Pages

Wednesday, 27 July 2016

பரிபாடல் Paripadal 13

திருமால்


திருமாலைத் தொழுபவர்களுக்கு அவரது துறக்கம் உரிமையாகும். திருமாலே! முன் செய்த தவப்பயனால் இப்போது உன்னைத் தொழுகின்றோம். இன்னும் இன்னும் உன்னைத் தொழுவதையே விரும்புகின்றோம்.
1
நீல நிற மலையில் தோன்றும் ஞாயிறு போல் அயகிய ஆடை அணிந்தவன். 
  • புனைந்திருக்கும் முடியும் அவ்வாறு இருக்கும். 
  • பொன்னும் மணியும் அடித்துக்கொண்டு மலையிலிருந்து இறங்கும் அருவி போல் மாலை அணிந்திருப்பான். 
  • கருடப் பறவை பொறித்த கொடியைப் பிடித்துக்கொண்டிருப்பான். 
  • அவன் கையிலிருக்கும் சக்கரம் தண்ணொளி தரும் நிலாவைப் போன்று இருக்கும். 
  • கார்ப் பருவத்தில் ஞாயிறும் திங்களும் தோன்றுவது போல சங்கும் சக்கரமும் கையில் ஏந்திக்கொண்டிருப்பான். 
  • மேகத்து மின்னல் போல் மார்பில் பொன்னணி அணிந்திருப்பான். 
  • அருவி கொட்டுவது போல மார்பில் முத்தாரம் அணிந்திருப்பான். 
அவனைத் தொழுபவர்களுக்குத் துறக்கம் என்னும் வீடுபேறு உரிமை ஆவது உறுதி.  
2
போர் புரியும் அண்ணலே! 
  • நா அறியும் சுவை, செவி அறியும் இசை, கண் அறியும் தோற்றம், மூக்கு அறியும் நாற்றம், உடம்பு அறியும் தொடு-உணர்வு ஆகியவற்றால் நீ போரிடுகிறாய். 
  • இவை கொண்டிருக்கும் நா, செவி, கண், மூக்கு, மெய் ஆகியவை உன் போர்க்கருவிகள். 
  • முன்னர் (கிடைக்காமல் போன வேறொரு பாடல்) நான் கூறிய 5 பூதங்களில் முதல் பூதத்தில் விசும்பாக விளங்குகிறாய். அது உயிர். 
  • உயிர் உணர்ந்து வாங்கிக் கொள்ளும் மூச்சும் நீ. 
  • உயிரும் மூச்சும் உணரும் உடல் வெப்பமும் நீ. 
  • உயிர், மூச்சு, உடல்வெப்பம் மூன்றும் உணரும் குளுமை நீரும் நீ. 
  • உயிர், மூச்சு, உடல்வெப்பம், உடல்-தண்மை நான்கிலும் உணரும் நிலமும் நீ. 
  • அதனால் உன்னிடம் 3 ஆக இருக்கும் 7 உலகங்களின் மூலங்களும் தோன்றின. 
  • அறத்தை முதலாகக் கொண்ட பொருள் இன்பங்களும் தோன்றின. 
  • மூன்று காலங்களும் விசும்பும் உயிரோட்டமும், காற்றின் அசைவும், வெப்பத்தின் சலனமும் தோன்றின.  

3
திருமால் உருவம் நீல நிறம். 
  • நீல நிறத்துக்கு நடுவில் பாற்கடல் (பால் கடல்) 
  • பாற்கடலுக்கு நடுவில் 1000 தலை கொண்ட  பாம்பு. 
  • அந்தப் பாம்புப் படுக்கையில் துளசி மாலை அணிந்துகொண்டு துயில்கிறான். 
  • எல்லாவற்றையும் அறிந்துகொண்டே உறங்குகிறான். 
  • படையோடு வந்து தாக்கும் திறனாளிகளின் உயிரைப் போக்க அவர்களின் நெஞ்சத்தை உழும் கலப்பையுடன் விளங்குபவன் நாஞ்சிலோன் என்னும் பரசுராமன். 
  • பன்றி உருவில் கொம்பில் பொன்னாலாகிய பூண் அணிந்துகொண்டு, நிலத்தை உழும் பன்றிக்களிறு அவன். 
இப்படி, பாற்கடல் உறக்கம், பரசுராமன் தோற்றம், பன்றி உருவம் ஆகிய 3 உருவங்களாகப் பிரிந்து விளங்குபவன் திருமால். 
4
பாம்பைப் பகையாகக் கொண்ட படர்ந்த சிறகினை உடைய கருடனைக் கொடியாகக் கொண்ட வளைந்துகொடுக்காத செல்வன் நீ. 
  • உன் ஆணை இது என்று வேதங்களாகிய முதுமொழிகள் கூறுகின்றன. 
  • கருடச் சேவல் ஓங்கியிருக்கும் கொடியை உடைய செல்வன் நீ. 
  • புகழின் உருவமாகத் திகழ்பவன் நீ. 
  • கார் மேகம், காயாம் பூ, கடல், இருள், மாணிக்கம் ஆகிய ஐந்தும் போல நிறம் கொண்டவன் நீ. 
  • வலம்புரிச் சங்கு, பலிக்கும் வாய்மொழி, அதிரும் வான், முழங்கும் மேகம் ஆகிய நான்கும் போல் அருளும், அழிக்கும் ஆற்றலும் கொண்டவன் நீ. 
  • முடிந்தது, முடிந்துகொண்டிருப்பது, முளைக்கப் போவது மூன்றையும் அறிந்தவன் நீ. (இதுதான் உன் அறிதுயில்) 
  • இவற்றைக் கடந்தவனும் நீ. 
  • உன் காலடி நிழலில் இவை கிடக்கின்றன. 
  • செயலில் நன்மை தீமை என்று இரண்டு இல்லாதவன் நீ. 
  • உள்ளத்தில் ஒருமைப்பாட்டோடு செயல்படுபவன் நீ. 
  • அடைந்து கிடப்பதை விடுத்து மலரும் இதழ்களைக் கொண்டதுதான் எங்களைத் தாங்கிக்கொண்டிருக்கும் (பரியவை) உன் அடி, கை, கண், வாய், தொடை, உந்திக் கொப்பூழ், தோளில் அணியும் வளையம், உள்ளங்கால், தோள், பிடரி ஆகிய தாமரை. 
  • மறையாக விளங்கும் கேள்வி, அறிவு, அறம் ஆகியவற்றில் நீ நுட்பமானவன். 
  • வேள்வி செய்தல், போரிடுதல் ஆகியவற்றில் நாட்டம் கொண்டவன் நீ. 
  • அற்றுப்போகாத வலிமை, சினம் கொள்ளாமல் சிவந்திருக்கும் கண், போராற்றல் மிக்க ஆழிச்சக்கரம் அகியவற்றைக் கொண்ட செல்வன் நீ. 
  • வெல்லும் போரில் எரித்து நகைக்கும் துளசி மாலை மரபோடு அணிந்த மார்பினை உடையவன் நீ. 
  • நீதான் தாய் என்று எண்ணி உன் திருவடியைத் தொழுகின்றோம். 
  • பல முறை வணங்குகின்றோம், வாழ்த்துகின்றோம். 
  • இப்படிச் செய்வது முன்னும் முன்னும் வழிவழியாக நாங்கள் செய்துவந்த தவத்தின் பயன். 
இன்னும் இன்னும் உன்னைத் தொழுவது எங்களுக்கு உள்ள காம வேட்கை. இந்தப் பேற்றினை எங்களுக்குத் தந்தருள்வாயாக.

