Pages

Friday, 10 June 2016

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 113

பாவுரை
113 காதல் சிறப்பு உரைத்தல்
வால் எயிறு ஊறிய நீர்
இதழின் சுவை அமிழதத்தைக் காட்டிலும் இனிது
வண்ணகம் தழுவிய கொச்சகக் கலிப்பா
தரவு
அவன் உரை
பாலோடு தேன்கலந்து பருகுவது பணிமொழியின்
வாலெயிறு வழிசுவையை வாய்மடுத்தல் போலினிதாம் 1121
உடலோடும் உயிர்க்கென்ன உறவதுவே என்றனுக்கும்
மடந்தைக்கும் இடையோடி மலர்கின்ற நட்பாகும் 1122
கருத்துள்ளே காதலியைக் காட்டுகிற கண்பாவாய்
வருத்துகின்ற என்னவட்கு வாழிடம்தந் தோடிவிடு 1123
அராகம் = வண்ணம் = அடுக்கியல் = முடுகியல்
உயிருடை எனதுயிர் உடனுறை நிலையென
நயமொடு மனமொடு உடலொடு நணுகினள்
அவள்விடில் எனதுயிர் உடல்விடும் அதுசொல
எவர்மனம் இடந்தரும் இனைதரு மறையே1124
தாழிசை
மறந்திட்டால் அவள்குணத்தை மறுபடியும் நினைத்திடலாம்
மறந்திடவே முடியலையே வளர்கின்றாள் மனத்துள்ளே 1125  1
அவள் உரை
கண்ணுக்குள் போகாமல் கண்நின்றும் உருத்தாமல்
நுண்ணியராய்க் காதலவர் நுழைந்திருப்பார் கண்ணுள்ளே 1126 2
மையிட்டுக் கண்ணெழுதேன் கண்ணுக்குள் வாழ்பவரின்
மெய்யழகை விழுங்கிடுமோ என்கின்ற வேட்கையினால் 1127   3
சுடச்சுடவும் தின்பதிலை தோள்மேலார் நெஞ்சுள்ளார்
படப்படென வேகுமெனும் பான்மைசேர் பயத்தாலே 1128  4
கண்ணிமைக்கும் போழ்தினிலே கருவிழியில் மறைவதனால்
பண்ணிருத்தி வாயாலே பகைநண்பர் என்பாரே 1129    5
தனிச்சொல்
எனவாங்கு
சுரிதகம்
மகிழ்வுடன் நெஞ்சுள் மணக்கும் மன்னரை
இகந்து பிரிந்துளார் என்ப
நகையொடு நாணி நடுக்குறும் நெஞ்சே 1130


திருக்குறள் பாவுரை - அடியேன் செங்கைப் பொதுவன் இயற்றியது 2006
திருக்குறள் மூலம் | சொல் பிரிப்புப் பதிவு | இரண்டு அடிகள் ஒரே வரியில்

113 காதல் - சிறப்பு உரைத்தல்

1.       பாலொடு தேன் கலந்தற்றே-பணிமொழி \ வால் எயிறு ஊறிய நீர்!.    1121.    
2.       உடம்பொடு உயிரிடை என்ன, மற்று அன்ன \ மடந்தையொடு எம்மிடை நட்பு.          1122.    
3.       கருமணியின் பாவாய்! நீ போதாய்-யாம் வீழும் திருநுதற்கு இல்லை, இடம்.            1123.    
4.       வாழ்தல் உயிர்க்கு அன்னள், ஆயிழை; சாதல் \ அதற்கு அன்னள், நீங்கும் இடத்து.                1124.    
5.       உள்ளுவன்மன், யான் மறப்பின்; மறப்பு அறியேன், \ ஒள் அமர்க் கண்ணாள் குணம்.                1125.    
6.       கண்ணுள்ளின் போகார்; இமைப்பின் பருவரார்; \ நுண்ணியர் எம் காதலவர்.                1126.    
7.       கண் உள்ளார் காதலவராக, கண்ணும் \ எழுதேம், கரப்பாக்கு அறிந்து.             1127.    
8.       நெஞ்சத்தார் காதலவராக, வெய்து உண்டல் \ அஞ்சுதும், வேபாக்கு அறிந்து.           1128.    
9.       இமைப்பின், கரப்பாக்கு அறிவல்; அனைத்திற்கே, \ 'ஏதிலர் என்னும், இவ் ஊர்.    1129.    
10.   உவந்து உறைவர், உள்ளத்துள் என்றும்; 'இகந்து உறைவர்; \ ஏதிலர் என்னும், இவ் ஊர்.                1130.    

திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:

Post a Comment