Pages

Tuesday, 9 August 2016

பரிபாடல் திரட்டு Paripadal Annex 8

கூடல் எனப்பட்ட மதுரையின் சிறப்பினைக் கூறுவது இந்தப் பாடல்.
சிறப்பு மிக்க மதுரை என்னும் ஊர் திருமால் வயிற்றில் இருக்கும் கொப்பூழ்த் தாமரை போன்றது. அந்தப் பூவின் இதழ்கள் போன்றவை அதன் தெருக்கள். இதழின் நடுவே இருக்கும் பொகுட்டு போன்றது சொக்கநாதர் கோயில். பூவிலிருக்கும் மகரந்தத் தாது போன்றவர் அங்கு வாழும் தமிழ்க்குடி மக்கள். இவ்வூருக்கு வந்து பரிசில் பெற்றுச் செல்பவர்கள் தாமரையில் தேன் உண்ணும் பறவைகள் போன்றவர்கள். பூவில் பிறந்தவன் பிரமன். பிரமன் நாவில் பிறந்தவை நான்மறை வேதங்கள். இந்த வேதம் ஓதும் ஒலியைக் கேட்டு மதுரை மக்கள் துயில் எழுவர். சேலன் வஞ்சியும், சோழன் கோழியும் (உறையூரும்) போல கோழி கூவித் துயிலெழ மாட்டார்கள்.

பாடல்சொல் பிரிப்புப் பதிவு
 
திருமால், கொப்பூழ், தாமரை, பிரமன் 
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும், சீர் ஊர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும் பொகுட்டு அனைத்தே, அண்ணல் கோயில்;
தாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள்;           5
தாது உண் பறவை அனையர், பரிசில் வாழ்நர்;
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழுதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்     10
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.

புறத்திரட்டில் நகர் என்னும் பகுதியில் உள்ளது
காலம்கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்

No comments:

Post a Comment