இரவு தங்கிச் செல்லலாம்
தலைவி இருக்கும் ஊரில் தலைவனைத் தங்கிச்
செல்லுமாறு தோழி வேண்டுகிறாள்.
1
நெடுவேள் (முருகன், திருமால்) மார்பில் ஆரம் (மணியாரம், மலர்மாலை) இருப்பது போல மீன் உண்ணும், இளங்கால்களைக் கொண்ட கொக்கினம் செவ்வானத்தைத் தொடுவது போன்று பறந்து மகிழும் காலம், பல ஒளிக்கதிர்களைக் கொண்ட ஞாயிறு (சூரியன்) கொஞ்சம் கொஞ்சமாகக் கழித்துவிட்டு மேற்கு மலையை அடைந்திருக்கும் காலம்.
2
இவள் கண்ணில் நீர். அழகு மதமதப்பில் எழிலாகத் தோன்றும் கண். உடல் சாயலில் நாணம். மாட்சிமை நலம் சிதைந்து தேம்புகிறாள் (ஏங்குகிறாள்). இடைவிடாமல் அழத் தொடங்கிவிட்டாள்.
3
பெருமானே! நீ ஏறிவந்த அத்திரி (சவாரிக் குதிரை) நீரில் வரும்போது அதன் காலில் சுறாமீன் தாக்கியது. அதனால் அதன் நடை மெலிந்துவிட்டது. எனவே உன்னோடு வந்திருக்கும் வில்லாளிகளோடு இரவில் இங்குத் தங்கிச் சென்றால் உன் பெருமையில் சிதைந்துபோவது ஏதாவது உண்டோ? (இல்லை)
4
என் ஊர் உப்பங்கழி நாட்டில் உள்ளது. அங்கே நெய்தல் மலர் சிறிய கதிர் (குரல்) போல் பூத்திருக்கும். வெண்மணல் பரப்பில் பனைமரம் இருக்கும். அன்றில் பறவை அதில் இருந்துகொண்டு தன் துணைப்பறவையை அழைத்துக் கூவும். அங்குத் தங்கலாம்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – நெய்தல்
1
நெடு வேள் மார்பின் ஆரம் போல,
செவ் வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும்
பைங் காற் கொக்கினம் நிரை பறை உகப்ப,
எல்லை பைப்பயக் கழிப்பி, குடவயின்
கல் சேர்ந்தன்றே, பல் கதிர் ஞாயிறு 5
2
மதர் எழில் மழைக் கண் கலுழ, இவளே
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல்
மாண் நலம் சிதைய ஏங்கி, ஆனாது,
அழல் தொடங்கினளே பெரும! அதனால்
3
கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி 10
நெடு நீர் இருங் கழிப் பரி மெலிந்து, அசைஇ,
வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது,
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ
4
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை
அன்றில் அகவும் ஆங்கண், 15
சிறு குரல் நெய்தல் எம் பெருங் கழி நாட்டே?
தோழி, பகற்குறிக்கண் தலைமகனை இடத்து உய்த்து
வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று சொல்லியது.
நக்கீரனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்



No comments:
Post a Comment