முதல் இரவுக் காட்சி
அக்காலத்தில் நடந்த ஒரு திருமண முறை இப்பாடலில்
சொல்லப்படுகிறது. மூடிக்கொண்டு நடக்கும் முதலிரவுக் காட்சி பதமாக வெளிப்படுத்தப்படுகிறது.
1
ஆட்டுக்கறிப் பிரியாணி அனைவருக்கும் விருந்தாகப் படைக்கப்பட்டது. வெண்ணிறச் சோற்றில் புழுங்கிய ஆட்டுக்கறியில் அதன் நெய் கனிந்தது. யாரையும் வரையறுக்காத கொடையாக அனைவருக்கும் அது வழங்கப்பட்டது. மேலோர்களைப் பேணி வழிபட்ட பின்னர் வழங்கபட்டது. பின்னர் மணப்பந்தல் (கடிநகர்) போட்டனர். அதற்குப் புள் (பறவைச் சகுனம்) நல்லதாக அமைந்த நேரம் தெரிந்தெடுக்கப்பட்டது. அன்று அவர்களுக்குத் திருமணம் நடந்த நாளில் வானம் பளிச்சென்று இருந்தது. திங்கள் உரோகினியைக் கூடும் முழுநிலா நாளாக இருந்தது. மணப்பந்தல் போட்ட பின்னர் பெரிய அளவினதாகிய முரசு முழக்கத்துடன் திருமணச் சடங்கு நடைபெற்றது. வந்திருந்த மூத்தவர்கள் கண் இமைக்காமல் மணமக்களைப் பார்த்த பின் விடைபெற்றுச் சென்றனர்.
2
வாகைத் தளிர், அறுகம்புல், மல்லிகை மொட்டு மூன்றும் சேர்த்து நூலில் கட்டிய மாலையை நான் (தலைவன்) அவளுக்கு (தலைவிக்கு)ச் சூட்டினேன்.
- கவட்டிலை - பூவுடன் கூடிய வாகை மரத்தில் இருக்கும் தளிர்
- பாவை – பாவை என்பது அறுகம்புல். பள்ள நிலத்தில் வளர்ந்த அறுகம்புல். பழைய கன்றுக்குட்டி மேய்ந்த அறுகம்புல். மேய்ந்த பின்னர் இடியுடன் கூடிய மழையில் தழைத்த அறுகம்புல்.
- முகை – மணக்கும் மல்லிகை மொட்டு
அவள் தூய புத்தாடை அணிந்திருந்தாள். மழை பொழிந்தது போல் ஈரத்துடன் பரப்பப்பட்ட மணலுடன் கூடிய மணப்பந்தல் போட்டிருந்தனர். இழையை (தாலியை)க் கட்டினேன். அப்போது அவளுக்குத் தோன்றிய வியர்வையை ஆற்றி, அவளுடைய பெற்றோர் அவளை எனக்குத் தந்தனர். முதல் இரவில் (தலைநாள்) தந்தனர்.
3
“யாரும் கரித்துக்கொட்ட முடியாத கற்பினை உடையவளே! என் உயிரோடு ஒன்றுபட்டுக் கிடப்பவளே! துவளாத புத்தாடையால் உடம்பு முழுவதையும் நீ போர்த்திக்கொண்டிருப்பதால் உடல் புழுங்கி உன் நெற்றியில் வியர்வை கொட்டுகிறது. உடல் காற்றாடட்டும், உன் இடையைத் திற” என்று சொல்லிக்கொண்டு அவள் ஆடையைக் களைந்தேன். அப்போது அவள் உறையிலிருந்து எடுத்த வாள் போல மின்னினாள். தன்னை மறைத்துக்கொள்ளத் தெரியவில்லை. ‘ஒய்’ என்று நாணினாள். என்னை வணங்கினாள். பருத்து மூடிப் பகையுடன் கிடந்த ஆம்பல் மலரானது தன் சிவந்த தன் இதழ்களைத் திறந்து, வண்டு தேனை உண்ணும் மலராக விரிவது போல, தன்னை வேய்ந்திருந்த கூந்தலுக்குள் அவள் தன்னை ஒளித்துக்கொண்டாள்.
பாடல் சொல் பிரிப்புப்
பதிவு
திணை – மருதம்
1
மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண்
சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி,
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கட்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து, 5
கடி நகர் புனைந்து, கடவுட் பேணி,
படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ,
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று,
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய,
2
மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை, 10
பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி,
தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி, 15
மழை பட்டன்ன மணல் மலி பந்தர்,
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி,
தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
3
''உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ, 20
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி
வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற'' என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென 25
நாணினள் இறைஞ்சியோளே பேணி,
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி,
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே.
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது.
விற்றூற்று மூதெயினனார் பாடல்
கி.மு. காலத்துப் பாடல்
அவள் மேனி உறையிலிருந்து எடுத்த வாள்.
ReplyDelete