Pages

Tuesday, 7 June 2016

அகநானூறு Agananuru 116

கூடல் நகரில் பாண்டியனைத் தாக்கிய போரில் சேரனும் சோழனும் தோற்று, தம் போர்முரசுகளைப் போர்களத்திலேயே போட்டுவிட்டு ஓடிவிட்டனர்  


புதியவள் ஒருத்தியோடு நீ நீராடியதை ஊரெல்லாம் பேசுகிறதே, என்கிறாள் அவள், அவனிடம்.

1
உழவர்கள், அறுத்த நெல்லின் அரியை வயலில் தீ எரிவது போலப் பூத்துக் கிடக்கும் தாமரைப் பூக்களுக்கு இடை இடையே வைப்பார்கள். உண்ணும் கள்ளை அவள்கள் வண்டியில் ஏற்றிச்செல்வர். அந்த வண்டி சேற்றில் புதைந்துகொண்டால் கரும்பைச் சேற்றில் அடுக்கி அதன்மேல் வண்டியை ஏற்றி ஓட்டிச்செல்வர். இப்படிப்பட்ட நீர்வளம் மிக்க ஊரின் தலைவனே!
2
நாணம் என்பதே பெருமளவில் இல்லாதவன் நீ. அரிசிப் பொரி போன்ற புன்கம் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் நிலைநீர்த் துறையில் ஒருத்தியோடு நேற்று விடியற்காலம் நீராடினாய் என்கின்றனர்.

  • அவள் முகவெட்டுக்காரி (ஒண்ணுதல்). குறுகி மண்டிய கூந்தலில் மணக்கும் மலர்களைச் சூடியவள். தங்கம் (மாழை) போல் தகதகக்கும் பார்வை கொண்டவள். வயிரமாலை (காழ்) தொங்கும் முலையினை உடையவள். நுட்பமான (எஃகு) எழில் நலம் கொண்டவள்.
3
நீ நீராடினாய் என்பது பொய் என்று சொல்லி நான் மறைத்தேன். அது என் கட்டுப்பாட்டில் நிற்கவில்லை. ஊரெல்லாம் தூற்றப்படுகிறது.
4
மதுரைப் போர்களத்தில் (கூடற் பறந்தலை) யானைமேல் வந்த செழியனை எதிர்த்து இரு பெரு வேந்தர்கள் ஒருங்கிணைந்து (பாண்டியனை எதிர்த்துச் சேரனும், சோழனும்) போரிட்டனர். அவர்களது கடல் போன்ற படை கலங்கியது. செழியன் தாக்கினான். இருபெரு வேந்தரும் தம் போர்முரசைப் போர்க்களத்திலேயே போட்டுவிட்டு ஓடினர். அதனைக் கண்ட வெற்றியாளர்கள் எள்ளி நகையாடினர். அவர்கள் நகையாடி ஆரவாரம் செய்தது போல நீ நீராடியதை ஊரார் எள்ளி நகையாடுகின்றனர்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – மருதம்
1
எரி அகைந்தன்ன தாமரை இடை இடை
அரிந்து கால் குவித்த செந் நெல் வினைஞர்
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின்,
ஆய் கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர!
2
பெரிய நாண் இலை மன்ற; ''பொரி எனப்        5
புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய, ஒள் நுதல்,
நறு மலர்க்காண் வரும் குறும் பல் கூந்தல்,
மாழை நோக்கின், காழ் இயல் வன முலை,
எஃகுடை எழில் நலத்து, ஒருத்தியொடு நெருநை
வைகுபுனல் அயர்ந்தனை'' என்ப; அதுவே,       10
3
பொய் புறம் பொதிந்து, யாம் கரப்பவும், கையிகந்து
அலர் ஆகின்றால் தானே; மலர்தார்,
4
மை அணி யானை, மறப் போர்ச் செழியன்
பொய்யா விழவின் கூடற் பறந்தலை,
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர்     15
கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி,
இரங்குஇசை முரசம் ஒழிய, பரந்து அவர்
ஓடுபுறம் கண்ட ஞான்றை,
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே.


தோழி தலைமகனை வாயில் மறுத்தது.
பரணர் பாடல்


கி.மு. காலத்துப் பாடல்

நெல் அறுத்தல் | அரி அரியாக வைத்தல் 

No comments:

Post a Comment