![]() |
| பித்தை தலை ஒப்பனை |
பாண்டியன் மக்களோடு சேர்ந்து வையைப் புனலில்
ஆடினான்.
1
நிலம் தெரியாமல் இருண்டு மழை பொழிந்த காலத்தில்
நாக மலர்களை அடித்துக்கொண்டு வையை வெள்ளம் மதுரைக்கு வந்தது.
2
நீர் அழகைக் காண விரும்பி, மாலை அணிந்துகொண்டு,
மகிழ்ச்சியுடன் மக்கள் ஒன்று திரண்டனர். ஒருவரை ஒருவர் முண்டிக்கொண்டு நின்றனர். வையைக்
கரையில் கடைத்தெருக்களும் அமைக்கப்பட்டன.
3
கையில் மாலையும் கண்ணியும் வைத்திருந்தனர்.
மணப்புகையும் புத்தாடைகளும் வைத்திருந்தனர். மகளிர் விரித்த கூந்தலாகவும், பித்தைக்கொண்டை
போட்டும் ஒப்பனை செய்துகொண்டிருந்தனர். தளிர் போன்ற இவர்கள் யானைமேல் சென்றனர். குதிரை,
வண்டி, தேர் ஆகியவற்றிலும் சென்றனர். நெருக்கமாச் சென்றனர். வண்டிக்கு மூடாக்குப் போட்டுக்கொண்டு
சென்றனர். ஊடலும், ஊடல் தணித்தலும், தணிதலும் நிகழ்ந்தன. ஆடல், பாடல், ஆர்த்தல், சிரித்தல்,
சிரித்துக்கொண்டே ஓடுதல், ஓடித் தளர்தல், உற்றாரைக் கூட்டத்தில் தேடுதல் என்று பல்வகைக்
களியாட்டங்கள் நிகழ்ந்தன. ஊர் மெச்சத் திரிபவர் யாரும் இல்லை. கற்றார், கல்லாதவர்,
கயவர், மக்களைப் பெற்றவர்கள்,, பெறாதவர்கள், அனைவரும் சென்றனர். கூடல் நகர அரசன் தேரில்
சென்றான்.
4
காதலர் தோளைத் தெப்பமாக்கிக்கொண்டு ஏறி ஆடினர்.
சிலர் மறைவிடம் சென்று ஆடினர். சிலர் அவர்களை எங்கே என்று தேடினர். துறையில் இவ்வாறு
மாறுபட்ட நிகழ்ச்சசிகளும் நடைபெற்றன. இவ்வாறு வையைத் துறை அகன்று கிடந்தது. ஒருவன்
அணிந்திருந்த மாலை ஒருத்தியின் தலையில் இருந்தது. அதனைக் கொடுத்துவிடு என்றாள் அவன்
மனைவி. இது அவனே எனக்குப் போட்டது தரமாட்டேன் என்றாள் அவள். அவன் நான் தரவில்லை என்றான்.
அப்படியென்றால் தண்ணீர் அடித்துக்கொண்டு வந்து என் தலையில் ஏறிவிட்டதா என்று அவள் வினவினாள்.
மனைவியும் காமக் கிழத்தியும் இவ்வாறு சண்டையிட்டுக்கொண்டனர். பின்னர் ஒருவாறு உணர்ந்து
“நீயும் இவனுக்குத் துணைவி” என்று மனைவி கூறி அமைதியுற்றாள்.
5
உயர்ந்த சிறப்பினை உடைய இந்தக் கூடல் நகரம்
பஞ்சவன் எனப் போற்றப்பபடும்
பாண்டியனுக்கு உரியது. இந்தக் கூடலில் பாயும் வையைப் புனலில் மணி போல் ஒளிறும் அழகும்,
மா நிற மேனியும், முறுவலிக்கும் முத்துப் பற்களும், பவளம் போன்ற வாயையும் கொண்டு கற்புஅறத்தைக்
கடைப்பிடிக்கும் பெண்கள் தம் தாலிமணி அணிந்த உரிமை மைந்தரோடு விளையாட விளையாடத் தணியாத
இன்பம் தருவது வையைப் புனல்.
6
ஏதோ ஒரு ஆணின் பூமாலையோடு யாரோ ஒரு பெண்ணின்
பூமாலை சேர்ந்தடித்துச் செல்வதைப் பார்த்தால் கணவனுக்கு உரிமைக்காரி ஊடல் கொள்ளமாட்டாளா?
7
ஈ பாயும் நறாக்கள் கலந்து பாய்கிறது என்று
பார்ப்பார் இதில் நீராடவில்லை. மைந்தர், மகளிர் மணத்துகள்கள் கலந்து வருகிறது என்று
அந்தணர் நீரைத் தொடவில்லை. நீரில் தேன் கலந்து வருவதால் வழுவழுப்பாக இருக்கிறது என்று
ஐயர் வையை நீரில் வாய் கொப்பளிக்கவில்லை.
