Pages

Tuesday, 2 August 2016

குற்றாலக் குறவஞ்சி Kutralakkuravanji 5

வசந்தவல்லி
மூக்கில்
முத்துப் பில்லாக்கு
அணிந்திருந்தாள் 
குற்றாலநாதர் உலாவைக் காணவந்த வசந்தவல்லியின் அழகு

இருண்ட மேகஞ்சுற்றிச்
சுருண்டு சுழி எறியும்
கொண்டையாள் – குழை
ஏறி யாடி நெஞ்சைச்
சூறையாடும் விழிக்
கெண்டையாள்
திருந்து பூமுருக்கின்
அரும்புபோ லிருக்கும்
இதழினாள் - வரிச்
சிலையைப் போல்வளைந்து
பிறையைப்போல் இலங்கும்
நுதலினாள் 1


இருண்ட கூந்தல் மேகம் சுற்றிச் சுருண்டு இருக்கும் நீர்ச்சுழியில் பார்த்தவர் நெஞ்சைச் சூறையாடும் விழியாகிய கெண்டைமீனைக் கொண்டவள். முருக்கம்பூ அரும்பு போன்றிருக்கும் சிவந்த இதழினாள். வளைந்த வில்லைப் போலவும், பிறையைப் போலவும் இருக்கும் நெற்றியாள். 

அரம்பை தேசவில்லும்
விரும்பி ஆசை சொல்லும்
புருவத்தாள் – பிறர்
அறிவை மயக்குமொரு
கருவம் இருக்கும் மங்கைப்
பருவத்தாள்
கரும்பு போலினித்து
மருந்துபோல் வடித்த
சொல்லினாள்  கடல்
கத்துந் திரைகொழித்த
முத்து நிரை பதித்த
பல்லினாள் 2

இவள் புருவத்தைப் பார்த்து வானவில்லும் ஆசையாகப் பேசும். இவளது மங்கைப் பருவத்தில் பிறர் அறிவை மநக்கும் ஒரு கர்வம் இருக்கும். சொல் கரும்பு போல் இனிக்கும். மருந்து போல் நோய் தீர்க்கும். பல் கடலில் எடுத்த முத்துப் போல் இருக்கும்

பல்லின் அழகைஎட்டிப்
பார்க்கும் மூக்கிலொரு
முத்தினாள்
பழகும் வடிவுதங்கி
அழகு குடிகொளும்
முகத்தினாள்
வில்லுப் பணிபுனைந்து
வல்லிக் கமுகைவென்ற
கழுத்தினாள் - சகம்
விலையிட் டெழுதியின்ப
நிலையிட் டெழுதுந் தொய்யில்
எழுத்தினாள் 3

மூக்கில் தொங்கும் அவள் பில்லாக்கு  முத்து அவள் பல்லழகை எட்டிப் பார்க்கும். முகம் பழகக்கூடிய அழகினைப் பெற்றிருக்கும். பாக்குமரம் வளைந்திருப்பது போன்ற கழுத்து. தோளில் எழுதப்பட்டிருக்கும் தொய்யில் இன்பம் தீட்டிய எழுத்து.

கல்லுப் பதித்ததங்கச்
செல்லக் கடகம்இட்ட
செங்கையாள் – எங்கும்
கச்சுக் கிடக்கினும்தித்
திச்சுக் கிடக்குமிரு
கொங்கையாள்
ஒல்லுங் கருத்தர்மனக்
கல்லுஞ் கழிக்குமெழில்
உந்தியாள் – மீதில்
ஒழுங்கு கொண்டுளத்தை
விழுங்குஞ் சிறிய ரோம
புந்தியாள் 4

கையில் கல்லுப் பதித்த கடகம் அணிந்திருந்தாள். கச்சு மூடிய தித்திக்கும் முலை கொண்டவள்.

துடிக்குள்அடங்கியொரு
பிடிக்குள் அடங்குஞ்சின்ன
இடையினாள் – காமத்
துட்டன் அரண்மனைக்குக்
கட்டும் கதலிவாழைத்
தொடையினாள்
அடுக்கு வன்னச்சேலை
எடுத்து நெறிபிடித்த
உடையினாள் – மட
அன்ன நடையிலொரு
சின்ன நடைபயிலும்
நடையினாள் 5

உடுக்குப்  போன்று இடுக்கி, ஒரு கைப்பிடிக்குள் அடங்கும் இடையினைக் கொண்டவள். கொடியவன் அரண்மனை வாயிலில் கட்டும் வாழைமரம் போன்ற தொடை கொண்டவள். கொசகம் மடித்துச் சேலை உடுத்தியிருந்தாள். அன்னத்தின் நடையிலும் ஒரு சின்ன நடை போட்டு அவள் நடந்து வந்தாள்.
மூக்கில் தொங்கும் அவள் பில்லாக்கு  முத்து அவள் பல்லழகை எட்டிப் பார்க்கும்.

வெடித்த கடலமுதை எடுத்து
எடுத்து வடிவுசெய்த
மேனியாள் – ஒரு
வீமப் பாகம்பெற்ற
காமப் பாலுக்கொத்த
சீனியாள்
பிடித்த சுகந்தவல்லிக்
கொடிபோல் வசந்தவல்லி
பெருக்கமே – சத்தி
பீட வாசர்திரி
கூட ராசர் சித்தம்
உருக்குமே 6

மூக்கில் தொங்கும் அவள் பில்லாக்கு  முத்து அவள் பல்லழகை எட்டிப் பார்க்கும். சுகம் தரும் வல்லிக்கொடி போன்றவள், இவள் அழகு இறைவன் திரிகூட ராசரையே உருக்கும் தன்மை வாய்ந்தது.


அடுத்த பகுதி

திருக்குற்றாலக் குறவஞ்சி இசைப்பாடல்களுடன் பாடிய நாடகத் தமிழ் நூல்.
இதனைப் பாடியவர் மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர்
இவர் காலம் 17 ஆம் நூற்றாண்டு.

No comments:

Post a Comment