Pages

Monday, 8 August 2016

பரிபாடல் திரட்டு Paripadal Annex 1

இருந்தையூர் | திருவாதவூர்
இருந்தையூர் என்று திருமால் நெறியினரும், திவாதவூர் என்று சிவனடியார்களும் போற்றும் ஊரில் குடிகொண்டுள்ள திருமாலை இந்தப் பாடல் போற்றுகிறது.
1
வானம் பொழிந்த நீர் மருந்தாகப் பயன்படும் வையைத் துறையில், மதுரை மக்கள் வழிபடுமாறு இருந்தையூர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் செல்வ! (திருமாலே) உன் திருவடியில் தலை வைத்துத் தொழுகின்றோம்.
2
  • வேங்கை, மரா, மகிழம், பிண்டி (அசோகு) முதலான மரங்கள் ஓங்கி உன் மலை மணிநிறம் கொண்டு விளங்குவது ஒருபுறம். 
  • தாமரைப் பூவின் இதழ்களை வண்டுகள் திறக்க, மீன்கள் விளையாடும் குளம் ஒருபுறம். 
  • திருவிழா ஓசையை எதிரொலிக்குமாறு உழுவோரும், நாற்று நடுவோரும் பாடும் பாடலிசையைக் கொண்ட வயல்கள் ஒருபுறம். 
  • அறத்தொடு வேதம் பாடி அந்தணர் வேள்வி செய்யும் ஊர் ஒருபுறம். 
  • உண்ணுவன, பூசுவன, பூண்பன, உடுப்பன, குளிப்பன, அணியும் மணி-பொன், கடலில் விளைந்தவை, பலகாரம், காருகம் (கலைத்தொழில் பொருள்கள், "கட்டும் நூண்வினைக் காருகர் இருக்கை" - சிலப்பதிகாரம்) முதலான பொருள்களை விற்கும் வணிகர்களின் தெருக்கள் ஒருபக்கம். 
  • நன்செய் புன்செய் உழவர்கள் வாழும் தெருக்கள் ஒருபுறம். 
இப்படி உன் கோயிலைச் சுற்றி நலம் நாடும் நல்லவர்கள் வாழ்கின்றனர்.
3
  • வளையல் (வண்டு) ஒலி கேட்டு வண்டுகள் பறக்கும். கதவுத் தாழ்ப்பாள் போலக் காதில் குழை மாட்டப்பட்டிருக்கும். இப்படி அணிந்துகொண்டு மின்னும் நெற்றியர், 
  • ஏறிவரும் யானை போன்று செம்மாப்பு உடையவர், 
  • தலையில் சடை போட்டுக்கொண்டு புருவத்தை வளைக்கும் மகளிர், 
  • அறிவால் புகழ் பெற்றவர்கள், 
  • அழகில் நாணம் காட்டுவோர், 
  • காளைபோல் நடப்பவர், 
  • நடத்தையில் மடமை பட்டோர், 
  • கடலலை போல் கருமுடி கொண்டவர், 
  • நிலா வெளிச்சம் போல் நரைமுடி கொண்டவர், 
  • சமையல்காரர், 
  • குடைபிடிப்போர், 
  • சாம்பிராணி போடுவோர், 
  • பூ போடுவோர் 
முதலானோர் இடைவிடாமல் வந்து உன் திருவடி தொழுகின்றனர். நீ எருது-மலைச் செல்வன்.
4
உன் மலையில் வண்டும் தும்பியும் யாழிசை பாடும். யானை இடி முழக்கம் செய்யும். அருகில் முழவு முழக்கம் செய்யும். மகளிரும் ஆடவரும் கூடிப் பாடுவர், ஆடுவர். சூடும் நறவம்-பூவால் மாலை தொடுப்பர். சூடாத நறவங்கள்ளைப் பருகிக் காமத்தைப் பெருக்கிக்கொள்வர். பூ முடிக்கும் நாகர் வாழும் ஊரில் இப்படியெல்லாம் நிகழும்.
5
(இது அராகம் என்னும் முடுகிசைப் பாடல் பகுதி. அடி முடியுமிடத்தில் அன்றிப் பிற இடங்களில் நெடில் எழுத்து வராமல் அமையப் பாடுவது முடுகியல்) 
  • மணிநிறக் கைஒலி, பொலியும் கூந்தல், வண்டு மொய்ப்பது போன்ற கண் ஆகியவற்றைக் கொண்ட மயில் போன்ற மகளிர் ஆண்யானை போன்ற ஆடவரோடு சேர்ந்து வந்து வழிபட்டனர். 
  • அல்லல் அகலவேண்டும், பிணி நீங்கவேண்டும், நல்லவை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். 
பழம் பெருமை வாய்ந்த குன்றத்தில் குளக்கரையில் அமர்ந்திருப்பவனாகிய உன் கோயிலில் இவ்வாறு வழுபட்டனர்.
6
பால்கடலில் அமிழ்தம் கடைந்தனர். 
  • மலை மத்துக்கோல், ஆமையாகப் பிறப்பெடுத்த திருமால் தலை கடையும் மத்து என ஆக்கிக்கொண்டு மீன் விளையாடும் கடலில் நிறுத்தினர். 
  • சிறந்த புகழ் பூண்ட தேவர், மக்கள் என்ற இரு திறத்தாரும் இருபக்கம் கயிற்றைப் பிடித்துக் கடைந்தனர். 
  • கடலை ஒரு தோழம் (ஓர் எண்ணிக்கை) காலம் இடைவிடாமல் கடைந்தனர்.