8
(இது அராகம் என்னும் முடுகியல்
பகுதி) விரைவால் நுரை கலந்து
பாய்கிறது. கடலிலும், கரையிலும், மதகிலும், நுரை புகுமளவுக்கு வையைப் புனல் பாய்கிறது.
9
இயல்தேர்ப் பொருப்பன் பண்டியனின் ’திருமருத முன்துறை’ (மருதத்துறை = மதுரை) இது.
மலை போன்ற யானை மேல் மகளிரும் சேர்ந்து அமர்ந்துகொண்டு இங்குச் செல்வர். யாழில் மருதப்பண்
பாடுவர். பாடிப் பாடி, ஆடி ஆடி, ஊடி ஊடி, கூடிக் கூடி, தேடித் தேடி, அடிபட்டு அடிபட்டு,
சூடிச் சூடி, தொழுது தொழுது, மகளிரோடு மைந்தர் சேர்ந்து நீராடினர். குணக்குன்றச் சான்றவர்கள்
உண்டு மகிழ்ந்தனர்.
10
சந்தனம், தார்மாலை. கோதை, சுண்ணப்பொடி, கூந்தலில்
நழுவிய பூ முதலானவை மிதப்பபதால் நீரே தெரியவில்லை. மழைநீர் வற்றும் குளத்தில் நிற்கும்
கலங்கல் நீர் போல நிற்காமல் கலவை நீர் ஓடிக்கொண்டே இருந்தது.
11
அரசன் மாறன் யானைமேல் வந்து மதுரை மக்களோடு சேர்ந்து நீராடுவதானது,
ஆயிரம் கண் படைத்த இந்திரன் கங்கை வானாற்றில் நீராடுவது போல் இருந்தது.
பாடல் – சொல் பிரிப்புப்
பதிவு
2. வையை
1
மா நிலம் தோன்றாமை
மலி பெயல் தலைஇ,
ஏம நீர் எழில்
வானம் இகுத்தரும் பொழுதினான்,
நாக நீள் மணி
வரை நறு மலர் பல
விரைஇ,
காமரு வையை கடுகின்றே,
கூடல்.
2
'நீர் அணி கொண்டன்று
வையை' என விரும்பி, 5
தார் அணி கொண்ட
உவகை தலைக்கூடி,
ஊர் அணி கோலம்
ஒருவர் ஒருவரின்
சேர் அணி கொண்டு,
நிறம் ஒன்று வெவ்வேறு
நீர் அணி கொண்ட
நிறை அணி அங்காடி,
ஏர் அணி கொண்டார்,
இயல். 10
3
கை புனை தாரினர்,
கண்ணியர்,
ஐ எனும் ஆவியர்,
ஆடையர்,
நெய் அணி கூந்தலர்,
பித்தையர்,
மெய் அணி யானை
மிசையராய், ஒய்யெனத்
தங்காச் சிறப்பின் தளிர்
இயலார் செல்ல; 15
பொங்கு புரவிப்புடைப் போவோரும்,
பொங்கு சீர்
வையமும் தேரும் அமைப்போரும்;
எவ் வாயும்
பொய்யாம் போய் என்னாப் புடை
கூட்டிப் போவநர்
மெய்யாப்பு மெய் ஆர மூடுவார்;
வையத்துக்கு
ஊடுவார்; ஊடல் ஒழிப்பார்; உணர்குவார்: 20
ஆடுவார், பாடுவார்; ஆர்ப்பார், நகுவார்; நக்கு
ஓடுவார்; ஓடித் தளர்வார்; போய்,
உற்றவரைத்
தேடுவார்; ஊர்க்குத் திரிவார் இலராகி-
கற்றாரும், கல்லாதவரும், கயவரும்,
பெற்றாரும், பெற்றாற் பிழையாத பெண்டிரும், 25
பொற்றேரான் தானும், பொலம் புரிசைக்
கூடலும்,
முற்றின்று-வையைத் துறை.
4
துறை ஆடும் காதலர்
தோள் புணையாக,
மறை ஆடுவாரை அறியார்
மயங்கி,
பிறை ஏர் நுதலியர்
எல்லாரும் தம் முன் 30
நிகழும் நிகழ்ச்சி எம்பால்
என்று, ஆங்கே,
இகல் பல செல்வம்
விளைத்தவட் கண்டு, இப்பால்,
அகல் அல்கும் வையைத்
துறை.
காதலான் மார்பின் கமழ்
தார், புனல் வாங்கி,
ஏதிலாள் கூந்தலிடைக் கண்டு,
'மற்று அது 35
தா தா' என்றாளுக்கு,
'தானே புறன் தந்து
வேய்தந்தது'. 'என்னை? விளைந்தமை மற்று
அது
நோதலே செய்யேன், நுணங்கு
இழையாய்! இச் செவ்வி
போதல் உண்டாம்கொல்? அறிந்து
புனல் புணர்த்தது!
