மாந்தரம் பொறையன் கடுங்கோ
நன்னன் பாழி - காளி கோயில்
மிஞிலி அதிகனைக் கொன்று காளிக்குப் பலியூட்டினான்
அவள் என்னைத் தழுவினாள்.
1
நெஞ்சே நீ வாழ்க! இனி மகிழ்ச்சியாடு இரு. உன் காதலி உன்னைத் தழுவினாள் அல்லவா? ஆதலின் மகிழ்ச்சியோடு இரு. கடுங்கோ வேந்தனைப் பாடிச் சென்றவர் கொள்கலம் போல நிறைவோடு இரு.
மாந்தம் பொறையன் கடுங்கோ ஒரு சேர வேந்தன். பெரும் படை கொண்டவன். போர்கள் பல வென்றவன். கொடையால் கவிந்திருக்கும் கையை உடையவன். இலவ மலர் போன்ற சிவந்த நாவால் மேன்மக்கள் அவனைப் புகழ்வார்கள். அப்படிப் புகழும் மேன்மக்களுக்கு இடையே அவன் விளங்குவான்.
2
நன்னன் முறை தவறாமல் ஆண்டு பெற்ற யானையை உடையவன். அவன் தலைநகர் பாழி. அந்தப் பாழி நகரில் பலி ஊட்டும் மரபினை உடையது பேய்க் கோயில் (கொற்றவைக் கோயில்). மிஞிலி என்பவன் அதற்குப் பலி கொடுப்பதாக வாக்களித்தான்.
3
அதிகன் பறவைகளைப் பாதுகாத்துவந்த ஒரு வள்ளல். அதனால் புகழ் பெற்றவன் அதிகன். இந்த அதிகனை மிஞிலி கொன்றான். வாக்களித்தபடி பேய்த் தெய்வத்துக்கு அதிகனைப் பலி கொடுத்துவிட்டு வாளைச் சுழற்றிக்கொண்டு ஆடினான். அச்சுறுத்தும் அந்த ஆட்டத்தைப் பலரும் அறிந்திருந்தனர். அதுபோலப் பலருக்கும் தன் கள்ளக் காதல் தெரிந்துவிடக் கூடாது என்று எண்ணிக்கொண்டு வந்து அவள் தழுவினாள்.
4
அவள் மெல்ல மெல்ல வந்தாள். தண்ணீர் திரண்டிருப்பது போன்ற தோற்றம் கொண்ட வெள்ளி வளையல்களை அணிந்த முன்கைகளை ஆட்டிக்கொண்டு வந்தாள். ஆற்றுமணலின் குறைவு அறல் அறலாகப் படிந்து கிடப்பது போன்று நெளிநெளியான கூந்தல் அசைய வந்தாள். பூண்டிருக்கும் அணிகலனோடு வந்தாள்.
5
கடல் வாழ் மீன்களே உறங்கும் நள்ளிரவில் வந்தாள். கண்ணைக் கவரும் ஓவியப் பாவை நடை கற்றுக்கொள்வது போல நடந்துவந்தாள்.
6
மழை அலை தாக்கிய பூ மாலை பொன்னிறத் தாதுப் பொடிகளைக் கொட்டுவது போன்று என்னைத் தழுவினாள். என் உடலில் வளையல் தழும்புகள் பதியும்படி முயங்கினாள். யாழ் நரம்பு பேசுவது போல இனிமையாகப் பேசிக்கொண்டே தழுவினாள். ஆகவே நெஞ்சமே மகிழ்ந்திரு.
பாடல் சொல் பிரிப்புப்
பதிவு
திணை, குறிஞ்சி
1
இலமலர் அன்ன அம் செந் நாவின்
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த,
பலர் மேந் தோன்றிய கவி கை வள்ளல்
நிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம்
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற 5
குறையோர் கொள்கலம் போல, நன்றும்
உவ இனி வாழிய, நெஞ்சே! காதலி
2
முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற
கறை அடி யானை நன்னன் பாழி,
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க் 10
கூட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி
3
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்
வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து
ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின்,
பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பய, 15
4
நீர்த் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச்
சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கை
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல்,
இடன் இல் சிறு புறத்து இழையொடு துயல்வர,
5
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து, 20
உருவு கிளர் ஓவினைப் பொலிந்த பாவை
இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து,
6
பெயல் அலைக் கலங்கிய மலைப் பூங் கோதை
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப,
தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்; 25
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே.
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது.
பரணர் பாடல்
கி.மு. காலத்துப் பாடல்
No comments:
Post a Comment