Pages

Thursday, 4 August 2016

குற்றாலக் குறவஞ்சி Kutralakkuravanji 6

வசந்தவல்லி பந்தாடல் juggling balls
 
இவளைப் போல வசந்தவல்லி பந்தடித்தாள்
வித்தகர் திரிகூடத்தில் வெளிவந்த வசந்த வல்லி
தத்துறு விளையாட் டாலோ தடமுலைப் பணைப்பி னாலோ
நத்தணி கரங்கள் சேப்ப நாலடி முன்னே ஓங்கிப்
பத்தடி பின்னே வாங்கிப் பந்தடி பயில்கின் றாளே. 1

திரிகூடம் ஊரில் பிறந்த வசந்தவல்லி பந்துகள் கீழே விழாமல் தட்டும்போது அவளது கைகள் சிவந்தன. தத்தித் தத்தி விளையாடுவதாலோ, பருத்துக் கிடக்கும் முலையினாலோ பத்து அடிக்கும்போது முன்னும் பின்னும் சென்று பந்தடித்தாள்.

செயம் செயம் என்றாட  - இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட – இரு
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று
குழைந்து குழைந்தாட – மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே 2

அவள் அழகு சவுந்தரி. அவளது பந்தடி ஓசை வெற்றி வெற்றி என்று முழங்கிற்று. இடை முறிந்துவிடும் என்று சிலம்பு புலம்பிற்று. காலணி தண்டையும் புலம்பிற்று. பகையை வென்றுவிட்டோம் என்று முலைகள் குழைந்து குலுங்கின.

பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை
புரண்டு புரண்டாடக் – குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு
மதன் சிலை வண்டோட – இனி
இங்கிது கண்டுல கென்படும் என்படும்
என்றிடை திண்டாட
பங்கய மங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே 3

காதுக் குழையும், கண்ணுக் கெண்டையும் புரண்டு புரண்டு ஆடின. குழல் மேகத்தில் இருந்த வண்டுகள் கலைந்தோடுவது கண்டு காமன் வில்லுப் பூவில் இருந்த வண்டுகளும் ஓடின. இதனைப் பார்க்கும் உலகம் என்ன பாடு படுமோ என்று இடை திண்டாடியது. 

சூடக முன்கையில் வால்வளை கண்டிரு
தோள்வளை நின்றாடப் – புனை
பாடக முஞ்சிறு பாதமும் அங்கொரு
பாவனை கொண்டாட – நய
நாடகம் ஆடிய தோகை மயிலென
நன்னகர் வீதியிலே – அணி
ஆடக வல்லி வசந்த வொய்யாரி
அடர்ந்துபந் தாடினளே 4

சூடகம் அணிந்த முன்கையில் வளையல் ஆடுவதைப் பார்த்துத் தோள் வளையல்கள் ஆடின. பாத மேலணி பாடகமும் பாதமும் அவற்றிற்குப் பாவனை பிடித்தன. வீதியில் நாடகம் ஆடும் மயில் போல் அவள் ஆடினாள்.  

இந்திரை யோவிவள் சுந்தரி யோதெய்வ
ரம்பையோ மோகினியோ – மன
முந்திய தோவிழி முந்திய தோகர
முந்தி தோவெனவே – உயர்
சந்திர சூடர் குறும்பல வீசுரர்
சங்கணி வீதியிலே – மணிப்
பைந்தொடி நாரி வசந்தஒய்
யாரிபொற் பந்து கொண்டாடினளே 5

இந்திராணியோ, சுந்தரியோ, ரம்பையோ, மோகினியோ, முந்திக்கொண்டது மனமோ கண்ணோ என்னும்படி அந்த ஒய்யாரி தெருவில் பந்து ஆடினாள்.  

கொந்தடிப் பூங்குழல் சரிய நன்னகரில் வசந்தவல்லி கொடிய காமன்
முந்தடி பிந்தடி யிடைபோய் மூன்றடி நாலடி நடந்து முடிகி மாதர்
சந்தடியில் திருகி யிடசாரி வலசாரி சுற்றிச் சகிமார் சூழப்
பந்தடிக்கும் பாவனையைப் பார்க்க அயன் ஆயிரம் கண் படைத்திலானே 6

குழலில் சூடியிருந்த பூங்ககொத்துகள் சரிந்தன. காமன் முன்னும் பின்னும் மூன்றடி நாலடி என்று நடந்து காமத்தை முடுகிவிட்டான். மாதர் சந்தடியில், தோழிமார் சுழ்ந்துவர, வலாரி இடசாரி என்று ஓடி இவள் பந்தடிப்பதைப் பார்க்க எனக்குப் பிரமன் ஆயிரம் கண் படைக்கவில்லையே என்று மக்கள் வருந்தினர்.  

பந்தடித்தனளே வசந்த சுந்தரி - விந்தையாகவே – பந்தடித்தனளே

மந்தர முலைகள் ஏசலாட
மகரக் குழைகள் ஊச லாடச்
சுந்தர விழிகள் பூசலாடச்
தொங்கத் தொங்கத் தொங்கத் தொம் மெனப் - பந்தடித்தனளே 

பொன்னின் ஒளிவில் வந்து தாவிய
மின்னின் ஒளிவு போலவே
சொன் னயத்தினை நாடி நாடித்
தோழிய ருடன் கூடிக் கூடி
நன் னகர்த்திரி கூடம் பாடி
நகுர் தத்தி குர்தத்த குர்தத்தொம் எனப் – பந்தடித்தனளே

முன்பகுதி 5
அடுத்த பகுதி 7

திருக்குற்றாலக் குறவஞ்சி இசைப்பாடல்களுடன் பாடிய நாடகத் தமிழ் நூல்.
இதனைப் பாடியவர் மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர்
இவர் காலம் 17 ஆம் நூற்றாண்டு.

No comments:

Post a Comment