Pages

Friday, 10 June 2016

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 114

114 நாணுத்துறவுரைத்தல்
மடல் ஏறுதல் | மடலேறுதல் | மடலூர்தல் 

கருமத்தால் நாணுதல் நாணு – என்பது திருக்குறள்.
தகாத செயல் செய்வதற்கு நாணுவதே இது.
இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உரிய நாணம்.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை பெண்களிடம் இயல்பாக அமைந்துள்ள பண்புகள்.
இவற்றுள் நாணம் கொள்ளும் நளினத்தால் பெண்கள் ஆண்களைக் கவர்கின்றனர்.

கரும நாணமுடைய அவனும்,
கவிழும் நாணமுடைய அவளும்
இயற்கையின் தாக்கத்தால் இணைந்து விட்டனர்.
உடலாலும் உள்ளத்தாலும் ஒன்று கலந்து விட்டனர்.
இதற்கு உற்றாரும் பெற்றாரும் ஒப்புதல் தரவில்லை.
அவன் தன் நாணத்தை விட்டுவிட்டு மடல் ஏறத் தீர்மானிக்கிறான்.

மடல் என்பது பனை மட்டை.
மா என்பது குதிரை.
பனை மட்டையால் செய்த குதிரையை மடன்மா என்பர்.
இக்காலத்துப் பொய்க்கால் குதிரை ஆட்டம் மடல்மா ஏறும் வழக்கத்தில் மருவி வந்த விளையாட்டு.
மடல்மாவை இடுப்பில் கட்டிக் கொண்டு
அதனைப் பொய்க்கால் குதிரையைப் போல் ஆட்டிக் கொண்டே காதலன் வருவான்.
அவன்மேல் உள்ள துணியில் காதலியின் உருவமோ, பெயரோ எழுதப் பட்டிருக்கும்.
மடன்மாவை ஆட்டும்போது பனை மடலின் கருக்குகள் கிழிக்கும்.
இரத்தம் ஒழுகும்.
அவனது வேதனையையும், படத்தையும் பார்த்து ஊரார் நிலைமையை உணர்ந்து கொள்வர்.
காதலரை இணைத்துத் திருமணம் செய்து வைப்பர்.

திருக்குறளில் அவன் மடலேறுவேன் என்று பேசுகிறான்.

வெண்கலிப்பா
வெண்டலையும், கலித்தளையும் விரவி வந்து
வெண்பாவைப் போல் கடைசிஅடி மூன்று சீர் கொண்டு முடிவது இந்தப் பாடல்
– யாப்பருங்கலம் நூற்பா 85 உரை விளக்கமும் மேற்கோள்களும்

அவளைநான் அடையாத அருங்காம வேதனையால்
துவளுகிறேன் மடலேறத் துடிக்கின்றேன் வழியதுவே 1131
என்னுயிரும் என்னுடலும் என்னமோ போலிருக்க
முன்னிருந்த நாண்விட்டு முடிவெடுத்தேன் மடலேற 1132
நான்கொண்ட நாணுடைமை நல்லாண்மை போனதென்ன
ஏன்காமம் வந்துமடல் ஏறுகநீ என்பதென்ன 1133
காமமெனும் காட்டாற்று வெள்ளமிரு கரைபுரண்டால்
தாமாக நல்லாண்மை தருநாணம் போனதென்ன 1134
பூமாலை பொன்வளையல் போட்டிருப்பாள் என்மாலை
காவெருக்கம் பூவாக்கிக் கருக்குமா தந்தாளே 1135
நாளைக்கு மடலேறப் போகின்ற நப்பாசை
மாலையிர வெல்லாம்கண் மடியாமல் வாழ்கிறதே 1136
கடல்போல் அலைமோதும் காமமவட் கிருந்தாலும்
மடலேறாப் பெருந்தகைமை மகளிர்க்கே வாய்த்ததுவே 1137
தாங்கமுடி யாதபெரும் தடுமாற்றம் கொண்டென்னை
வீங்கியெழுங் காமமது விரிக்கிறதே மன்றினிலே 1138
மற்றவர்க்குத் தெரியாதென் றெண்ணியது மடலேறிச்
சுற்றிவந்து தெருவெல்லாம் சோர்ந்துள்ளம் மருண்டியதே 1139
எனைக்கண்டே எள்ளிடுவார் யாம்படுமோர் பாடறியார்
பனைமாவைப் பார்ப்பதுவோ பாங்கு 1140

திருக்குறள் பாவுரை
அடியேன் செங்கைப் பொதுவன் இயற்றியது 2006

திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்

114 நாணுத் துறவு உரைத்தல்

1131. காமம் உழந்து வருந்தினார்க்கு, ஏம \ மடல் அல்லது இல்லை, வலி.
1132. நோனா உடம்பும் உயிரும், மடல் ஏறும் \ நாணினை நீக்கி நிறுத்து.   
1133. நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன்; இன்று உடையேன், \ காமுற்றார் ஏறும் மடல்.    
1134. காமக் கடும் புனல் உய்க்குமே நாணொடு \ நல் ஆண்மை என்னும் புணை.
1135. தொடலைக் குறுந்தொடி தந்தாள், மடலொடு \ மாலை உழக்கும் துயர்.    
1136. மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற; \ படல் ஒல்லா, பேதைக்கு என் கண்.    
1137. கடல் அன்ன காமம் உழந்தும், மடல் ஏறாப் \ பெண்ணின் பெருந்தக்கது இல்.     
1138. 'நிறை அரியர்; மன் அளியர்' என்னாது, காமம் \ மறை இறந்து, மன்று படும்.    
1139. 'அறிகிலார், எல்லாரும்' என்றே, என் காமம் \ மறுகில் மறுகும், மருண்டு. 
1140. யாம் கண்ணின் காண நகுப, அறிவு இல்லார் \ யாம் பட்ட தாம் படாவாறு.

திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:

Post a Comment