![]() |
| திருக்குறள் 65 |
மக்கட்பேறு
கருத்தோட்டம்
- குழந்தைச் செல்வமே பெறவேண்டிய பேறு. 61
- பழிக்கப்படாத மக்கள் இருந்தால் துன்பம் வராது. 62
- பெற்ற மக்கள்தான் பெருவளம்; அவர்களுக்கு வளம் அவர்களின் செயலால் வரும். 63
- தன்னுடன் குழந்தை அள்ளி உண்ணும் உணவு அமிழ்தினும் மேலானது. 64
- அவர்கள் தொடுவதும் பேசுவதும் இன்பம். 65
- மழலையை மிஞ்சிய இசையின்பம் இல்லலை 66
- தந்தையின் கடமை மகனை முன்னேறச் செய்தல். 67
- தந்தையைக் காட்டிலும் அறிவுடைய மகனால் உலகுக்கு இன்பம். 68
- மகன் சான்றோன் எனப் போற்றப்பட்டால் தாய்க்குப் பெற்றதை விடப் பேரின்பம் 69
- தந்தைக்குத் தன் செயலால் மதிப்பைத் தேடித் தருவது மகனது கடமை. 70
பொருளோட்டம்
- ஒருவன் பெற்றிருப்பவை அவனுக்குப் பேறு. பேறுகளில் வழிவழியாக மதிக்கத்தக்க பேறு அவன் பெற்ற பிள்ளைகள். தெரிந்துகொள்ள வேண்டியவற்றைத் தெரிந்துகொண்டிருக்கும் பிள்ளைகள். எங்களுக்குத் தெரிந்தவரை வேறு சிறந்த பேறு இல்லை. 61
- பழி தோன்றாமல் பண்புடன் வாழும் பிள்ளைகளைப் பெற்றிருந்தால் ஏழு பிறப்பிலும் தீயவை தாக்கமாட்டா. (பல நாள்களை ஏழு நாளாக எண்ணிக்கை வைத்துக்கொள்வது போலப் பல பிறவிகளை ஏழு பிறவி எனக் கொள்வது ஒரு மரபு. நான் உண்மையிலேயே என் மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி என்று மூன்று தலைமுறையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவ்வாறே என் கொள்ளுப்பேத்தி என்னைப் பார்ப்பது போல் முந்தைய மூன்று தலைமுறையை ஒருவன் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. தன்னுடன் சேர்த்து இவற்றை ஏழு பிறப்பு என்றும் கருதிப் பார்க்கலாம்) 62
- ஒருவனுக்குப் பொருள் அவன் பெற்ற பிளைகள். அவர்களுக்குப் பொருள் அவர்களின் செயலால் வந்து சேரும். 63
- பிள்ளைகள் தம் கைகளை நம் உணவில் இட்டு அலசி உண்ணும் உணவு நமக்கு அழிதத்தைக் காட்டிலும் இனிக்கும். 64
- பெற்ற குழந்தைகள் தொட்டால் உடலுக்கு இன்பம். அவர்கள் பேசுவதைக் கேட்டால் செவிக்கு இன்பம். நாம் தொட்டாலும், பேசினாலும் குழந்தைக்கு இன்பம். 65
- பெற்ற குழந்தைகளின் மழலைச் சொற்கள் குழல், யாழ் தரும் இசையைக் காட்டிலும் இனிமையாக இருக்கும். 66
- தந்தை மகனுக்குச் செய்யவேண்டிய உதவி அவையின் தலைவனாக விளங்கும்படிச் செய்வதுதான். (அறிவும் பண்பும் அளிப்பதுதான்) 67
- தம் பிள்ளைகள் தம்மைக் காட்டிலும் அறிவுடையவர்களாக விளங்கினால் அது உலகிலுள்ள உயிரினங்களுக்கெல்லாம் இன்பம் தரும். 68
- தன் மகனைச் சான்றோன் என்று பிறர் சொல்லக் கேட்ட தாய் அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சி அடைவாள். 69
- மகன் தந்தைக்குச் செய்யவேண்டிய உதவி ‘இவன் தந்தை இவனைப் பெற என்ன நோன்பு இயற்றினானோ’ என்று பிறர் போற்றுமாறு நடந்துகொள்வதாகும். 70
திருக்குறள் யாப்போட்டம் | திருக்குறள் சொல்லோட்டம்
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற. 61
பெறுமவற்றுள்
யாமறிவது இல்லை அறிவறிந்த \ மக்கட்பேறு அல்ல பிற. 61
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். 62
எழுபிறப்பும்
தீயவை தீண்டா பழி பிறங்காப் \ பண்புடை மக்கட் பெறின். 62
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும். 63
தம்பொருள்
என்பதம் மக்கள் அவர்பொருள் \ தம்தம் வினையான் வரும். 63
அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். 64
அமிழ்தினும்
ஆற்ற இனிதே தம் மக்கள் \ சிறுகை அளாவிய கூழ். 64
மக்கண்மெய் தீண்டல் உடற்கின்ப மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. 65
மக்கள்
மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர் \ சொல் கேட்டல் இன்பம் செவிக்கு. 65
குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். 66 (தி குற்றியலிகரம்
அலகு பெறவில்லை)
குழல்
இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள் \ மழலைச் சொல் கேளாதவர். 66
தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தி யிருப்பச் செயல். 67
தந்தை
மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து \ முந்தி இருப்பச் செயல். 67
தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது. 68
தம்மின்
தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து \ மன்னுயிர்க் கெல்லாம் இனிது. 68
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்
சான்றோ னெனக்கேட்ட தாய். 69
ஈன்ற
பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனைச் \ சான்றோன் எனக் கேட்ட தாய். 69
மகன்றந்தைக் காற்றும் உதவி இவன்றந்தை
என்நோற்றான் கொல்லெனுஞ் சொல். 70
மகன்
தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை \ என் நோற்றான் கொல் எனும் சொல். 70

No comments:
Post a Comment