Pages

Friday, 22 July 2016

நற்றிணை Natrinai 189

தெறல் அருங்
கடவுள்
கொற்றவை
காளி
’அவர் அல்லது எனக்கு வேறு யார் இருக்கிறார்’ என்று இருக்கும் என்னை விரும்பி அருள் தர அவர் வரவில்லை 

ஆயினும், அவர் எங்கு இருக்கிறாரோ என்று எண்ணி நான் கலங்கிக்கொண்டிருக்கிறேன். 

சென்னியர் எனப்படும் சோழ அரசர்கள் கலக்கம் வரும்போது கொற்றவையை (தெறல் அருங் கடவுள்) யாழிசை மீட்டி வழிபடுவர். 

அவர்களின் யாழிசை போலக் குரல் எழுப்பும் குருகுகள் கங்கை ஆற்றில் செல்லும் வங்கப் படகுகளில் ஏறிக்கொண்டு செல்லும். 

அதுபோல அவரும் பொருளீட்டும் பொருட்டுக் கங்கையாற்றுப் படகில் செல்கிறாரோ என்னவோ? 

அல்லது என்ன தொழில் செய்துகொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. 

புறாவைப் பிடிக்க வேட்டுவன் வலை விரிப்பான். அந்த வலையில் பட்ட காட்டுப் புறாவின் ஆண் வலையைப் பிய்த்துக்கொண்டு பறந்தோடும். அங்கே மரத்தில் சிலந்திப் பூச்சி கட்டியிருக்கும் கூட்டைப் பார்த்து இதுவும் வலையோ என்று எண்ணி அஞ்சி நடுங்கும். 

அப்படிப்பட்ட உலர்ந்த மரமுள்ள காட்டு வழியில் சென்ற அவர் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறாரோ தெரியவில்லையே. 

தலைவி தன் தோழியிடம் இவ்வாறு சொல்லிக்கொண்டு கலங்குகிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – பாலை

தம் அலது இல்லா நம் நயந்து அருளி
இன்னும் வாரார் ஆயினும் சென்னியர்
தெறல் அருங் கடவுள் முன்னர் சீறியாழ்
நரம்பு இசைத்தன்ன இன் குரற் குருகின்
கங்கை வங்கம் போகுவர் கொல்லோ
எவ் வினை செய்வர்கொல் தாமே வெவ் வினைக்
கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய
கானப் புறவின் சேவல் வாய் நூல்
சிலம்பி அம் சினை வெரூஉம்
அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது
ஆசிரியர் பெயர் தெரியவில்லை

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

No comments:

Post a Comment