Pages

Sunday, 29 May 2016

அகநானூறு Agananuru 105

எழினி அரசன் காட்டு வழி


வேனில் காலத்தில், வேங்கை பூத்திருக்கும் காட்டில், என் மகள் எவ்வாறு நடந்து செல்கிறாளோ, என்று காதலனுடன் சென்ற தன் மகளைப் பற்றி நினைத்துக்கொண்டு செவிலித்தாய் வருந்துகிறாள்.

1
அகன்ற பாறைக்கு அருகில் வேங்கை மரம் அரும்பு விட்டு முதிர்ந்திருக்கும். அதனை இலைகளோடு பறித்துத் தொடலைமாலை கட்டி இருவரும் அணிந்துகொள்வர். அவன் மலைநாடன். அவளைப் பாராட்டுவான். அந்தக் காட்டில் நடக்கும் வலிமை அவளுக்கு (என் மகளுக்கு) இருக்குமோ இருக்காதோ?
2
அவளுக்குப் பெற்றெடுக்காத தாய்மார் பலர். மணிக்கல் பதித்த மண்டைக்கிண்ணத்தில் அவர்கள் அவளுக்குப் பால் ஊட்டும்போது உண்ணாமல் ஓடுவாள்.
3
நிழல் இருக்கும் குளத்திலுள்ள நீர் போல நிறைந்த செல்வம் கொண்டது அவளது அரண்மனை (நீள்நகர் வைப்பு). அதில் இருக்கும் செல்வத்தை அவள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
4
பந்து அடிப்பது போன்ற பாணியுடன் அடி வைத்துத் தாவும் குதிரைகளை உடையவன் ‘பல்வேல் எழினி’. வேந்தன் விடுத்த கட்டளையை நிறைவேற்றுவதற்காக, கறக்கச் சுறக்கும் மடி கொண்ட பசுவும் காளைகளும் கொண்ட ஆனிரைகளை அவன் கைப்பற்றி வந்தான். வெயில் காய்ந்து கல்லில் சூடு பறக்கும் காட்டில் கைப்பற்றி வந்தான். தேனைப் பிழிந்த கள்ளை உண்டு வில்லாண்மையில் சிறந்து விளங்கும் மறவர்களின் போர்முனையைக் கடந்து கைப்பற்றி வந்தான். அவனது காட்டு வழியில் நடக்க வல்லவளோ?

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – பாலை
1
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை
ஒள் இலைத் தொடலை தைஇ, மெல்லென
நல் வரை நாடன் தற்பாராட்ட
யாங்கு வல்லுநள்கொல் தானே தேம் பெய்து,
2
மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி,     5
ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள்,
3
நிழற் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின்
எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம் மருண்டு,
4
பந்து புடைப்பன்ன பாணிப் பல் அடிச்
சில் பரிக் குதிரை, பல் வேல் எழினி       10
கெடல் அருந் துப்பின் விடுதொழில் முடிமார்,
கனை எரி நடந்த கல் காய் கானத்து
வினை வல் அம்பின் விழுத் தொடை மறவர்
தேம் பிழி நறுங் கள் மகிழின், முனை கடந்து,
வீங்கு மென் சுரைய ஏற்றினம் தரூஉம்    15
முகை தலை திறந்த வேனிற்
பகை தலைமணந்த பல் அதர்ச் செலவே?

மகட் போக்கிய தாய் சொல்லியது.
தாயங்கண்ணனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


உடன்போக்கு (மேலைநாடு, இக்காலம்) 

No comments:

Post a Comment