Pages

Wednesday, 27 July 2016

பரிபாடல் Paripadal 14

முருகன்
முருகன் குன்றத்தில் கார் காலத்தில் மலர்கள் பூத்துக் கிடக்கின்றன. மக்கள் முருகனை வாழ்த்தி மகிழ்ந்து பூக்கின்றனர். எப்போதும் வாழ்த்திக்கொண்டே இருக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகின்றனர்.
1
முருகன் குடிகொண்டுள்ள குன்றத்தில் கார் காலம் தோன்றிற்று. மேகங்கள் கூடி முழங்கி மழை பொழிந்தது. அதனால் நீர் நிறைந்த சுனைகளில் பூக்கள் மலர்ந்தன. மணக்கும் கடப்பம் பூவில் அமர்ந்து தேன் உண்ணும் வண்டுகளின் ஒலி இசைப்பண்ணைப் போன்று இருந்தது. முருகேறி ஆடும் மகளிரின் தோள்கள் மலையடுக்கங்களில் இருக்கும் மூங்கிலைப் போன்று விளங்கின. வாகைப் பூப் போன்ற கொண்டையுடன் ஆடும் மயில் அகவும் ஓசை மணந்து பிரிந்து நிற்பவர்களை, “பிரிந்து நிற்காமல் கூடுங்கள்” என்று குரல் கொடுப்பது போல் இருந்தது. கொன்றைப் பூக்கள் பொன்மாலைகள் போல் இருந்தன. வேங்கைப் பூக்கள் அகன்ற பாறைகளில் கொட்டின. அழுதுகொண்டிருந்த மகளிர் உவகை (உழுவை) கொண்டனர். நீர் நிலைகளுக்குப் பக்கத்தில் வளைந்த காந்தள், கொடி விட்டுப் படர்ந்திருக்கும் தோன்றி, பவளம் போல் சிவந்த பூக்கள் முதலானவை மலர்ந்தன. இப்படிக் குன்றம் கார்காலத்தில் பொலிவுடன் திகழ்ந்தது.
2
மக்கள் முருகனை வாழ்த்தினர். போர்க்கோலம் பூண்டு சூரபன்மனைக் கொன்ற வேல்-படை கொண்டவனே! கறை படாத கார்மேகம் பொங்குவது போலப் புகையும் நறும்புகைகளுக்கு இடையே அமர்ந்திருப்பவனே! ஆறு முகமும் 12 தோளும் காட்டி வள்ளி மகள் மலரை மணந்தவனே! உறவினர் சூழ்ந்து எழுச்சியுடன் உன்னைப் பாடக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருப்பவனே! நீ பிறந்தபோதே, சிறப்பு மிக்க இந்திரன் போன்றோர் அஞ்சி நடுங்கிய சீர்மை கொண்டவனே! இரண்டு பிறப்பும், இரண்டு பெயரும், ஈர நெஞ்சமும் கொண்ட அந்தணர் செய்யும் அறத்தில் அமர்ந்திருப்பவனே!
3
இப்படிப்பட்டவனாக நீ விளங்குவதால், உன்னை விரும்பி, நெருங்கி நெருங்கி வழிபடுகின்றோம். அப்படி வழிபடுவதன் பயன் பின்னும் பின்னும் வழிபடுவதாக அமையவேண்டும். பழங்காலம் தொட்டே மண்டிக் கிடக்கும் முருகனின் புகழ்போல் நாங்கள் வழிபடும் நாள்கள் பெருக வேண்டும் என்றெல்லாம் வேண்டுகின்றனர்.

பாடல்சொல் பிரிப்புப் பதிவு
14. செவ்வேள்
1
கார் மலி கதழ் பெயல் தலைஇ, ஏற்ற
நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே;
தண் நறுங் கடம்பின் கமழ் தாது ஊதும்
வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே;
அடியுறைமகளிர் ஆடும் தோளே,          5
நெடு வரை அடுக்கத்து வேய், போன்றனவே;
வாகை ஒண் பூப் புரையும் முச்சிய
தோகை ஆர் குரல், மணந்து தணந்தோரை,
'நீடன்மின் வாரும்' என்பவர் சொல் போன்றனவே;
நாள் மலர்க் கொன்றையும் பொலந் தார் போன்றன;                            10
மெல் இணர் வேங்கை வியல் அறைத் தாயின,
அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப;
நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள்
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரைதொறும்,
விடு கொடிப் பிறந்த மென் தகைத் தோன்றிப்    15
பவழத்து அன்ன செம் பூத் தாஅய்,
கார் மலிந்தன்று, நின் குன்று.
2
போர் மலிந்து,
சூர் மருங்கு அறுத்த சுடர் படையோயே!
கறை இல் கார் மழை பொங்கி அன்ன 20
நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே!
அறு முகத்து ஆறு இரு தோளால் வென்றி
நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே!
கெழீஇக் கேளிர் சுற்ற, நின்னை
எழீஇப் பாடும் பாட்டு அமர்ந்தோயே!  25
பிறந்த ஞான்றே, நின்னை உட்கிச்
சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே!
இரு பிறப்பு, இரு பெயர், ஈர நெஞ்சத்து,
ஒரு பெயர், அந்தணர் அறன் அமர்ந்தோயே!
3
அன்னை ஆகலின், அமர்ந்து யாம் நின்னை,                                30
துன்னித் துன்னி, வழிபடுவதன் பயம்
இன்னும் இன்னும் அவை ஆகுக
தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே!

பருவம் கண்டு அழிந்த தலைமகள் கேட்ப, முருகவேளைப் பரவுவாளாய், 'இப் பருவத்தே தலைமகன் வரும்' என்பது படத் தோழி வற்புறுத்தியது.

கேசவனார் பாட்டு
இசையும் அவர்
பண் நோதிறம்
                               
காலம்கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்


No comments:

Post a Comment