ஓஒ! பெரிதும் வியப்பு. 40
கயத் தக்க பூப்
பெய்த காமக் கிழமை
நயத் தகு நல்லாளைக்
கூடுமா கூடும்
முயக்குக்கு, செவ்வி முலையும் முயக்கத்து
நீரும் அவட்குத் துணை;
கண்ணின் நீர் விட்டோய்!
நீயும் அவட்குத் துணை. 45
5
பணிவு இல் உயர்
சிறப்பின் பஞ்சவன் கூடல்,
மணி எழில், மா
மேனி, முத்த முறுவல்,
அணி பவளச் செவ்
வாய், அறம் காவற் பெண்டிர்
மணி அணிந்த தம்
உரிமை மைந்தரோடு ஆடித்
தணிவின்று, வையைப் புனல். 50
6
'புனலூடு போவது ஓர்
பூ மாலை கொண்டை,
எனலூழ் வகை எய்திற்று'
என்று ஏற்றுக்கொண்ட
புனலூடு நாடு அறியப்
பூ மாலை அப்பி,
நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும்
கனல்புடன்,
கூடாமுன், ஊடல் கொடிய திறம்
கூடினால், 55
ஊடாளோ? ஊர்த்து அலர்
வந்து ஊர்ந்து.
என ஆங்கு-
7
'ஈப் பாய் அடு
நறாக் கொண்டது, இவ் யாறு' எனப்
பார்ப்பார் ஒழிந்தார், படிவு.
'மைந்தர் மகளிர் மண
விரை தூவிற்று' என்று, 60
அந்தணர் தோயலர், ஆறு.
'வையை தேம் மேவ
வழுவழுப்பு உற்றென'
ஐயர், வாய்பூசுறார், ஆறு.
8
விரைபு இரை விரை
நுரை கரை அழிபு இழிபு
ஊர ஊர்தரும் புனல்,
கரையொடு கடலிடை வரையொடு
கடலிடை நிரைநிரை நீர் தரு நுரை, 65
நுரையுடன் மதகுதொறு இழிதரு புனல் கரை
புரளிய செலும்மறி கடல்,
புகும் அளவுஅளவு இயல்
இசை சிறை தணிவின்று,வெள்ள
மிகை.
9
வரை பல புரை
உயர் கயிறு அணி பயில்
தொழில்
மணி அணி யானைமிசை,
மைந்தரும் மடவாரும்,
நிரைநிரை குழீஇயினர் உடன் சென்று, 70
குரு மணி யானை
இயல் தேர்ப் பொருநன்
திருமருத முன்துறை முற்றம் குறுகி,
தெரி மருதம் பாடுப,
பிணி கொள் யாழ்ப் பாணர்.
பாடிப் பாடி, பாய்புனல்
ஆடி ஆடி, அருளியவர் 75
ஊடி ஊடி, உணர்த்தப்
புகன்று
கூடிக் கூடி, மகிழ்பு
மகிழ்பு,
தேடித் தேடி, சிதைபு
சிதைபு,
சூடிச் சூடி, தொழுது
தொழுது,
மழுபொடு நின்ற மலி
புனல் வையை 80
விழு தகை நல்லாரும்
மைந்தரும் ஆடி,
இமிழ்வது போன்றது, இந் நீர்-குணக்குச்
சான்றீர்!
முழுவதும் மிச்சிலா உண்டு.
10
சாந்தும், கமழ் தாரும், கோதையும்,
சுண்ணமும்,
கூந்தலும் பித்தையும் சோர்ந்தன 85
பூவினும், அல்லால், சிறிதானும் நீர் நிறம்
தான் தோன்றாது-இவ்
வையை ஆறு.
மழை நீர் அறு
குளத்து வாய்பூசி ஆடும்
கழு நீர மஞ்சனக்
குங்குமக் கலங்கல்
வழி நீர்; விழு
நீர அன்று-வையை. 90
11
வெரு வரு கொல்
யானை வீங்கு தோள் மாறன்,
உரு கெழு கூடலவரோடு,
வையை
வரு புனல் ஆடிய
தன்மை பொருவுங்கால்-
இரு முந்நீர் வையம்
படித்து என்னை? யான் ஊர்க்கு
ஒரு நிலையும் ஆற்ற
இயையா! அரு மரபின், 95
அந்தர வான் யாற்று,
ஆயிரம் கண்ணினான்
இந்திரன் ஆடும் தகைத்து.
இப் பாடல், தொல்காப்பியம்,
செய்யுள் இயல், சூ. 118 இளம்பூரணர்
உரையில் கண்டது.
காலம் – கி. பி.
மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்

No comments:
Post a Comment