வன்புலக் காட்டில் அவள் ஊர்
அவள் தனக்காகக் காத்திருக்கும் ஊர் இருக்குமிடத்தைத்
தலைவன் தன் தேர்ப்பாகனுக்குச் சொல்கிறான்.
1
தேன் கூடு கட்டியிருக்கும் மலை-உச்சி. முசுண்டைப் பூ வானம் போல, குலை குலையாக, (குவை) பூத்துக் கிடக்கும் அதன் பகுதி. நள்ளிரவு நேரம் (பானாள் கங்குல்). நரியிடமிருந்து காப்பாற்றச் செம்மறியாட்டுக் குட்டிகளைத் தூக்கிக்கொண்டு வந்து பாதுகாப்பாக ஓரிடத்தில் இடையன் மூடிவைக்கிறான். முல்லை, தோன்றி ஆகிய பூக்களைச் சேர்த்துக் கண்ணியாகத் தொடுத்து அவன் தலையில் சூடிக்கொண்டிருக்கிறான். அந்தப் பூவில் தேன் உண்ணும் வண்டுகள் மொய்க்கின்றன.
2
அவன் தன் கையில் நரியை ஓட்டுவதற்காகக் கொள்ளிக் கட்டையை வைத்திருக்கிறான். ஆட்டுக் குட்டியைக் கவர வரும் நரிகள் உளம்பி ஊளையிடுகின்றன. வயலில் இருக்கும் விளைச்சலை உண்ணக் காட்டுப் பன்றிகள் வருகின்றன. அவற்றை முடுக்குவதற்காக அவன் கொம்பு (கருங்கோடு) ஊதுகிறான். நரி உளம்பும் ஊளை ஒலியும், புனம் காப்பவன் ஊதும் கொம்பின் ஒலியும் சேர்ந்து அங்குக் கேட்கின்றன.
3
இப்படி இரண்டு ஒலியும் சேர்ந்து கேட்கும் வறட்டு நிலத்தில்தான் அவள் ஊர் இருக்கிறது. இருண்ட கூந்தலும், திருந்திய அணிகலன்களும் கொண்டிருக்கும் அவளது ஊர் இருக்கிறது. அங்கு விரைந்து செல்ல வேண்டும்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – முல்லை
1
தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய,
வான் எனப் பூத்த பானாட் கங்குல்,
மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன்
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ, 5
வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன்,
2
ஐது படு கொள்ளி அங்கை காய,
குறு நரி உளம்பும் கூர் இருள் நெடு விளி
சிறு கட் பன்றிப் பெரு நிரை கடிய,
முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும் 10
கருங் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும்
3
வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து
இரும் பல் கூந்தல், திருந்திழை ஊரே!
வினை முற்றி மீளும்
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது;
தலைமகன் பாங்கற்குச் சொற்றதூஉம்
ஆம்.
நன்பலூர்ச் சிறு மேதாவியார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்



No comments:
Post a Comment