Pages

Friday, 29 July 2016

பரிபாடல் Paripadal 19

திருப்பரங்குன்றத்தில் அக்காலத்திலையே கதைவிளக்க ஓவியங்கள் இருந்தன. 
1
முருகன் நிலமலையிலேயே வானுலகில் வாழும் பேற்றினை வழங்குபவன். நம் அறிவின்-எல்லை அறியாத புகழில் பூத்துக்கிடப்பவன். கடப்பம்பூவை விரும்புபவன். அருமுனி அகத்தியன் மரபில் வந்த தமிழை அறிவில் சிறந்த ஆன்றோர் நுகர்ந்தது போல் பெருநிலத்தில் உள்ளவர் அனைவரும் நுகர வேண்டும் என்று தந்தவன். தமிழ் தந்த முருகா! உன் திருப்பரங்குன்றத்து இயல்பழகே உன் திருமண விழாக் கோலந்தான். துறக்கத்தவள் தெய்வானையோடு உனக்கு நடைபெறும் திருமண விழாக்கோலந்தான். உன் மயில்-கொடி அழகில் துறக்கத்தவளோடு போட்டியிட்டுக்கொண்டு பறக்கிறது.
2
அறிவிலும், ஆண்மைப் போரிலும் தோல்வி காணாத ஊர் கூடல் என்று போற்றப்படும் மதுரை. அங்குள்ள மக்கள் கலவியில் மகிழ்ந்த இரவுக் காலம் தீர்ந்த வைகறை வேளையில் திருப்பரங்குன்றம் நோக்கிப் புறப்பட்டனர். பெருமளவில் அறம் செய்தவர் அதன் பயனைத் துய்ப்பதற்காக, சிறந்தோர் வாழும் உலகுக்குச் செல்வது போலப் புறப்பட்டுச் சென்றனர். பண்டங்களைத் துணியில் கட்டி உரியில் மாட்டி எடுத்துக்கொண்டு சென்றனர். குதிரையிலும் தேரிலும் சென்றனர். அவர்கள் அணிந்திருந்த மாலை இருளை விலக்கி ஒளி வீசியது. குன்றத்துக்கும் கூடலுக்கும் இடைப்பட்ட இடைப்பட்ட மணல்வெளி எங்கும் பூ-மாலை கிடப்பது போல மக்கள்-மாலை கிடக்குமாறு யாத்திரை சென்றனர்.
3
அறிவில் மாட்சிமை எய்தியவன் அரசன் வழுதி. பகலில் சூரியனும் இரவில் விண்மீன்களும் சூழ்ந்துவரும் மேரு மலை போலப் படைகள் சூழ்ந்துவரப் புறப்பட்டான். மயிலே எண்ணிப்பார்க்கும் அழகு கொண்ட அரசியோடு புறப்பட்டான். கடமை உணர்ந்து பணியாற்றும் கண்ணாகிய காவலருடன் புறப்பட்டான். சூர் மகள் வாழும் உன் குன்றின் மேல் ஏறினான். வலம் வந்தான். நிலாவைத் தோளிலே அணிந்த படைவீரர்களுடன் வலம்வந்தான். பாடிக்கொண்டே வலம்வந்தான். மகிழ்ச்சி பொங்க வலம்வந்தான். நாடும் நகரமும் புடைசூழ வலம்வந்தான். யானைமீதிருக்கும் நெடியோனே! உன் திருமண நகரம் பற்றி இனிச் சில கூறுகின்றேன்.
4
குருகு பெயர் கொண்ட குன்றத்தை எறிந்த வேலை உடைய முருக! உன் குன்றத்தின் அடிவாரத்தில் இருக்கும் நிலத்தைப் பற்றிச் சில சொல்கிறேன். அரசனின் யானைகளைக் கட்டிவைத்த மரங்ககளை யானைகள் ஆட்டும். அந்த யானைகளைக் கொண்டு துண்டாடிக் கிடக்கும் மரங்களை அசைத்து இடம் மாற்றுவர். குதிரையிலும், தேரிலும் சிலர் வருவர். யானைகளுக்குக் கரும்புக் கவளங்களைத் தருவர். இதனால் உன் குன்றத்தின் அடிநிலம் அரசனின் போர்ப்பாசறை போலக் காணப்பட்டது.
கௌதமன் அகலிகை கதை ஓவியம்
5
சிலர் குரங்குகுப் பலகாரம் கொடுத்தனர். சிலர் கரிய முகம் கொண்ட முசுக் குரங்குகளுக்குக் கரும்பு கொடுத்தனர். சிலர் தெய்வப்-பிரமம் என்னும் வீணையை மீட்டினர். சிலர் கைவிரல்களால் தடவிக் குழல் ஊதினர். சிலர் யாழில் இசை கூட்டினர். சிலர் வேள்வியின் சிறப்பினைப் பாராட்டினர். சிலரின் கூரம் என்னும் இசைக்கருவியின் நரம்பு கொம்பு போல் ஒலித்தது. சிலர் சூரியனும் சந்திரனும் தோன்றும் காட்சி கொண்ட புடைப்போவியங்களைக் கண்டு ஆழ்ந்திருந்தனர். நுட்பம் தெரிந்த சிலர் அங்குத் தீட்டப்பட்டிருந்த ஓவியக் காட்சியில் இவன் காமன், இவள் இரதி எனக் காட்டினர், சிலர் இவர்களைப் பற்றி வினவ, சிலர் இவர்களது கதையை விளக்கினர். சிலர் இவன் இந்திரன், இது பூனை, இவள் அகலிகை, இவன் கௌதமன், இது கௌதமன் சினத்தால் கல்லாகிய சிலை, என்றெல்லாம் காட்டிக் கதையைக் கூறினர். இன்ன பல  ஓவியங்கள் எழுத்து நிலை மண்டபத்தில் இருந்தன. அவற்றை நெருங்கி வந்தவர்கள் சுட்டிக்காட்டினர். சிலர் விளக்கம் கூறி அறிவுறுத்தினர். இவை திருப்பரங்குன்றத்து குகையில் வடிவமைக்கப்பட்டிருந்த சோபன (அழகு) நிலைகள். இது ஆசை கொள்ளச் செய்யும் மருகனின் மாடத்துப் பக்கம் ஆகும்.
6
ஒரு பேதைப் பெண் பெற்றோரைப் பிரிந்து குகைக்குள் சென்றாள். திரும்பிவர வழி தெரியவில்லை. நல்லவர்கள் காப்பாற்ற வேண்டும் என்று “ஏஎ ஓஒ” என்று கூச்சலிட்டாள். குகையும் “ஏஎ ஓஒ” என்று எதிரொலித்தது. அந்த எதிரொலியைப் பெற்றோர் அழைக்கும் ஒலி என்று நம்பி எதிரொலிக்கும் இடமெல்லாம் சென்று கூவினாள். இப்படிக் கூவும் மடமையைக் கேட்டு மக்கள் மகிழுமிடம் கொண்டது இந்தக் குன்று.
7
மரத்தில் பூத்த மலர்கள் சுனையில் பூத்திருக்கும் மலர்களிலும் இலைகளிலும் உதிர்ந்தன. மரப்பூவோடு தோன்றும் தாமரை போன்ற சுனைப்பூ ஐந்தலை நாகம் போல் தோன்றிற்று. பூ கிடக்கும் தாமரை போன்ற இலை அந்தப் பாம்பின் குட்டி போல் தோன்றிற்று. இளமகளிர் இவ்வாறு கண்டு மகிழ்ந்தனர்.
8
பசும்பிடி மலர் இளந் தளிர்களுடனும், ஆம்பல் மலர் விரிந்த வாயுடனும், காந்தள் மலர் கைவிரல் போலவும், எருவை மலர் மணக்கும் மடலுடனும், வேங்கை மலர் எரியும் தீ போலவும், தோன்றி மலர் உருவ அழகுடனும், நறவம் மலர் நீண்ட காம்புகளுடனும், கோங்கம் மலர் பருவம் தோன்றா நிலையிலும், இலவம் மலர் பகைவர் போல் சிவந்த நிலையிலும், தனித்தனியேயும், கோத்துக்கொண்டும், பின்னிக்கொண்டும் மலை எங்கிலும் மீன் பூத்த வானம் போல் பூத்துக் கிடந்தன.
9
வழிபடுவோர் முருகப் பெருமான் யானையின் நெற்றியில் குங்குமம் வைப்பர். தண்ணீர் ஊற்றுவர். விசிறிகளைக் காணிக்கையாகச் சார்த்துவர். பவள நிறம் பூங்கயிறு கட்டுவர். காம்புடைய பொற்குடை ஏற்றி வைப்பர். அங்கு நடக்கும் வேள்வியைப் பார்க்க பின்னிய கூந்தலுடன் பூப்பெய்திய புதுமகளிர் கன்னிமையோடு வருவர். உன் யானைக்கு ஊட்டிய மிச்சிலை உண்பர். இப்படி உண்ணுவதற்கு முன் அந்தக் கன்னிப் பெண்கள் மைந்தரைத் தழுவமாட்டார்கள்.
10
குறப்பெண் வள்ளியைக் கூடி மகிழ்ந்தவனே! நான் வாழ்த்துவதைக் கேள். உன் உடையும் மேனி நிறமும் சிவப்பு. உன் வேல் படையும், உருவமும் பவள நித்தில் இருக்கும். முகம் எழுஞாயிறு போல் இருக்கும். நீ மா மரத்தை வேரோடு வெட்டினாய். குன்றில் வேலைப் பாய்ச்சி உடைத்தாய். இந்த மலையில் கடம்ப மரத்தடியில் அமர்ந்திருக்கிறாய். நாங்கள் எங்களின் ஆயத்தாரோடு வந்து தொழுது உன்னை வாழ்த்துகிறோம். ஏற்றருள்க.

