கரிகாலன் இடையாறு
கார்த்திகை விளக்கு விழா
கார்த்திகைத் திருவிழாவின் போதாவது அவர்
வந்துவிடவேண்டும் என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
1
தோழி, வாழ்க! இரவில் வரும் கனவும் இனிதாக உள்ளது. நனவில் நம் இல்லத்தில் தோன்றும் பல்லி படுதல் போன்ற புள்-அறிகுறிகளும் இனிதாக அமைகின்றன.
2
உழவுத்தொழில் முடிந்து கலப்பைகள் தூங்குகின்றன. வானத்தில் மழை இறங்கும் காலும் இல்லை. முழுநிலா தன் உடம்பிலுள்ள களங்கத்தைக் காட்டிக்கொண்டு வானத்தில் கார்த்திகை மீனை நெருங்கும் நள்ளிரவு நேரம்.
3
தெருவெங்கிலும் விளக்கு வைக்கின்றனர். மாலைத் தோரணம் கட்டுகின்றனர். பழமை மேம்பாடு கொண்ட நம் ஊரில் எல்லாரும் கார்த்திகை விழாக் கொண்டாடுகின்றனர். அவர்களுடன் சேர்ந்து நாமும் விழாக் கொண்டாட அவர் வரவேண்டும்.
4
புதிதாகத் திருமணமான பெண் நீராடிய பின் உலர்த்திய தன் கூந்தலில் புது மலர்களைச் சூட்டிக்கொள்கிறாள். அவள் உண்பதற்காக மணமனையில் சமைக்கப்படுகிறது. கல் அடுப்பு கூட்டிப் பாலை உலையில் ஏற்றுகின்றனர். கூந்தலில் கூழைமுடி போட்டுக்கொண்டு மகளிர் வளையல் குலுங்க அவல் இடிக்கின்றனர். நெல்லங்கதிர்களைக் கொண்டுவந்து புதுநெல்லைப் போட்டு அவல் இடிக்கின்றனர். உலக்கையால் இடிக்கின்றனர். அருகில் வாழை மர மடலில் இருந்த குருகு இடிக்கும் உலக்கை ஒலி கேட்டுப் பறந்து ஓடுகிறது. உயர்ந்தோங்கிய மாமரத்தில் அமர்ந்து தன் சிறகுகளைக் கோதிக்கொள்கிறது.
5
இது இடையாறு என்னும் ஊரில் நிகழ்வு. இதன் அரசன் கரிகாலன் என்று பெரும்பெயர் பெற்றவன். பல போர்களில் வெற்றி கண்டவன். தன் ஊர்மக்கள் குடிபெயர்ந்து செல்லாமல் பேணியவன்.
6
கரிகாலன் ஆட்சியில் இடையாறு ஊரில் இருந்த வளம் போலச் செல்வம் கொண்டுவர வேண்டும் என்று அவர் திருவேங்கட மலைக்காட்டைத் தாண்டிச் சென்றுள்ளார். வேங்கட மலைக் காட்டில் வேங்கை மலர்கள் புலியின் தோற்றம் போலப் பூத்துக் கிடக்கும். அந்தப் பூக்கள் உதிரும்படி, குரங்குக் கலை (ஆண்) துள்ளி விளையாடும். இந்தக் காட்டைத் தாண்டிச் சென்றுள்ள அவர் இன்று கார்த்திகை விழாக் கொண்டாட வந்துவிடுவார் என்று நினைக்கிறேன் என்கிறாள் தலைவி.
பாடல் சொல் பிரிப்புப்
பதிவு
திணை, பாலை
1
அம்ம வாழி, தோழி! கைம்மிகக்
கனவும் கங்குல்தோறு இனிய; நனவும்
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின;
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது
2
உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி, 5
மழை கால் நீங்கிய மாக விசும்பில்
குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து,
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்;
3
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி,
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய 10
விழவு உடன் அயர, வருகதில் அம்ம!
4
துவரப் புலர்ந்து தூ மலர் கஞலி,
தகரம் நாறும் தண் நறுங் கதுப்பின்
புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப்
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ, 15
கூழைக் கூந்தற் குறுந் தொடி மகளிர்
பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து,
பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக்
கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது; 20
நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும்
5
செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால்
வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன
6
நல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப்
புலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை 25
நரந்த நறும் பூ நாள் மலர் உதிர,
கலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை,
தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய
வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே.
''பிரிவிடை ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக்
கிழத்தி உரைத்தது.
நக்கீரர் பாடியது
கி.மு. காலத்துப் பாடல்
No comments:
Post a Comment