Pages

Tuesday 2 August 2016

குற்றாலக் குறவஞ்சி Kutralakkuravanji 4

சிங்கார மோகனப் பெண்ணாள்
வசந்தவல்லி வருகிறாள்

நன்னகர்ப் பெருமான் முன்போய் நாணமும் கலையும் தோற்ற
கன்னியர் சநுப்போற் காட்டிக் காமவேள் கலகம் மூட்டிப்
பொன்னணித் திலகம் தீட்டிப் பூமலர் மாலை சூட்டி
வன்னமோ கினியைக் காட்டி வசந்தமோ கினிவந் தாளே

உலா வரும் பெருமானைக் கண்ட மகளிர் நாணத்தையும் உடுத்தியிருந்த ஆடையையும் தொலைத்துவிட்டுக் காட்டும் இடையைப் போல காமவேள் வந்தான். அவன் காதல் மூட்டும் கலகக்காரன். அவன் உருவில் வசந்தவல்லியாகிய வன்ன மோகினி  வந்தாள்.  

வங்காரப் பூஷணம் பூட்டித் – திலகந்தீட்டி
மாரனைக்கண் ணாலே மருட்டிச்
சிங்கார மோகனப் பெண்ணாள் – வசந்தவல்லி
தேவரம்பை போலவே வந்தாள்       1

வசந்தவல்லி பொன்னணிகள் பூட்டிக்கொண்டிருந்தாள். காமனைக் கண்ணழகால் கலக்கினாள். அந்தச் சிங்கார மோகனப்பெண் தேவருலக ரம்பை (அரம்பை=வாழைத்தண்டு) போல வந்தாள்.   

கண்ணுக்குக் கண்ணிணை சொல்லத்  - திரிகூடக்
கண்ணுதலைப் பார்வையால் வெல்லப்
பெண்ணுக்குப் பெண்ம யங்கவே - வசந்தவல்லி
பேடையன்னம் போலவே வந்தாள்      2

அவள் கண்ணுக்கு இணை அவள் கண்தான். பெண்ணையே பெண் பார்த்து மயங்கும்படி அவள் வந்தாள்.

கையாரச் சூடகம்இட்டு  - மின்னாரை வெல்லக்
கண்ணிலொரு நாடகம்இட்டு
ஒய்யார மாக நடந்து – வசந்தவல்லி
ஓவியத்தைப் போலவே வந்தாள்      3

கையிலே சூடகம். கண்ணிலே நாடகம். ஒய்யார நடை. ஓவியம் போல வந்தாள்.

சல்லாப மாது லீலர் – குற்றால நாதர்
சங்கநெடு வீதிதனிலே
உல்லாச மாது ரதிபோல் – வசந்தவல்லி
உருவசியும் நாணவே வந்தாள்      4

உமையோடு சல்லாபம் செய்பவர் குற்றாலநாதர். மக்கள் சங்கமித்திருக்கும் வீதியில் உலா வருகிறார். காண வசந்தவல்லி வந்தாள். உல்லாச மாது ரதி போல் வந்தாள். ஊர்வசி நாணும்படி வந்தாள்.
திருக்குற்றாலக் குறவஞ்சி இசைப்பாடல்களுடன் பாடிய நாடகத் தமிழ் நூல்.
இதனைப் பாடியவர் மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர்
இவர் காலம் 17 ஆம் நூற்றாண்டு.


No comments:

Post a Comment