 246

ஆரல் மீன் மேயும் வயலில் ஆண் பெண் நந்துப் பூச்சிகள் புணர்வது போல தலைவன் பரத்தையோடு கூடித் திளைத்தானாம்.

1
பிணித்துக்கொண்டிருக்கும் முதுகும், பிளந்த வாயையும் உடைய ஆண்-நத்தையானது, நெல்லங்கதிர் போல் மூக்கினைக் கொண்ட ஆரல்-மீன் களத்தில் பார்த்துக்கொண்டிருக்கும்போது, தன் பெண்-நத்தையோடு கூடித் திளைக்கும் நீர்வளம் மிக்க வயல்களைக் கொண்ட ஊரை உடையவன் தலைவன்.

ஊர! கேள்!
2
நீ விரும்பிய பூ அணிந்த கூந்தலை உடையவளோடு சேர்ந்துகொண்டு நேற்று, காஞ்சிப் பூங்காவிலும், அகன்ற ஆற்று நீரிலும் காதல் ஆட்டம் ஆடினாய் என்னும் பேச்சு ஊரெல்லாம் அலராகப் பூக்கிறது.
3
வெண்ணிவாயில் (இக்காலத்துக் கோயில்வெண்ணி) என்னுமிடத்தில் போர்.
வலிமையில் பெயர் பெற்ற கரிகாலன் அரசனை வேளிர் குடி அரசர்கள் பதினோரு பேர் ஒன்று திரண்டு தாக்கினர். 
கரிகாலனை எதிர்த்துப் போரிட முடியாமல், தம் போர்முரசுகளைப் போர்க்களத்திலேயே போட்டுவிட்டுப் பதினோரு பேரும் ஓடினர். 
அதனைப் பார்த்த அழுந்தூர் (தேரழுந்தூர்) மக்கள் ஆரவாரத்துடன் ஏளனம் செய்தனர்.

அவர்கள் ஏளனம் செய்தது போல் நீ உன் மகளிரோடு விளையாடிய அலர் பேசப்படுகிறது.

என் தலைவியை நெருங்காதே!
தோழி தலைவனைத் தடுக்கிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, மருதம்

1
பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை
கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக,
நெடு நீர்ப் பொய்கைத் துணையொடு புணரும்
மலி நீர் அகல் வயல் யாணர் ஊர!
2
போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு     5
தாது ஆர் காஞ்சித் தண் பொழில் அகல் யாறு
ஆடினை என்ப, நெருநை; அலரே
3
காய் சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில்,
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்  10
இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய,
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய,
மொய் வலி அறுத்த ஞான்றை,
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே.

தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது.
பரணர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

வயல் நந்து

கடல் நந்து

கடல் நந்து

கடல் நந்துகள் புணரல்

கடல் நந்துகள்

No comments:

Post a Comment