பாடல்சொல் பிரிப்புப் பதிவு
19. செவ்வேள்
1
நில வரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து,
புல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து,
'அரு முனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன்
இரு நிலத்தோரும் இயைக!' என, ஈத்த நின்
தண் பரங்குன்றத்து, இயல் அணி, நின் மருங்கு   5
சாறு கொள் துறக்கத்தவளொடு
மாறு கொள்வது போலும், மயிற்கொடி வதுவை.
2
புலத்தினும் போரினும் போர் தோலாக் கூடல்,
கலப்போடு இயைந்த இரவுத் தீர் எல்லை,
அறம் பெரிது ஆற்றி, அதன் பயன் கொண்மார்,          10
சிறந்தோர் உலகம் படருநர் போல,
உரி மாண் புனை கலம் ஒண் துகில் தாங்கி,
புரி மாண் புரவியர், போக்கு அமை தேரர்,
தெரி மலர்த் தாரர், தெரு இருள் சீப்ப, நின்
குன்றொடு கூடல் இடையெல்லாம் ஒன்றுபு     15
நேர் பூ நிறை பெய்து இரு நிலம் பூட்டிய
தார் போலும், மாலைத் தலை நிறையால் தண் மணல்
ஆர் வேலை யாத்திரை செல் யாறு.
3
சுடரொடு சூழ்வரு தாரகை மேருப்
புடை வரு சூழல் புலம் மாண் வழுதி 20
மட மயில் ஓரும் மனையவரோடும்,
கடன் அறி காரியக் கண்ணவரோடும் நின்
சூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல்
பாடு வலம் திரி பண்பின் பழ மதிச்
சூடி அசையும் சுவல்மிசைத் தானையின்,     25
பாடிய நாவின், பரந்த உவகையின்,
நாடும் நகரும் அடைய அடைந்தனைத்தே,
படு மணி யானை நெடியாய்! நீ மேய
கடி நகர் சூழ் நுவலுங்கால்.
4
தும்பி தொடர் கதுப்ப தும்பி தொடர் ஆட்டி,    30
வம்பு அணி பூங் கயிற்று வாங்கி, மரன் அசைப்பார்
வண் தார்ப் புரவி வழி நீங்க வாங்குவார்;
திண் தேர் வழியின் செல நிறுப்பார் கண்டக்
கரும்பு கவழம் மடுப்பார்; நிரந்து
பரி நிமிர் தானையான் பாசறை நீர்த்தே,           35
குருகு எறி வேலோய்! நின் குன்றக் கீழ் நின்ற
இடை நிலம்: யாம் ஏத்தும் ஆறு!
5
குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும்,
கரும்பு கருமுகக் கணக்கு அளிப்போரும்,
தெய்வப் பிரமம் செய்குவோரும்,           40
கை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும்,
யாழின் இளி குரல் சமம் கொள்வோரும்,
வேள்வியின் அழகு இயல் விளம்புவோரும்;
கூர நாண் குரல் கொம்மென ஒலிப்ப,
ஊழ் உற முரசின் ஒலி செய்வோரும்;                45
என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி
ஒன்றிய சுடர்நிலை உள்படுவோரும்,
'இரதி காமன், இவள் இவன்' எனாஅ,
விரகியர் வினவ, வினா இறுப்போரும்;
'இந்திரன், பூசை: இவள் அகலிகை; இவன்  50
சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது' என்று உரைசெய்வோரும்:
இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்,
துன்னுநர் சுட்டவும், சுட்டு அறிவுறுத்தவும்,
நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்கச் 55
சோபன நிலையது துணி பரங்குன்றத்து
மாஅல் மருகன் மாட மருங்கு.
6
பிறந்த தமரின் பெயர்ந்து, ஒரு பேதை,
பிறங்கல் இடைஇடைப் புக்குப் பிறழ்ந்து, 'யான்
வந்த நெறியும் மறந்தேன்; சிறந்தவர் 60
ஏஎ, ஓஒ!' என விளி ஏற்பிக்க,
'ஏஎ, ஓஒ!' என்று ஏலா அவ் விளி
அவ் இசை முழை ஏற்று அழைப்ப, அழைத்துழிச்
செல்குவள் ஆங்குத் தமர்க் காணாமை
மீட்சியும், கூஉக் கூஉ மேவும் மடமைத்தே 65
வாழ்த்து உவப்பான் குன்றின் வகை.
7
நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர்ச்
சினை போழ் பல்லவம் தீம் சுனை உதிர்ப்ப,
உதிர்த்த சுனையின் எடுத்த தலைய
அலர் முகிழ் உற, அவை கிடப்ப,              70
'தெரி மலர், நனை, உறுவ,
ஐந் தலை அவிர் பொறி அரவம்; மூத்த
மைந்தன்; அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு' என
ஆங்கு இள மகளிர் மருள
8
பசும்பிடி இள முகிழ், நெகிழ்ந்த வாய் ஆம்பல்,          75
கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள்,
எருவை நறுந் தோடு, எரி இணர் வேங்கை,
உருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம்,
பருவம் இல் கோங்கம், பகை மலர் இலவம்;
நிணந்தவை, கோத்தவை, நெய்தவை, தூக்க     80
மணந்தவை, போல, வரை மலை எல்லாம்
நிறைந்தும், உறழ்ந்தும், நிமிர்ந்தும், தொடர்ந்தும்;
விடியல் வியல் வானம் போலப் பொலியும்
நெடியாய்! நின் குன்றின்மிசை.
9
நின யானைச் சென்னி நிறம் குங்குமத்தால்     85
புனையா, பூ நீர் ஊட்டி, புனை கவரி சார்த்தா,
பொற் பவழப் பூங் காம்பின் பொற்குடை ஏற்றி,
மலிவுடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள்,
பல் மணம் மன்னு பின் இருங் கூந்தலர்,
கன்னிமை கனிந்த காலத்தார், நின்       90
கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில்
மறு அற்ற மைந்தர் தோள் எய்தார்; மணந்தார்
முறுவல் தலையளி எய்தார் நின் குன்றம்
குறுகிச் சிறப்பு உணாக்கால்.
10
குறப் பிணாக் கொடியைக் கூடியோய்! வாழ்த்துச் 95
சிறப்பு உணாக் கேட்டி செவி.
உடையும் ஒலியலும் செய்யை; மற்று ஆங்கே
படையும் பவழக் கொடி நிறம் கொள்ளும்;
உருவும் உருவத் தீ ஒத்தி; முகனும்
விரி கதிர் முற்றா விரி சுடர் ஒத்தி;                        100
எவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து,
தெவ்வுக் குன்றத்துத் திருந்து வேல் அழுத்தி,
அவ் வரை உடைத்தோய்! நீ இவ் வரை மருங்கில்
கடம்பு அமர் அணி நிலை பகர்ந்தேம்;
உடங்கு அமர் ஆயமொடு ஏத்தினம், தொழுதே!       105

கடவுள் வாழ்த்து
நப்பண்ணனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம் 

காலம்கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்

No comments:

Post a Comment