பெரியன் புன்னையங் கானலில் வம்ப நாரை
நீ பகலில் வந்து என்னோடு இருந்துவிட்டுப்
பகலிலேயே போய்விடுவது எனக்கு இன்பமாகத்தான் இருக்கிறது. ஆனால், ஊர் மக்கள் அம்பல் பேசுகின்றனரே!
என்ன செய்வேன் என்று தலைவி தலைவனிடம் கூறி நொந்துகொள்கிறாள்.
1
அரைத்த சந்தனம் பூசிக்கொண்டு மேன்மைக்காகப் பூ மாலை அணிந்துகொண்டிருக்கும் மார்பினை உடையவன் நீ.
2
பகலில் இங்கு வந்து உனது, எனது ஆகிய இரண்டு மார்பகங்களிலும் பதிவு உண்டாகும்படித் தழுவி வெளிச்சம் இருக்கும்போதே நீ பிரிந்து போய்விடுதல் எனக்கு இனியதுதான்.
3
கடலில் திரை முழக்கம் குறைந்து, இரவில் கீழைக்காற்று வீசும்போது, மீன் பிடிப்பவர் கடலுக்குள் செல்வர். விளக்கு வைத்துக்கொண்டு செல்வர். அது இரவு வேளையில் போர்வேந்தன் பாசறையில் இருக்கும் யானை அசைந்தாடுகையில் அதன் நெற்றியில் இருக்கும் ஓடை மின்னுவது போல இருக்கும்.
4
புன்னை மரங்கள் மிகுதியாக இருக்கும் ‘புன்னையங்கானல்’ என்னும் கடல்சார் சோலையைக் கொண்ட ஊர் புறந்தை. இந்த ஊரில் இருந்துகொண்டு பாடுபவர்களை எல்லாம் தடுத்து நிறுத்தி, குதிரைகளையும் தேர்களையும் வழங்கும் கைவளம் படைத்த கோமகன் பெரியன்.
5
அவன் ஊரில் புதிய நாரை இனங்கள் (வெளிநாடுகளிலிலுந்து வந்த புதிய நாரைக்கூட்டம்) ஒலிப்பது போல ஊர் நம் உறவு பற்றிக் காதோடு காதாகப் பேசுகிறது.
6
பொழுது புலரும் விடியற்காலத்திலேயே சென்ற எருமை நெய்தல் பூக்களை மேயும். தாழம்பூ பூத்துக் கிடக்கும் நீர்ச்சோலையில் மேயும். இப்படிப்பட்ட ஊரில் வாழும் மக்கள் அம்பல் பேசுகின்றனர். நான் என்ன செய்வேன்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – நெய்தல்
1
அரையுற்று அமைந்த ஆரம் நீவி,
புரையப் பூண்ட கோதை மார்பினை,
2
நல் அகம் வடுக் கொள முயங்கி, நீ வந்து,
எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே.
3
பெருந் திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த 5
கொண்டல் இரவின் இருங் கடல் மடுத்த
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர்
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை,
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த
ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும் 10
4
பாடுநர்த் தொடுத்த கை வண் கோமான்,
பரியுடை நல் தேர்ப் பெரியன், விரிஇணர்ப்
புன்னைஅம் கானல் புறந்தை முன்துறை
5
வம்ப நாரை இனன் ஒலித்தன்ன
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர் 15
6
வைகுறு விடியல் போகிய எருமை
நெய்தல் அம் புது மலர் மாந்தும்
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே!
தோழி வரைவு கடாயது.
உலோச்சனார்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment