![]() |
| திருப்பரங்குன்றம் |
வாழ்க்கையில் திளைத்து மகிழும் மக்கள் திருப்பரங்குன்ற
முருகன் துணைநிற்கவேண்டும் என்று வேண்டுகின்றனர்
1
சாமியாடி வேலன் தேன் தெறிக்கும் மலர், காதணி
குழை, இடையில் பூப்போட்ட ஆடை, அடிக்கும் மணி ஆகியவற்றோடு வருகிறான். இலைகளையும் உடுத்தியிருக்கிறான்.
மார்பில் சந்தனம் பூசியிருக்கிறான். முருகனுக்கு நடப்பட்ட காப்பு-மரத்தைப் பற்றிச்
சொல்லிப் பாடுகிறான். பல இசைக் கருவிகள் முழங்குகின்றன. விரிமலர்த் தேனால் திருப்பரங்குன்றம்
நனைந்துகொண்டிருக்கிறது. கோலாட்டம், குரவை ஒலி (கொளை),
மணப்பொருள், புகையும் பொருள், பறக்கும் கொடி ஆகியவை மாலை மாலையாக எங்கும் காணப்படுகின்றன.
இப்படி முருகனை வழிபடுவோர், மேலோர் வாழும் தேவர் உலகைக்கூட விரும்புவார்களா என்னும்படி
மகிழ்ந்திருந்தனர்.
2
ஒருபக்கம் பாணர் தரும் யாழிசை, ஒருபக்கம்
வண்டின் இசை, ஒருபக்கம் துளைகளில் எழும் குழலோசை, ஒருபக்கம் தும்பி இசை, ஒருபக்கம்
முழவின் இசை, ஒருபக்கம் அருவி கொட்டும் ஓசை, ஒருபக்கம் விறலியர் ஆட்டம், ஒருபக்கம்
வாடைக்காற்றில் கொடி ஆடும் ஆட்டம், ஒருபக்கம் பாடினி பாடும் பாலைப் பண்ணின் குரல் ஒருபக்கம்
மயில் ஆடும் காட்சி, – இப்படி எங்கும் நிறையும் குறையுமாகத் தோன்றும் காட்சிகள். எதிர்
முழக்கக் காட்சிகள். மாறுபட்டவரை வென்ற முருகன் குன்றத்தில் இவை நிகழ்ந்தன.
7 பண்ணின் இசை எப்படி இருக்கும் என்று இப்பாடலில் சுட்டப்பட்டுள்ளது. எந்த விலங்கினக் குரல் போல் இருக்கும் என்று உவமையால் சுட்டப்பட்டுள்ளது.
இளி - மயில், தவளை
விளரி -பசு
தாரம் - ஆடு
குரல் - வண்டு, கொக்கு
துத்தம் - கிளி, குயில்
கைக்கிளை - குதிரை
உளை - யானை
3
பாடல் பெற்ற மதுரைக்கும் பரங்குன்றுக்கும்
இடையில் மக்கள் மகிழ்ந்து திளைக்கின்றனர். மணக்கும் சந்தனத்தைப் பூசிக்கொண்டனர். அருகிலா,
சேய்மையிலா என்னும்படி ஊர் இடைவெளி இருந்தது. எதுவாயினும் அது மகிழ்ச்சி மிக்க நாடு.
மகளிரை மைந்தர் வணங்கும்போது மைந்தர் தலையிலிருந்த மலரும், மகளிர் மாலையிலிருந்த மலரும்
சோர்ந்து விழுந்தன. வாய்ச்சொல் வழுவாமல் செய்த வேள்விப் புகை, அகில் புகை மேலும் மேலும்
எழுந்து போய்த் தேவர்களின் இமைக்காத கண்களைத் தாக்கி இமைக்காத சூரியன் போல் ஆக்கிவிட்டன.
4
வளையல் அணிந்த கைகளுடன் மகளிர் தோளை வீசிக்கொண்டடு
சென்றனர். அவர்களின் தோள் மெத்தை ஆயிற்று. மகளிர், மைந்தர் மாலைகள் ஈர மாலைகள் ஆயின.
அவர்கள் பாய்ந்து பாய்ந்து தழுவி ஆடுதலானது சுனை மலரில் தேன் உண்ணும் வண்டின் நிலை
ஆயிற்று. திருபரங்குன்றம் இந்த நிலையினதாயிற்று.
5
அருவி பாயும் வயல்கள் கீழோர். அதன் மேல்
நடக்கும் மக்கள் மேலோர். மேலோர் மிதிப்பதால் கீழோர் சேறாயினர். தெய்வ விழா நடைபெற்றது.
திருந்தும் மக்களின் உறவு விழாவும் நடைபெற்றது. பரங்குன்று, கூடல், வையை ஆகிய மூன்றும்
விழாவால் தடுமாறின.