7
  • தங்களுக்குள் இருக்கும் பகையை மறந்துவிட்டுக் கடைந்தனர். 
  • நிலம் போல வலியைப் பொறுத்துக்கொண்டு கடைந்தனர். 
  • சிவன் திரிபுரம் எரித்தபோது பயன்படுத்திய இமயமலை வில்லில் பூட்டிய நாண் ஆயிரம் தலை கொண்ட உன் ஆதிசேசன் பாம்பு. 
அந்தப் பாம்பினை வாழ்த்தி, உன்னை வழிபட்டுகின்றோம். அருள் புரிவாயாக.

பாடல்சொல் பிரிப்புப் பதிவு
1. திருமால்
1
வான் ஆர் எழிலி மழை வளம் நந்த,
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து,
நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வ! நின்  5
திருந்துஅடி தலை உறப் பரவுதும், தொழுது.
2
ஒருசார்-அணி மலர் வேங்கை, மராஅ, மகிழம்,
பிணி நெகிழ் பிண்டி, நிவந்து சேர்பு ஓங்கி,
மணி நிறம் கொண்ட மலை.
ஒருசார்-தண் நறுந் தாமரைப் பூவின் இடைஇடை 10
வண்ண வரி இதழ்ப் போதின்வாய் வண்டு ஆர்ப்ப,
விண் வீற்றிருக்கும் கய மீன் விரி தகையின்
கண் வீற்றிருக்கும் கயம்.
ஒருசார்-சாறுகொள் ஓதத்து இசையொடு மாறு உற்று
உழவின் ஓதை பயின்று, அறிவு இழந்து   15
திரிநரும், ஆர்த்து நடுநரும், ஈண்டி,
திரு நயத்தக்க வயல்.
ஒருசார்-அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி,
விறல் புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித்
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி,     20
அறத்தின் திரியா, பதி.
ஆங்கு ஒருசார்-உண்ணுவ, பூசுவ, பூண்ப, உடுப்பவை,
மண்ணுவ, மணி பொன் மலைய, கடல,
பண்ணியம், மாசு அறு பயம் தரு காருகப்
புண்ணிய வணிகர் புனை மறுகு ஒருசார்:       25
விளைவதை வினை எவன் மென் புல வன் புலக்
களமர் உழவர் கடி மறுகு பிறசார்:
ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம்
இயல் கொள நண்ணியவை.
3
வண்டு பொரேரென எழ,   30
வண்டு பொரேரென எழும்;
கடிப் புகு வேரிக் கதவமிற் றோட்டி,
கடிப்பு இகு காதில் கனம் குழை தொடர-
மிளிர் மின் வாய்ந்த விளங்கு ஒளி நுதலார்
ஊர் களிற்றன்ன செம்மலோரும்,          35
வாய் இருள் பனிச்சை வரி சிலை புருவத்து
ஒளி இழை ஒதுங்கிய ஒண் நுதலோரும்,
புலத்தோடு அளவிய புகழ் அணிந்தோரும்,
நலத்தோடு அளவிய நாண் அணிந்தோரும்,
விடையோடு இகலிய விறல் நடையோரும்,             40
நடை மடம் மேவிய நாண் அணிந்தோரும்,
கடல் நிரை திரையின் கரு நரையோரும்,
சுடர் மதிக் கதிரெனத் தூ நரையோரும்-
மடையர், குடையர், புகையர், பூ ஏந்தி,
இடை ஒழிவு இன்றி, அடியுறையார் ஈண்டி, 45
