Pages

Thursday, 7 July 2016

நற்றிணை Natrinai 150

வழுதி வாழிய


பாண! 
உன் பெருமகனைப் பார்த்தால் எனக்குச் சிரிப்பே வருகிறது.

பாண! 
உன் பெருமகன் என் சேரிக்கு வந்து மினுக்குகிறான். 
எனக்குச் சிரிப்பே வருகிறது. 

என் தாய் என்னை எதுவும் சொல்லமாட்டாள், என்கிறாள் அந்தப் பரத்தை.

மன்னன் வழுதி வாழ்க! 
காவல்காடு சிதையும்படி யானைப்படையை நடத்திக் கோட்டைகள் பலவற்றை வென்ற வழுதி வாழ்க! என்று சொல்லித் தொழுதுகொண்டு நிற்கிறான். 

மன்னர்களின் கோட்டைகள் பலவற்றை உடையவன் போல நிற்கிறான். 

அதற்காக என்னை நான் பரிகொடுக்க மாட்டேன். 

குதிரையை மெதுவாக நடத்திக்கொண்டு அன்று குதிரைமேல் என் தெருவுக்கு வந்தான். 

கழுத்திலும் தலையிலும் சூடியிருந்த தன் மாலையைப் பகட்டிக் காட்டினான். 

அப்போது என் நெஞ்சை ஒரே அடியாக அள்ளிக்கொண்டான். 
அவனை அஞ்சும்படி விடுவேனா? 
விடமாட்டேன். 

என் தாய் கணுக்களை உடைய மூங்கில் கோலை வைத்துக்கொண்டிருக்கிறாள் என்பதும், பெரிதும் சினம் கொண்டவள் என்பதும் உண்மைதான். 

அதற்காக அவள் யாரையும் அடித்து வருத்தமாட்டாள். 
அவன் விரும்பியதை என்னிடம் பெறலாம் – என்கிறாள் பரத்தை.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – மருதம்

நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்
மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி
அரண் பல கடந்த முரண் கொள் தானை
வழுதி வாழிய பல எனத் தொழுது ஈண்டு
மன் எயில் உடையோர் போல அஃது யாம்
என்னதும் பரியலோ இலம் எனத் தண் நடைக்
கலி மா கடைஇ வந்து எம் சேரித்
தாரும் கண்ணியும் காட்டி ஒருமைய
நெஞ்சம் கொண்டமை விடுமோ அஞ்ச,
கண்ணுடைச் சிறு கோல் பற்றிக்
கதம் பெரிது உடையள் யாய் அழுங்கலோ இலளே

தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை தலைவனை நெருங்கிப் பாணற்கு உரைத்தது
கடுவன் இளமள்ளனார் பாடல்

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

இப்படி ஒருத்தி
பரத்தைக் கோலம்

No comments:

Post a Comment