Pages

Wednesday, 6 July 2016

நற்றிணை Natrinai 146

வில்லாப் பூ
மடன்மா


அவன் எருக்கம்பூ (வில்லாப்பூ) மாலை அணிந்திருந்தான். 
நல்ல பாதுகாவல் பெறுவேன் எனச் சொல்லிக்கொண்டு பலமுறை ஊரில் திரிந்தான். 
பனை மடலால் செய்த குதிரை மேல் ஏறிக்கொண்டு திரிந்தான். 
ஆர்வம் கொண்ட மக்கள் அவனுக்கு அருள் மொழி கூறினர். 

கடமை உணர்ந்த மன்னன் ஆட்சிக் குடையின் கீழ் மக்கள் கவலை இல்லாமல் இருப்பது போல, நீ குதிரையை விட்டு இறங்கி, இந்தக் குளுமையான மர நிழலில் தங்கிச் செல்க என்றனர். 

கதிரவன் வெயில் சுடர் காய்ந்து ஓயட்டும் என்றனர். 
அருளோடும் ஆர்வத்தோடும் அங்குக் கூடிய மக்கள் இவ்வாறு கூறினர்.

அதனைக் கேட்ட அவன் விடை பகர்ந்தான்.

என்னை நல்லவன் என்று கூறுகிறீர்கள். 
வல்லவன் என்கிறீர்கள். 
தீட்டிய ஓவியம் போன்ற வனப்பால் அவள் என்னை வருத்துகிறாள். 
அவள் ஐயள் (சிறியவள், வியப்புக்குரியவள்)
மாயோள் (என் மனத்தை மயக்கிய மாயக்காரி)

அவள் என் சொற்களை ஏற்றுக்கொள்வாளாயின் நீங்கள் சொல்கிறபடி இறங்கி இளைப்பாறுகிறேன்.   

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – குறிஞ்சி

வில்லாப் பூவின் கண்ணி சூடி
நல் ஏமுறுவல் எனப் பல் ஊர் திரிதரு
நெடு மாப் பெண்ணை மடல் மானோயே
கடன் அறி மன்னர் குடை நிழற் போலப்
பெருந் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து
இருந்தனை சென்மோ வழங்குக சுடர் என
அருளிக் கூடும் ஆர்வ மாக்கள்
நல்லேம் என்னும் கிளவி வல்லோன்
எழுதி அன்ன காண் தகு வனப்பின்
ஐயள் மாயோள் அணங்கிய
மையல் நெஞ்சம் என் மொழிக் கொளினே

பின்னின்ற தலைவன்முன்னிலைப் புறமொழியாக தோழி கேட்பச் சொல்லியது
கந்தரத்தனார் பாடல்

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

மடல் மா | மடன்மா
கறுக்குப் பனை மட்டைக் குதிரை
மடன்மா ஊர்தல் - திரைப்படம்

No comments:

Post a Comment