விளையாடாத பொம்மை
அவர் விட்டுவிட்டுப் போன பின்னர், பொம்மலாட்டப்
பொம்மை ஆடாமல் கிடப்பது போல் வாழ்வதென்பது என்னால் முடியாது. தலைவி தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.
1
அரியல் என்பது பனைமரத்தில் விளைந்து அரித்தெடுக்கும் கள். அரியலை விற்கும் பெண் தான் அமர்ந்திருக்கும் பக்கத்தில் (அல்கில்) பருகும் பனங்குடை (பகுவாய்ப் பாளைக் குவிமுலை) வைத்திருப்பாள். அந்தப் பனங்குடையில் ஊற்றிக் கள்ளைத் தருவாள். அரி நிறத்தில் இருக்கும் அந்தக் கள்ளை வாங்கி, வேண்டிய அளவு பருகிவிட்டுச் செங்கண் ஆடவர் ஆரவாரத்துடன் போருக்குச் செல்வர்.
2
இவர்களின் வில்லம்பில் பட்டுப் பலர் வீழ்வர். அப்படி வீழ்ந்தவர்கள் கிடக்கும் பதுக்கை இடங்கள் என்னவர் செல்லும் வழியில் இருக்கும். கோங்க மரத்தடியில் இருக்கும். அதிரல் கொடி அந்த மரத்தில் ஏறிப் படர்ந்திருக்கும். பொழுது புலரும் வைகறை வேளையில், காட்டு யானைகள் அந்த அதிரல் கொடிகளை இழுத்துக் கவளமாகச் சுருட்டித் தின்னும். இப்படி அச்சம் தரும் வழியில் தனியே செல்கிறார். செல்வதாகச் சொல்கிறார். அப்படித்தானே தோழி.
3
போர் முடிந்த பின்னர் சும்மாக் கிடக்கும் மன்றம். அந்த மன்றத்தில் ஒரு பொம்மை (பாவை) கிடக்கிறது. அது விளையாட்டுக் காட்டிய பின்னர் சும்மாக் கிடக்கும் பொம்மலாட்டப் பொம்மை (வினையழி பாவை). மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் பொலிவிழந்து கிடக்கும் பொம்மை. தலைவன் இல்லாதபோது இந்தப் பொம்மை போலச் சிலர் வாழ்வர். அவர்களைப் போல என்னால் வாழ இயலாது. இறந்துபடுவேன், என்கிறாள் தலைவி.
பாடல் சொல் பிரிப்புப்
பதிவு
திணை, பாலை
1
அரியற் பெண்டிர் அல்கிற் கொண்ட
பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த
அரி நிறக் கலுழி ஆர மாந்தி,
செரு வேட்டு, சிலைக்கும் செங் கண் ஆடவர்,
2
வில் இட வீழ்ந்தோர் பதுக்கை, கோங்கின் 5
எல்லி மலர்ந்த பைங் கொடி அதிரல்
பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி,
கான யானை கவளம் கொள்ளும்
அஞ்சு வரு நெறியிடைத் தமியர் செல்மார்
நெஞ்சு உண மொழிப மன்னே தோழி! 10
3
முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து,
பெயல் உற நெகிழ்ந்து, வெயில் உறச் சாஅய்,
வினை அழி பாவையின் உலறி,
மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே!
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
வேம்பற்றூர்க் குமரனார் பாடல்
கி.மு. காலத்துப் பாடல்
No comments:
Post a Comment