Pages

Friday, 22 July 2016

குற்றாலக் குறவஞ்சி Kutralakkuravanji 1

குற்றாலம்
திருக்குற்றாலக் குறவஞ்சி கடவுள் வணக்கம்

பூமலி இதழி மாலை புனைந்த குற்றாலத்து ஈசர்
கோ மலர்ப் பாதம் போற்றிக் குறவஞ்சித் தமிழைப் பாட
மா மதத்து அருவி பாயும் மலை என வளர்ந்த மேனி
கா மலி தருப் போல் ஐந்து கை வலான் காவலானே 1

கொன்றை மாலை அணிந்தவர் குற்றாலத்து ஈசர். குறவஞ்சித் தமிழைப் பாட குற்றாலத்து ஈசர் திருவடிகளைப் போற்றுகிறேன். மத அருவி பாயும் மலை போல் மேனியையும், ஐந்து கைகளையும் கொண்ட வல்லவனான ஆனைமுகன் காவலாக இருப்பான். 1

பன்னிருகை வேல் வாங்கப் பதினொருவர் படை தாங்கப் பத்துத் திக்கும்
நன் நவ வீரரும் புகழ மலைகள் எட்டும் கடல் ஏழும் நாடி ஆடிப்
பொன்னின் முடி ஆறு ஏந்தி அஞ்சுதலை எனக் கொழித்துப் புயம் நான் மூன்றாய்த்
தன் இரு தாள் தரும் ஒருவன் குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே 2

கைகள் 12 ல் வேல். 11 பேர் படைத்தலைவர். 10 திசைகள். 9 வீரர்கள் புகழ்கின்றனர். 8 மலைகள். 7 கடல்களில் ஆடினான். 6 தலைகள். 5 தலை (அஞ்சுதலை) எனக்குத் தந்தவன். 4 ஆல் பெருக்கிய 3 (12) புயங்களை உடையவன். 2 தாள். 1 (ஒருவன்) முருகன். குற்றாலக் குறவஞ்சித் தமிழை எனக்குத் தந்தான். 2

கிளைகளாய்க் கிளைத்த பல கொப்பு எலாம் சதுர் வேதம் கிளைகள் ஈன்ற
களை எலாம் சிவலிங்கம் கனி எலாம் சிவலிங்கம் கனிகள் ஈன்ற
சுளை எலாம் சிவலிங்கம் வித்து எலாம் சிவலிங்க சொரூபம் ஆக
விளையும் ஒரு குறும் பலவின் முளைத்து எழுந்த சிவக்கொழுந்தை வேண்டுவோமே 3

குற்றாலப் பலா மரத்தில் கிளை, கொம்பு எல்லாம் நான்கு வேதங்கள் ஈன்ற சிவலிங்கம். கனிகள் எல்லாம் சிவலிங்க உருவம். சுளைகள் எல்லாம் சிவலிங்க உருவம். விதைகள் எல்லாம் சிவலிங்க உருவம். அந்த விதையில் முளைத்து எழுந்த சிவக்கொழுந்து முருகன். குறவஞ்சித் தமிழைப் பாட உதவும்படி, சிவக்கொழுந்தை வேண்டுகிறேன். 3  

தவளமதி தவழ் குடுமிப் பனி வரையின் முளைத்து எழுந்து தகைசேர் முக்கண்
பவளமலை தனில் ஆசை படர்ந்து ஏறிக் கொழுந்து விட்டுப் பருவம் ஆகி
அவிழும் நறைப் பூங்கடப்பந்  தாரனையும் ஈன்று ஒரு கோடு ஆம்பல் ஈன்று
குவலயம் பூத்து அருள் கொடியைக் கோதை குழல் வாய் மொழியைக் கூறு வோமே 4

மதி தவழும் பருவத மலையில் முளைத்தாள். (பருவத ராசன் மகள்) மூன்று கண் கொண்ட பவள மலைமீது ஆசை கொண்டு அதன் மீது ஏறினாள். (சிவன் மீது ஏறினாள்) கொழுந்து விட்டுக் கருப்பருவம் கொண்டாள். கடப்பந்தாரனையும் (முருகனையும்), ஒருகோட்டு ஆம்பலையும் (ஒற்றைக்கொம்பு ஆனையையும்) ஈன்றாள். அருள் பூத்து உலகுக்கு வழங்கும் கொடி அவள். அவள் குழல்மொழி அம்மை. அவளைப் போற்றிவிட்டுத் தமிழ் பாடுகிறேன்.  4

தலையிலே ஆறு இருக்க மாமிக்காகத் தாங்கு கடல் ஏழ் அழைத்த திருக்குற்றாலர்
சிலையிலே தடித்த தடம் புயத்தை வாழ்த்திச் செழித்த குறவஞ்சி நாடகத்தைப் பாட
அலையிலே மலை மிதக்க ஏறினானும் அத்தியிலை பூவை அந்நாள் அழைப்பித்தானும்
கலையிலே கிடைத்த பொருள் ஆற்றில் போட்டுக் கனகுளத்தில் எடுத்தானும் காப்பதாமே 5

