Pages

Monday, 8 August 2016

அகநானூறு Agananuru 153

செவிலி துயரம்


1
செவிலித்தாய் சொல்கிறாள். நான் நொந்துகொண்டிருக்கிறேன். என் உள்ளமும் நொந்துகொண்டிருக்கிறது. இனிமையாகப் பேசும் தோழிமாருடன் சேர்ந்து விளையாடும்போது பந்து செல்லும் இடங்களுக்குச் செல்லும்போதே என் மகள் உடம்பு வெந்து நோகிறது (உடம்பு வலிக்கிறது) என்பாள். இனி என்ன ஆனாள்? இரக்கம் கொள்ளத்தக்கவள் ஆனாளே.
2
அந்தக் கொடுமைக்காரன் அவள் மார்பை வளைத்துத் தழுவினான். இனிமையாகப் பேசினான். அவன் பேச்சு வலையில் பிடிபட்டாள். என் கண் அழுது துன்புறுவதைப் பற்றி அவள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
3
வெயில் ‘ஒய்’ என்று சுட்டு வருத்தும் காடு. வேனில் காலத்துக் கொடிய காடு. பெருங்ககாற்று வீசும்போது மூங்கில்கள் உரசி அங்குத் தீப் பற்றிக்கொள்ளும். மூங்கிலின் கணுக்கள் உடைந்து தீப் பொறிகள் தெறித்து விழும். உச்சி மலையே பற்றி எரியும். எரிந்த நிலமும் பயன்றறுக் கிடக்கும். அந்த நிலம் காலடி வைத்து நடப்பதற்கு உகந்தது அன்று. அதில் இவளால் நடந்துசெல்ல முடியுமா?
4
காற்றடித்து உதிர்ந்த கோங்க மலர்கள் நிலத்தில் கிடக்கும். இரவில் வானத்தில் தோன்றும் மீன்கள் போலவும் கையால் விட்டெறிந்த தீச்சுடர் போலவும் அந்த மலர்கள் தோன்றும்.
 
(தினைப்புனம் காப்போர் இரவில் யானைகளை ஓட்டுவதற்கு எரியும் தீப் பந்துகளை வீசுவர். அந்தத் தீப்பந்துகள் கிடப்பது போல் தோன்றும்)
 
இந்த வழியில் அவளால் அடிவைத்துச் செல்ல முடியுமா? இது செவிலியின் துயரம்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
நோகோ யானே; நோதகும் உள்ளம்;
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ,
பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்து நனி,
வெம்பும்மன், அளியள்தானே இனியே,
2
வன்கணாளன் மார்புஉற வளைஇ, 5
இன் சொற் பிணிப்ப நம்பி, நம் கண்
உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்யெனத்
3
தெறு கதிர் உலைஇய வேனில் வெங் காட்டு,
உறு வளி ஒலி கழைக் கண் உறுபு தீண்டலின்,
பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரிப்  10
பைது அறு சிமையப் பயம் நீங்கு ஆர் இடை
நல் அடிக்கு அமைந்தஅல்ல; மெல் இயல்
வல்லுநள்கொல்லோ தானே எல்லி
4
ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி
மீனொடு பொலிந்த வானின் தோன்றி,   15
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர்க் கோங்கின்
கால் உறக் கழன்ற கள் கமழ் புது மலர்
கை விடு சுடரின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே?

மகட் போக்கிய செவிலித்தாய் சொற்றது.
சேரமான் இளங்குட்டுவன் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்
கோங்கம் மலர்
உதிர்ந்து கிடக்கும் பூக்கள் இரவில்
விண்மீன் போலக் கிடக்குமாம்
யானையை ஓட்ட எறிந்த
தீப்பந்து போல் கிடக்குமாம்

No comments:

Post a Comment