Pages

Saturday 13 August 2016

அகநானூறு Agananuru 167

கறையான் ஏறிய மடம்


இன்று இவளோடு இன்பப் படுக்கை. 
நாளை கறையான் மடத்தில் உறக்கம். 
என் நிலை இப்படி இருக்கிறதே என்று தலைவன் நினைக்கிறான்.


1
அவள் அல்குல் பகுதியில் (இடுப்பில்) மணியணி அணிந்திருக்கிறாள். பச்சை நிற வயிரங்களும் அந்த மணியணியில் பதிக்கப்பட்டுள்ளன. அவை ஒளி வீசுகின்றன. அவள் திருமகள் போன்ற மாமை நிறம் கொண்டவள். வேலைப்பாடு அமைந்த பூமெத்தை. வானளாவிய மாளிகை. இன்று இங்கு இதில் இவளோடு இன்பமாகப் பொழுது போகிறது. நாளை எங்கே இருப்பேன்?
2
கண் மூடாமல் புலம்பிக்கொண்டு படுத்திருப்பேனோ? நெஞ்சே! நீதான் சொல்ல வேண்டும். 

வணிகக் கூட்டத்தைக் (சாத்து) கொன்று பங்கு போட்டுக்கொண்டு வழியில் கூடி உண்ணும் ஆடவர்கள் அங்கே இருப்பார்கள். 
அவர்கள் வில்லும் அம்பும் கையில் வைத்துக்கொண்டு திரிவர். 
அவர்கள் யானைக்கும் பகைவர். 

அவர்களுக்குப் பயந்து யானை ஓடும். 
பீர்க்கங்கொடி படர்ந்திருக்கும் பாழ் நிலத்தில் ஓடும். 
அங்கிருக்கும் முருங்கைத் தழைகளை மேயும். 

அருகில் இருக்கும் செங்கல் (இட்டிகை) சுவரில் தன் முதுகைச் (வெரிந்) சொரிந்துகொள்ளும். 
யானை தன் முதுகைச் சொரியும்போது அந்த வீட்டின் விட்டம் கீழே விழும். 
அப்போது அங்கு வாழும் மணிப்புறா ஓடும்.
 
இப்படி மாடி வீடுகள் பாழ் பட்டுக் கிடக்கும். 
அந்த வீட்டில் கடவுள் உருவம் எழுதியிருப்பர். 
அந்த உருவத்தில் இருக்கும் கடவுளும் போய்விடும். 

கடவுள் வெளியேறிவிட்டதால் அந்த வீட்டுத் திண்ணை மெழுகப்படாமல் இருக்கும். 

அந்தத் திண்ணையில் நாய் தன் குட்டிகளுக்குப் பால் கொடுத்துக்கொண்டிருக்கும். 

அந்த வீட்டில் கலை வேலைப்பாடுகள் குயின்று (உளியால் தோண்டி) அமைத்த நிலைக்கால் போன்ற பொருள்கள் இருக்கும். 

அந்த வேலைப்பாட்டுக் கூர்மைகள் சிதையும்படி, கறையான் ஏறியிருக்கும். 

போரில் யாரும் தாக்காத அந்தக் கறையான் கூரை (இறை) வீடுதான் நாளை நான் தங்கும் மடமாக (பொதியில்) இருக்கும்.   

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
வயங்கு மணி பொருத வகைஅமை வனப்பின்
பசுங் காழ் அல்குல் மாஅயோளொடு
வினை வனப்பு எய்திய புனை பூஞ் சேக்கை,
விண் பொரு நெடு நகர்த் தங்கி, இன்றே
இனிது உடன் கழிந்தன்று மன்னே; நாளைப்   5
2
பொருந்தாக் கண்ணேம் புலம்பு வந்து உறுதரச்
சேக்குவம் கொல்லோ, நெஞ்சே! சாத்து எறிந்து
அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக்
கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ,
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ், 10
முருங்கை மேய்ந்த பெருங் கை யானை
வெரிந் ஓங்கு சிறு புறம் உரிஞ, ஒல்கி
இட்டிகை நெடுஞ் சுவர் விட்டம் வீழ்ந்தென,
மணிப் புறாத் துறந்த மரம் சோர் மாடத்து
எழுது அணி கடவுள் போகலின், புல்லென்று  15
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப்
பால் நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில்,
குயில் காழ் சிதைய மண்டி, அயில் வாய்க்
கூர் முகச் சிதலை வேய்ந்த
போர் மடி நல் இறைப் பொதியிலானே? 20

தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது.
கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்
ஆங்கில  விளக்கம்

வயங்கு மணி பொருத 
வகைஅமை வனப்பின்
பசுங் காழ் அல்குல்


No comments:

Post a Comment