Pages

Friday, 22 July 2016

நற்றிணை Natrinai 191

கானல் நிலம்
சிறுகுடி ஊருக்கு ஒருவனுடைய தேர் வந்தது என்று ஊர் அலர் தூற்றுகிறது. தாய் என்னைப் பார்க்கிறாள் (என்ன செய்தாய் என்று கண்ணால் வினவுகிறாள்) நாளைக்கு முண்டகப் பூ பறித்து வரச் செல்லாவிட்டால் என் உடம்பில் அழகு நிற்காது. (அவரை நினைத்து வாடிவிடும்) தேரில் வந்தவரும் வெறுமனே செல்லமாட்டார். (என்னோடு இருந்துவிட்டுதான் செல்வார்) என்ன செய்யலாம் என்று தலைவி, தோழியைக் கேட்கிறாள்.
  • சிறுகுடி – கண்டல் புதர்ச்செடிகளை வேலியாகக் கொண்டது. அதன் மணல் முற்றத்தில் தேன் தோய்ந்திருக்கும் சிறிய ஞாழல் பூக்கள் கொண்டும். மகளிர் வண்டல் விளையாடிய முற்றத்தில் கொட்டும். மெல்லிய புள்ளிகளாக மகளிரின் முலை முற்றத்தில் தோன்றும் சுணங்கு போல் கொட்டும். வியப்பாகத் தோன்றும்படிக் கொட்டும்.
  • மகளிர் – ஒழுங்கான அணிகலன்களை அணிந்திருப்பர். அகன்ற மணல் முற்றத்தில் வண்டல்-பாவை விளையாடுவர்.
  • முண்டகம் – நீல நிறப் பூ (மணி = நீல நிறம்)
  • மணிக்கழி நறும்பூக் கானல் – நீல நிற உப்பங்கழியுடன் கூடிய மணம் கமழும் பூக்கள் கொட்டிக் கிடக்கும் கானல் நிலம். 

இந்தக் கானல் நிலத்தில் தேர் வந்தது.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – நெய்தல்

சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த
வண்டற் பாவை வன முலை முற்றத்து
ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம்
கண்டல் வேலிக் காமர் சிறுகுடி
எல்லி வந்தன்றோ தேர் எனச் சொல்லி
அலர் எழுந்தன்று இவ் ஊரே பலருளும்
என் நோக்கினளே அன்னை நாளை
மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின்
அணிக் கவின் உண்மையோ அரிதே மணிக் கழி
நறும் பூங் கானல் வந்து அவர்
வறுந் தேர் போதல் அதனினும் அரிதே

தோழி தலைமகன் சிறைப்புறமாக செறிப்பு அறிவுறுப்பான் வேண்டிச் சொல்லியது
உலோச்சனார் பாடியது

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

No comments:

Post a Comment