நல்காது துறந்த காதலர்
அவர் பொருள் தேடச் சென்றிருக்கிறார். என்
உயிர் அவரிடம் சென்றுவிட்டது. என் உடம்புதான் இங்கே இருக்கிறது என்று தலைவி தன் தோழியிடம்
கூறுகிறாள்.
1
அஃதை மன்னனைப் போற்றிக் காப்பாற்றிய கோசர் வாழும் நெய்தலஞ்செறு நன்னாடு போன்ற என் தோளை அவன் மணந்தான் (தழுவினான்).
- நன்மை பெறாத காலத்திலும் நட்புரிமை மாறாமல், நாடிச் சென்று வழிபடும் மாறுபாடு இல்லாத எண்ணம் (சூழ்ச்சி) கொண்டவர்கள் ’இளம்பல் கோசர்’ என்று போற்றப்படும் குடிமக்கள்.
- பெண்யானையைப் பழக்கி அழைத்து ஆண்யானையைப் பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் அந்தக் கோசர் குடிமக்கள்.
- அவர்களின் பெருமகன் அஃதை.
2
அதனால் ஆரவாரம் (அழுங்கல்) மிக்க ஊர் அலர் தூற்றுகிறது. அலரைப் பொருட்படுத்தாமல் என்னை விட்டுவிட்டு என் காதலன் போய்விட்டான்.
3
பாணன் என்னும் மன்னனின் நல்ல நாட்டைத் தாண்டி உம்பர் (அப்பால்) உள்ள நாட்டுக்குச் சென்றுவிட்டார்.
- பாணன் நாட்டுக் குடிமக்கள் கல்லில் ஏறி நடந்து மெலிந்த குதிக்கால் (பரடு) வலிமையால் நடப்பவர்கள்.
- சுரைக்குடுக்கையின் வயிற்றுப்பகுதியில் உணவுப் பொருள்களைக் கொண்டுசெல்லும் பழக்கம் உடையவர்கள்.
- பிறர் புறக்கணித்தாலும் (இகந்தனர்) அவர்களையும் பாதுகாக்கும் பண்புள்ளவர்கள்.
- பகைவர் செய்த நன்மையை எண்ணிப் பார்த்து (இடம் பார்த்து) அவர்களைப் போற்றி வாழ்பவர்கள்.
- அவர்கள் வாழும் குறும்பு (ஊர்) செல்வ வளம் (கூழ்) மிக்கது.
- குவிந்த கொட்டேறி கொண்ட காளைகளை (விடை) வேற்றவர் பசுக்களின் மீது ஏவுவர் (ஒய்யும்).
- கூர்மையும் சுருளும் கனிந்திருக்கும் வலிமை (காழ்) மிக்க நீண்ட வேலை நிறுத்தி விழாக் கொடாடுவர்.
- பல்வேறு புலவுக்கறித் துண்டுகளை (திற்றி) எழுக்கோலில் (எழா) குத்திப் பாதுகாப்பர்.
4
வழியில் செல்லும் புதியவர்களைக் கொன்ற பகைவர்கள், கொன்ற படைக்கருவிகளைக் கழுவிய சிறிதளவு சிவந்த நீரும் அற்றுப் போய்விட்ட துறையில் நுண்மணல் (அயிர்) இருக்கும் கரையில் சென்று அவர் தொலைநாட்டவர் (சேயர்) ஆகிவிட்டார் என்று கூறுகின்றனர். அதனால் என் நெஞ்சம் பற்றுக்கோடு இல்லாமல் (கையற்று) துன்புறுகிறது. அந்தத் துன்பம் (எவ்வம்) நீங்க, நான் அழாமல் இருக்கிறேன். ஆனால்,
5
பருமரக் கிளையில் இருக்கும் கூடு (குடம்பை) தனித்துக் கிடக்க விட்டுவிட்டுப் பறவை பறந்து போய்விடுவது போல, என் உடம்பை இங்கே விட்டுவிட்டு என் உயிர் அவர் பொருள் தேடி வினையாற்றும் இடத்துக்குச் சென்றுவிட்டது.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – பாலை
1
நன்று அல் காலையும் நட்பின் கோடார்,
சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின்,
புன் தலை மடப் பிடி அகவுநர் பெருமகன்
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி,
காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர் 5
இளங் கள் கமழும் நெய்தல்அம் செறுவின்
வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள் மணந்து,
2
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற,
நல்காது துறந்த காதலர், ''என்றும்
3
கல் பொரூஉ மெலியாப் பரட்டின் நோன் அடி 10
அகல்சூல் அம் சுரைப் பெய்த வல்சியர்
இகந்தனர் ஆயினும், இடம் பார்த்துப் பகைவர்
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில்
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும்
கனை இருஞ் சுருணைக் கனி காழ் நெடு வேல் 15
விழவு அயர்ந்தன்ன கொழும் பல் திற்றி
எழாஅப் பாணன் நல் நாட்டு உம்பர்,
4
நெறி செல் வம்பலர்க் கொன்ற தெவ்வர்
எறிபடை கழீஇய சேயரிச் சில் நீர்
அறுதுறை அயிர் மணற் படுகரைப் போகி, 20
சேயர்'' என்றலின், சிறுமை உற்ற என்
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க,
அழாஅம் உறைதலும் உரியம் பராரை
5
அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப்
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு, 25
மெய் இவண் ஒழியப் போகி, அவர்
செய்வினை மருங்கில் செலீஇயர், என் உயிரே!
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச்
சொல்லியது.
கல்லாடனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment