Pages

Monday, 23 May 2016

அகநானூறு Agananuru 93

உறந்தை - கூடல் - கருவூர்


சோழன் உறந்தை போலப் பொருளை ஈட்டிவிட்டோம். வழுதி கூடல் நகரத்துக் கடைத்தெருவைப் போல அவள் நெற்றியும் கூந்தலும் மணக்கின்றன. கோதை அரசன் கருவூர் ஆற்று மணலின் எண்ணிக்கையைக் காட்டிலும் பலமுறை அவளைத் தழுவ வேண்டும் – என்கிறான், தலைவன்.
1
பொருள் தேடச் செல்வது எதற்காக? தலைவன் சொல்கிறான். உறவினர் கேடுற்றிருக்கும் நிலைமையைப் போக்கவும், நலமுடன் இருக்கும் உறவினர் மேலும் துய்த்து இன்புறவும், உறவினர் அல்லாதவர் உறவினராக வந்து சேர்ந்துகொள்ளவும் பொருள் தேடிவரும் முனைப்பில் ஈடுபட்டுள்ளேன்.
2
ஆத்தி மாலை சூடியவரும், பகைவரை அழிக்கும் போரில் வல்லவருமான சோழர் அறநெறியை  அரசவையில் நிலைநாட்டிக்கொண்டு அரசாள்கின்றனர். அவர்களின் தலைநகர் உறந்தை (உறையூர்) போல அடைய முடியாத செல்வத்தை ஈட்டிக்கொண்டு வந்து, நாம் விரும்பும் செயலை நிறைவேற்றப் போகிறோம். மேலும் என்ன செய்யவேண்டும்?
3
முரண்பட்ட படையுடன் சென்று கோட்டைகள் பலவற்றை வென்ற, வாடாத வேப்பமாலையைச் சூடியவன் வழுதி. அவன் தலைநகர் கூடல். கூடலின் பகல் கால அங்காடித் தெருவில் மணம் கமழ்வது போல மணக்கும் நெற்றியையும் கூந்தலையும் உடையவள் என் காதலி மாயோள்.
4
நமது இல்லம் (நகர்) மலையைக் குடைந்திருப்பது போல வானளாவ உயர்ந்து காணப்படுவது. அதில் நீர் நுரையை முகந்து வைத்தது போன்ற மென்மையான பூ விரித்த மெத்தை. உயரமான கட்டில். நீண்டு சுடர்விட்டு எரியும் விளக்கு. அவள் மார்பிலும் என் மார்பிலும் பூண். இந்தப் பூண்களின் வடு பதியுமாறு இருவரும் இறுக்கமாகக் கட்டித் தழுவுவோம். நெஞ்சே! புறப்படு. அவளிடம் செல்வோம்.
5
புள்ளிகளைக் கொண்ட நெற்றி, ஊற்று (வயம்) போல் இறங்கி வாயில் புகும் மதநீர் (கடாம்), மீளி (எமன்) போன்ற வலிமை ஆகியவற்றைக் கொண்ட யானை. கையால் நிலத்தை அள்ளித் தன்மீது வீசிக்கொண்டு வரும் யானை. பகையாளியைப் பிடித்து வீசிக்கொண்டு வரும் யானை. உயரமான தேர். யானையும் தேரும் கொண்டவன் அரசன் கோதை. செல்வம் நிறைந்திருக்கும் கோதையின் தலைநகர் கருவூர். கருவூரில் உள்ள ஆற்றுத்துறை. ’தண் ஆன் பொருநை’ ஆற்றுத்துறை. அதில் ஓடும் நெளிந்த நீர் குவித்த கரைமணல். அந்த மணலின் எண்ணிக்கையைக் காட்டிலும் பலமுறை அவளைத் தழுவ வேண்டும்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – பாலை
1
கேள் கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும்,
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து;
2
ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர்
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன   5
பெறல் அரு நன் கலம் எய்தி, நாடும்
செயல் அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்;
3
அரண் பல கடந்த, முரண் கொள் தானை,
வாடா வேம்பின், வழுதி கூடல்
நாள் அங்காடி நாறும் நறு நுதல்     10
நீள் இருங் கூந்தல் மாஅயோளொடு,
4
வரை குயின்றன்ன வான் தோய் நெடு நகர்,
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை
நிவந்த பள்ளி, நெடுஞ் சுடர் விளக்கத்து,
நலம் கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப,            15
முயங்குகம் சென்மோ நெஞ்சே! வரி நுதல்
5
வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து,
மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி,
ஆள் கோள் பிழையா, அஞ்சுவரு தடக் கை,
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் கோதை 20
திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை.
தெண் நீர் உயர் கரைக் குவைஇய
தண் ஆன்பொருநை மணலினும் பலவே.

வினை முற்றி மீளலுறும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

பொருள் தேடு
அக்கால மெத்தை

No comments:

Post a Comment