பாடல்சொல் பிரிப்புப் பதிவு
13. திருமால்
1
மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று
அணி வனப்பு அமைந்த பூந் துகில், புனை முடி,
இறு வரை இழிதரும் பொன் மணி அருவியின்
நிறனொடு மாறும் தார், புள்ளுப் பொறி புனை கொடி,
விண் அளி கொண்ட வியன் மதி அணி கொளத்`  5
தண் அளி கொண்ட அணங்குடை நேமி மால்!
பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த
இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல,
நேமியும் வளையும் ஏந்திய கையான்
கருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண்,                 10
அருவி உருவின் ஆரமொடு, அணிந்த நின்
திரு வரை அகலம் தொழுவோர்க்கு
உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து.
2
சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,
அவையும் நீயே, அடு போர் அண்ணால்!          15
அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே;
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்,
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
இரண்டின் உணரும் வளியும் நீயே;
மூன்றின் உணரும் தீயும் நீயே;                20
நான்கின் உணரும் நீரும் நீயே;
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே:
அதனால், நின் மருங்கின்று மூ ஏழ் உலகமும்,
மூலமும், அறனும், முதன்மையின் இகந்த
காலமும், விசும்பும், காற்றொடு கனலும்.     25
3
தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண்,
மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த
கவை நா அருந் தலைக் காண்பின் சேக்கைத்
துளவம் சூடிய அறிதுயிலோனும்
மறம் மிகு மலி ஒலி மாறு அடு தானையால்,             30
திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும்
விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின்,
நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்
நானிலம் துளக்கு அற முழு முதல் நாற்றிய
பொலம் புனை இதழ் அணி மணி மடற் பேர் அணி 35
இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி,
மூஉரு ஆகிய தலைபிரி ஒருவனை!
4
படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக்
கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை;
ஏவல் இன் முது மொழி கூறும்,                40
சேவல் ஓங்கு உயர் கொடிச் செல்வ! நல் புகழவை;
கார், மலர்ப் பூவை, கடலை, இருள், மணி,
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை;
வலம்புரி, வாய்மொழி, அதிர்பு வான், முழக்குச் செல்,
அவை நான்கும் உறழும் அருள், செறல், வயின் மொழி:  45
முடிந்ததும், முடிவதும், முகிழ்ப்பதும் அவை மூன்றும்
கடந்து, அவை அமைந்த கழலின் நிழலவை;
இருமை வினையும் இல, ஏத்துமவை:
ஒருமை வினை மேவும் உள்ளத்தினை;
அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ்த் தாமரை    50
அடியும், கையும், கண்ணும், வாயும்:
தொடியும், உந்தியும், தோள் அணி வலயமும்,
தாளும், தோளும், எருத்தொடு, பெரியை;
மார்பும், அல்குலும், மனத்தொடு, பரியை;
கேள்வியும், அறிவும், அறத்தொடு, நுண்ணியை;   55
வேள்வியும், மறனும், விருப்பொடு வெய்யை;
அறாஅ மைந்தின், செறாஅச் செங்கண்,
செரு மிகு திகிரிச் செல்வ! வெல் போர்
எரி நகை இடை இடுபு இழைத்த நறுந் தார்ப்
புரி மலர்த் துழாஅய் மேவல் மார்பினோய்!  60
அன்னை என நினைஇ, நின் அடி தொழுதனெம்;
பல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்
முன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால்:
இன்னும் இன்னும் எம் காமம் இதுவே!

கடவுள் வாழ்த்து
நல்லெழுநியார் பாட்டு
இசை  ...............
பண் நோதிறம்
               
காலம்கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்


No comments:

Post a Comment