விளைந்தார் வினையின் விழுப் பயன் துய்க்கும்
துளங்கா விழுச் சீர்த் துறக்கம் புரையும்-
இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின்
வரை கெழு செல்வன் நகர்.
4
வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப, 50
விண்ட கட கரி மேகமொடு அதிர,
தண்டா அருவியொடு இரு முழவு ஆர்ப்ப,
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடிப்
புரிவுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற,
சூடு நறவொடு தாமம் முகிழ் விரிய,   55
சூடா நறவொடு காமம் விரும்ப,
இனைய பிறவும், இவை போல்வனவும்,
அனையவை எல்லாம் இயையும்-புனை இழைப்
பூ முடி நாகர் நகர்.
5
மணி மருள் தகை வகை நெறி செறி ஒலி பொலி அவிர் நிமிர் புகழ் கூந்தல்,               60
பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி மது மகிழ்பு அரி மலர் மகிழ் உண்கண், வாணுதலோர்               61
மணி மயில் தொழில் எழில் இகல் மலி திகழ் பிறிது இகழ் கடுங் கடாக் களிற்று அண்ணலவரோடு,               62
அணி மிக வந்து இறைஞ்ச, அல் இகப்ப, பிணி நீங்க, நல்லவை எல்லாம் இயைதரும்-தொல் சீர் வரை வாய் தழுவிய கல் சேர் கிடக்கைக் குளவாய் அமர்ந்தான் நகர்.                63
6
திகழ் ஒளி முந்நீர் கடைந்த அக் கால், வெற்புத்   64
திகழ்பு எழ வாங்கித் தம் சீர்ச் சிரத்து ஏற்றி,    65
மகர மறி கடல் வைத்து நிறுத்து,
புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்
அமுது கடைய, இரு வயின் நாண் ஆகி,
மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க,
உகாஅ வலியின் ஒரு தோழம் காலம்     70
அறாஅது அணிந்தாரும் தாம்;
7
மிகாஅ மறலிய மே வலி எல்லாம்
புகாஅ, எதிர் பூண்டாரும் தாம்;
மணி புரை மா மலை ஞாறிய ஞாலம்
அணிபோல் பொறுத்தாரும் தாஅம்; பணிவு இல் சீர்ச்         75
செல் விடைப் பாகன் திரிபுரம் செற்றுழி,
கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகித்
தொல் புகழ் தந்தாரும் தாம்.
அணங்குடை அருந் தலை ஆயிரம் விரித்த
கணங்கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி,           80
நல் அடி ஏத்தி நிற் பரவுதும்-
எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே.

மேற்கோள் | தொல்காப்பியம் செய்யுளியல் சூத்திம் 121 பேராசிரியர் உரை, நச்சினார்கினியார் உரை              
காலம்கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்

No comments:

Post a Comment