6
இப்படியெல்லாம் விளங்கும் முருகன் மயில்-கொடி
பிடித்துக்கொண்டு மயில்-ஊர்தியில் செல்பவன். இப்படிச் செல்லும் “இறைவனே! எங்கள் பணிகளை
விட்டுவிட்டு வந்து உன்னை வாழ்த்துகிறோம். தொழுகிறோம். நாங்கள் உன்னிடம் நலம் பெற்று
வாழவேண்டும்” என்று வேண்டுகின்றனர்.
பாடல் – சொல் பிரிப்புப்
பதிவு
17. செவ்வேள்
1
தேம் படு மலர்,
குழை, பூந் துகில், வடி
மணி,
ஏந்து இலை சுமந்து;
சாந்தம் விரைஇ,
விடை அரை அசைத்த,
வேலன், கடிமரம்
பரவினர் உரையொடு பண்ணிய
இசையினர்,
விரிமலர் மதுவின் மரம் நனை
குன்றத்து 5
கோல் எரி, கொளை,
நறை, புகை, கொடி, ஒருங்கு
எழ
மாலை மாலை, அடி
உறை, இயைநர்,
மேலோர் உறையுளும் வேண்டுநர்
யாஅர்?
2
ஒருதிறம், பாணர் யாழின் தீங்
குரல் எழ,
ஒருதிறம், யாணர் வண்டின் இமிர்
இசை எழ, 10
ஒருதிறம், கண் ஆர் குழலின்
கரைபு எழ,
ஒருதிறம், பண் ஆர் தும்பி
பரந்து இசை ஊத,
ஒருதிறம், மண் ஆர் முழவின்
இசை எழ,
ஒருதிறம், அண்ணல் நெடு வரை
அருவி நீர் ததும்ப,
ஒருதிறம், பாடல் நல் விறலியர்
ஒல்குபு நுடங்க, 15
ஒருதிறம், வாடை உளர்வயின் பூங்
கொடி நுடங்க,
ஒருதிறம், பாடினி முரலும் பாலை
அம் குரலின்
நீடுகிளர் கிழமை நிறை குறை
தோன்ற,
ஒருதிறம், ஆடு சீர் மஞ்ஞை
அரி குரல் தோன்ற,
மாறுமாறு உற்றன போல் மாறு
எதிர் கோடல் 20
மாறு அட்டான் குன்றம்
உடைத்து.
3
பாடல் சான்று பல்
புகழ் முற்றிய
கூடலொடு பரங்குன்றின் இடை,
கமழ் நறுஞ் சாந்தின்
அவரவர் திளைப்ப,
நணிநணித்து ஆயினும், சேஎய்ச் சேய்த்து; 25
மகிழ் மிகு தேஎம்
கோதையர் கூந்தல் குஞ்சியின்
சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும்
ஆறு இன்று.
வசை நீங்கிய வாய்மையால்,
வேள்வியால்,
திசை நாறிய குன்று
அமர்ந்து, ஆண்டுஆண்டு
ஆவி உண்ணும் அகில்
கெழு கமழ் புகை 30
வாய்வாய் மீ போய், உம்பர்
இமைபு இறப்ப;
தேயா மண்டிலம் காணுமாறு
இன்று.
4
வளை முன் கை
வணங்கு இறையார்,
அணை மென் தோள்
அசைபு ஒத்தார்
தார் மார்பின் தகை
இயலார், 35
ஈர மாலை இயல்
அணியார்,
மனம் மகிழ் தூங்குநர்
பாய்பு உடன் ஆட,
சுனை மலர்த் தாது
ஊதும் வண்டு ஊதல் எய்தா:
அனைய, பரங்குன்றின் அணி.
5
கீழோர் வயல் பரக்கும்,
வார் வெள் அருவி பரந்து
ஆனாது 40
அரோ;மேலோர் இயங்குதலால்,
வீழ் மணி நீலம் செறு
உழக்கும் அரோ;தெய்வ விழவும்,
திருந்து விருந்து அயர்வும்,
அவ் வெள் அருவி
அணி பரங் குன்றிற்கும்,
தொய்யா விழுச் சீர்
வளம் கெழு வையைக்கும்,
கொய் உளை மான்
தேர்க் கொடித் தேரான் கூடற்கும், 45
கை ஊழ் தடுமாற்றம்
நன்று.
6
என ஆங்கு,
மணி நிற மஞ்ஞை
ஓங்கிய புட் கொடி,
பிணிமுகம் ஊர்ந்த வெல் போர்,
இறைவ!
பணி ஒரீஇ, நின்
புகழ் ஏத்தி, 50
அணி நெடுங் குன்றம்
பாடுதும்; தொழுதும்;
அவை யாமும் எம்
சுற்றமும் பரவுதும்
ஏம வைகல் பெறுக,
யாம் எனவே.
கடவுள் வாழ்த்து
குன்றம்பூதனார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்
காலம் – கி. பி.
மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்

No comments:
Post a Comment