என் காதலி குணம்
திருவேங்கட மலையைத் தாண்டிப் பொருள் தேடச்
செல்கையில் தலைவன் தன் தலைவியின் பண்பை எண்ணி வியக்கிறான்.
1
புல்லி என்பவன் வேங்கட நாட்டு அரசன். அவன்
நாட்டு இளைஞர்கள், நன்னெறி கல்லாத இளைஞர்கள் ஆண்யானைக் கன்றுகளைப் பிடித்துவருவார்கள்.
மராம் மரத்தைப் பிளந்து அதன் வெண்ணிற நாரில் கட்டி இழுத்துக்கொண்டு வருவார்கள். கள்
விற்பவர் இல்லத்து நிலைக்காலில் கட்டிவைத்துவிட்டு விளையாடுவர். கன்றை இழந்து, கறை
படிந்த அடிகளைக் கொண்ட பெண்யானை கதறுவதைப் பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். அந்தச்
சிறுவர்கள் காடெல்லாம் மணக்கும்படி மராமரப் பூவைத் தம் சுட்டைமயிருள்ள தலையில் சூடிக்கொண்டிருப்பர்.
மராம் பூ வலப்புறமாகச் சுழன்றிருக்கும் இதழ்களைக் கொண்டது.
இப்படிப்பட்ட வேங்கட நாட்டைத் தாண்டி நான்
சென்றாலும்,
2
’அவர் தொலைவில் இருக்கிறார்’ – என்று கருதாத
பண்பினையும், அன்பினையும் கொண்டவள் அவள். அவளை நான் என்னவளாக அடையப் பெற்றிருக்கிறேன்.
மொட்டு விடும் நெய்தல் மலர் போன்ற ஈரமான அவள் கண்பார்வை என்மேல் விழுந்துள்ளது.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – பாலை
1
வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச்
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,
கறை அடி மடப் பிடி கானத்து அலற,
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி சிறந்து,
கருங் கால் மராஅத்துக் கொழுங் கொம்பு பிளந்து, 5
பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி,
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்,
நறவு நொடை நல் இல் புதவுமுதற் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும், 10
2
சேயர் என்னாது, அன்பு மிகக் கடைஇ,
எய்த வந்தனவால் தாமே நெய்தல்
கூம்பு விடு நிகர் மலர் அன்ன
ஏந்து எழில் மழைக் கண் எம் காதலி குணனே.
தலைமகன் இடைச் சுரத்துத்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
கல்லாடனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment