Pages

Sunday, 12 June 2016

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 121

121 நினைத்தவர் புலம்பல்

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
தாழிசை
உண்டால்தான் கள்ளினிக்கும் உள்ளம் நினைத்தாலே
உண்டாகும் நல்லின்பம் காம உணர்வுகளால் 1201
காதலரின் காதலிலாக் காலத்தும் தன்நினைவால்
மோதுமொரு இன்பம் முகிழ்த்து. 1202   1

தும்மல் வருவதுபோல் தோன்றிக் கெடுவதனால்
எம்மை நினைத்துவிட்டு ஏதோ நினைப்பார்கொல் 1203
என்னுடைய நெஞ்சில் இருக்கும் அவர் என்னைத்
தன்நெஞ்சில் வைத்துளரோ சாற்று. 1204        2

தன்நெஞ்சில் என்னைத் தரிக்காமல் வெட்கமின்றி
என்நெஞ்சை நாடி இருக்குமவர் நல்லவரோ 1205
வாழ்கின்றேன் ஏனென்றால் பண்டு மணந்தநினை(வு)
ஆள்கின்ற தாலே அறி. 1206            3

எண்ணும்போ தேஉள்ளம் என்னைச் சுடுகிறதே
எண்ணாக்கால் என்னிலைமை என்னாம் தெரியலையே 1207
எப்படிநான் காய்ந்துவந்து எண்ணிடினும் மற்றவர்தாம்
தப்படியும் நோவார்காண் சால்பு.  1208   4
தனிச்சொல்
எனவாங்கு
சுரிதகம்
உன்னுயிரும் என்னுயிரும் ஒன்றுதான் என்றுரைப்பார்
என்னைப் பிரிந்திருக்க எண்ணும் பசப்புரையே  1209
என்னை  விடாமல் இருக்கின்ற வேறிடத்தை
முன்னின்று காண முழுநிலவே நில்லென்று
பின்னும் புலம்பும் பெரிது. 1210

இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006
 
முழு நிலா
அவரை நான் தேடவேண்டும். நிலாவே மறைந்துவிடாதே 
திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்

121 நினைந்தவர் புலம்பல்

1201. உள்ளினும், தீராப் பெரு மகிழ் செய்தலால், \ கள்ளினும் காமம் இனிது.
1202. எனைத்து ஒன்று இனிதேகாண் காமம்; தாம் வீழ்வார் \ நினைப்ப, வருவது ஒன்று இல்.
1203. நினைப்பவர் போன்று நினையார்கொல்-தும்மல் \ சினைப்பது போன்று கெடும்.
1204. யாமும் உளேம்கொல், அவர் நெஞ்சத்து?-எம் நெஞ்சத்து, ஓஒ! \ உளரே அவர்.
1205. தம் நெஞ்சத்து எம்மைக் கடி கொண்டார் நாணார்கொல் \ எம் நெஞ்சத்து ஓவா வரல்.
1206. மற்று யான் என் உளேன் மன்னோ! அவரொடு யான் \ உற்ற நாள் உள்ள, உளேன்.
1207. மறப்பின், எவன் ஆவன் மன்கொல்-மறப்பு அறியேன், \ உள்ளினும் உள்ளம் சுடும்.
1208. எனைத்தும் நினைப்பினும் காயார்; அனைத்து அன்றோ, \ காதலர் செய்யும் சிறப்பு.
1209. விளியும், என் இன் உயிர்-'வேறு அல்லம்' என்பார் \ அளி இன்மை ஆற்ற நினைந்து.
1210. விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் \ படாஅதி வாழி மதி.

திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:

Post a Comment