தலையில் ஆறு இருக்கும் குற்றாலநாதர் தன் மாமியார் காஞ்சனமாலை என்பவளுக்காக 7 கடல்களையும் அழைத்தார். கற்சிலையில் பதித்த அவரது தோள்களை வாழ்த்திவிட்டுக் குறவஞ்சி நாடகத்தைப் பாடத் தொடங்குகிறேன். கடலலையிலே கல் மிதக்க ஏறிய அப்பர், எலும்பிலே மகளை எழுப்பிய சம்பந்தர், பாடல் பாடிப் பெற்ற பொன்னை முதுகுன்ற மணிமுத்தாற்றிலே போட்டுவிட்டு, திருவாரூர் குளத்திலே எடுத்துக்கொண்ட சுந்தரர், ஆகிய மூவரும் காப்பாற்றுவார்களாக. 5

நித்தர் திரிகூடலிங்கர் குறவஞ்சி நாடகத்தை நிகழ்த்த வேண்டி
முத்தர் தரு மேனி எல்லாம் உருகவே தமிழ் உரைத்த முனியைப் பாடி
இத்தரையில் ஆத்துமம் விட்டு இறக்கும் நாள் சிலேட்டுமம் வந்து ஏறா வண்ணம்
பித்தன் அடித் துணை சேர்ந்த வாதவூரான் அடிகள் பேணுவோமே 6

நித்தியமானவர் திரிகூட லிங்கர். திரிகூடலிங்கர் குறவ்வஞ்சி நாடகம் இந்த நூல். இந்த நூலைப் பாட சிவபெருமானே மேனியெல்லாம் உருகும்படித் தமிழ் பாடிய அகத்தியர் புகழைப் பாடுகிறேன். இறக்கும்போது விக்கல் வராமல் இருக்கத் திருவாசகம் பாடியவர் வாதவூரார். இவரது திருவடிகளைப் போற்றுகிறேன்.   6

அடியிணை மலரும் செவ்வாய் ஆம்பலும் சிவப்பினாளை
நெடிய குழலும் மைக் கண் நீலமும் கறுப்பினாளைப்
படிவமும் புகழும் செங்கைப் படிகம் போல் வெளுப்பாம் ஞானக்
கொடிதனைத் திருக்குற்றாலக் குறவஞ்சிக்கு இயம்புவோமே 7

திருவடிகள் தாமரை. வாய் செவ்வாம்பல். கூந்தல் நீலம். கண் கறுப்பு. மேனி, புகழ், உள்ளங்கை ஆகியவை படிகம் போன்று வெள்ளை. இவற்றைக் கொண்டவள் ஞானக்கொடி (சரசுவதி). குறவஞ்சி பாட ஆனக்கொடியைப் போற்றுகிறேன். 7

சிலை பெரிய வேடனுக்கும் நரிக்கும் வேதச் செல்வர்க்கும் தேவர்க்கும் இரங்கி மேனாள்
கொலை களவு கள் காமம் குருத்துரோகம் கொடிய பஞ்ச பாதகமும் தீர்த்ததாலே
நிலவு அணிவார் குற்றாலம் நினைத்த பேர்கள் நினைத்த வரம் பெறுவரது நினைக்க வேண்டிப்
பலவளம் சேர் குறவஞ்சி நாடகத்தைப் படிப்பவர்க்கும் கேட்பவர்க்கும் பலன் உண்டாமே 8

சிலை வேடன் கண்ணப்பன், நரி, வேதம் ஓதும் செல்வர் ஆகியோர்களிடம் இரக்கம் கொண்டு, அவர்கள் செய்த கொலை, களவு, கள், காமம், குருத்துரோகம் என்னும் பஞ்சமா பாதகங்களை முன்னாளில் போக்கியவர் சிவன். இந்நாளில் தன்னை நினைத்தவரின் பஞ்சமா பாதகங்களைப் போக்குபவர் குற்றாலநாதர். இந்தப் புறவஞ்சி நாடகத்தைப் படிப்பவர்களும், கேட்பவர்களும் நினைத்த வரங்களையெல்லாம் குற்றாலநாதர் வழங்குவார். இது நூலின் பயன் 8  

தாரினை விருப்பமாகத் தலைதனில் முடிக்குந்தோறும்
நாரினைப் பொல்லாது என்றே ஞாலத்தோர் தள்ளுவாரோ
சீரிய தமிழ் மாலைக்குள் செல்வர் குற்றாலத்து ஈசர்
பேரினால் எனது சொல்லைப் பெரியவர் தள்ளார் தாமே 9

தலையில் பூவை முடிக்கும்போது பூ கட்டிய நாரைப் பொல்லாதது என்று ஒதுக்குவார்களோ? என் தமிழ் நாரால் குற்றாலத்து ஈசர் பூவைத் தொடுத்திருக்கிறேன். எனவே எனது சொல்லைப் பெரியவர்கள் தள்ளமாட்டார்கள். இது அவையடக்கம்.
திருக்குற்றாலக் குறவஞ்சி மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர் பாடிய நாடகத் தமிழ் நூல். காலம் 17 ஆம் நூற்றாண்டு. 

No comments:

Post a Comment