நெல்லின் நேரே வெண்கல் உப்பு
உப்பு விற்கும் உமணப் பெண்ணை விரும்பும்
தலைவன் சொல்கிறான்.
1
பரதவர் கடலில் வேட்டையாடுவர். உமணர் உப்பங்கழி வயல்களை உழாமலேயே உப்பு விளைவிப்பர். அதனை கொள்வோரை நாடிக் குன்றுகளைக் கடந்து செல்வர். உப்பு வண்டியை இழுத்துச் செல்லும் மாடுகளைக் கதழ் ஓசை செய்து ஓட்டும் உமணரின் காதல் மடமகள் அவள்.
2
அவள் வளையல் ஒலி எழும்ப, கை வீசிக்கொண்டு சேரியில் உப்பு விற்றாள். உப்பின் அளவுக்கு நெல் தரவேண்டும் என்றாள். “நெல்லும் உப்பும் நிகர்” என்று கூவினாள்.
3
அவள் கூவுதலைக் கேட்டு வீட்டு நாய் குரைத்தது. அதனை அச்சத்துடன் கண்ணால் உருட்டிப் பார்த்தாள். அவள் கண்களைப் பார்த்த நான் ஆசை நோயில் அடி பட்டுக் கிடக்கிறேன். கிடைப்பாளா என்று பெருமூச்சு விடுகிறேன். அவளது தந்தை உப்பேற்றி வந்த வண்டியைப் பழஞ்சேற்றில் இழுக்கும் எருது போலப் பெருமூச்சு வாங்குகிறேன். அந்தப் பெருமூச்சு புனவன் மரங்களை வெட்டி புனக்காட்டைக் கொளுத்தும் புகை போல வெளிவருகிறது. நோய் தீரவேண்டுமே!
பாடல் சொல் பிரிப்புப்
பதிவு
திணை, நெய்தல்
1
பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,
என்றூழ் விடர குன்றம் போகும்
கதழ் கோல் உமணர் காதல் மடமகள் 5
2
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி,
''நெல்லின் நேரே வெண் கல் உப்பு'' எனச்
சேரி விலைமாறு கூறலின், மனைய
3
விளி அறி ஞமலி குரைப்ப, வெரீஇய
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு, 10
இதை முயல் புனவன் புகை நிழல் கடுக்கும்
மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு
எவ்வம் தீர வாங்கும் தந்தை
கை பூண் பகட்டின் வருந்தி,
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே. 15
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன்
பாங்கற்கு உரைத்தது.
அம்மூவனார் பாடல்
கி.மு. காலத்துப் பாடல்
No comments:
Post a Comment