Pages

Sunday 6 December 2015

அகநானூறு Agananuru 48

நும் வாய் பொய்யும் உளவோ


இவள் பசலை நிறம் பெற்றுத் துன்புறுகிறாளே, ஏன் என்று செவிலி கேட்டாள். எனக்கும் தெரியவில்லை. என்றாலும் ஒன்றை எண்ணவேண்டியுள்ளது. அன்று ஒருநாள் பூப் பறிக்கச் சென்றபோது பூத்திருக்கும் வேங்கையைப் பார்த்துப் ‘புலி புலி’ என்று கூச்சலிட்டோம். ஒருவன் வந்தான். தேற்றினான். சென்றான். அவன் சென்ற திசையைப் பார்த்து “இவன்தான் ஆண்மகன்” என்று சொல்லி எனக்குக் காட்டினாள். மதிநுட்பம் கொண்டோர் இதனை எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது – என்று கூறித் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றதைக் கூறும் பாடல் இது.
1
அன்னையே! வாழ்க! என வேண்டுவோம். உன் மகள் பாலும் உண்ணவில்லை. துன்பப்பட்டுக்கொண்டே இருக்கிறாள். மேனியில் பசப்பு உர்ந்துகொண்டிருக்கிறது. காரணம் என்ன என்று என்னைக் கேட்கிறாள். அதற்குக் காரணம் எனக்கும் தெளிவாகத் தெரியவில்லை. என்றாலும் அன்று நிகழ்ந்த ஒன்று உண்டு.
2
தோழிமாரோடு மலைச்சாரலில் பூப் பறிக்கச் சென்றோம். அங்கே வேங்கை மரம் பூத்திருந்தது. புள்ளி புள்ளியாகக் காணப்பட்ட அதனைப் பார்த்துப் ‘புலி புலி’ என்று கூவினோம்.
3
ஒருவன் ஓடிவந்தான். அவன் செங்கழுநீர்ப் பூக்களை ஊசிநூலில் கோத்த மாலையைக் கழுத்தில் அணிந்திருந்தான். தலைமுடியை ஒருபக்கமாகமாகச் சாய்த்து முடிந்திருந்தான். அதில் சிவப்புநிறப் பூக்களைத் தலையணி மாலையாகச் சூடியிருந்தான். குயம் கொழுகொழுப்பாக இருந்த மார்பகத்தில் சந்தனம் பூசியிருந்தான். வில்லில் அம்பு ஒன்றைத் தொடுத்து வளைத்துப் பிடித்துக்கொண்டிருந்தான். “எங்கே அந்தப் புலி விலங்கு. அது இருக்குமிடத்தைக் காட்டுங்கள்” என்று வினவிக்கொண்டு எங்கள் முன் நின்றான்.  
செச்சை = சிவப்பு
குயம் = ஆணின் மார்பு, முலை = பெண்ணின் மார்பு
4
அவனைப் பார்த்ததும் எங்களுக்கு நாணம் வந்துவிட்டது. ஒவ்வொருவரும் அவரவர் உடம்புக்குள் அவரவர் உடம்பை மறைத்துக்கொண்டு நாணி நின்றோம்.
5
அவன் பேசினான். மடவீர் என்றான். ஐந்து வகையாகப் பிரித்து முடித்த கூந்தலை உடையவர்களே, என்றான். அழகிய நெற்றி கொண்டவர்களே என்றான். மழைமேகம் போல ஈரம் மினுக்கும் கூந்தலை உடையவர்களே என்றான். உங்கள் வாயில் பொய்யும் வருமா என்றான்.
மடவீர் = மடமை கொண்டவர்களே
(மடம் = கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை.
அறிவுரைகளை வாங்கிக்குண்டு அறியாதவராய்ச் செயல்படுதல்)
6
தேரில் பூட்டியிருந்த குதிரைகளை நிறுத்தினான். இறங்கி நின்ற அவன் உன் மகளின் கண்களைப் பார்த்தான். திரும்பத் திரும்பப் பார்த்தான். பின் சென்றுவிட்டான். அவன் அந்தக் குன்றத்துக்கு உரியவன், தலைவன்.
7
பகல் மறைந்து பொழுது சாயும் நேரம். அவன் சென்று மறைந்த திசையைப் பார்த்துக்கொண்டு உன் மகள் நின்றாள். “ தோழி! இவன்தான் ஆண்மகன்” என்று என்னிடம் கூறினாள். இதில் ஏதோ இருக்கிறது என்று அறிவுடையவர்களுக்குத் தெரியுமே.

சாரம்


பாடல்
சொல் பிரிப்புப் பதிவு
திணை -  குறிஞ்சி
1
'அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள்,
'பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு,
நனி பசந்தனள்' என வினவுதி. அதன் திறம்
யானும் தெற்றென உணரேன். மேல் நாள்,
2
மலி பூஞ் சாரல், என் தோழிமாரோடு 5
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி,
'புலி புலி!' என்னும் பூசல் தோன்ற
3
ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ்
ஊசி போகிய சூழ் செய் மாலையன்,
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்,10
குயம் மண்டு ஆகம் செஞ் சாந்து நீவி,
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு,
'யாதோ, மற்று அம் மா திறம் படர்?' என
வினவி நிற்றந்தோனே. அவற் கண்டு,
4
எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி,    15
நாணி நின்றனெமாக, பேணி,
5
'ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்
மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப்
பொய்யும் உளவோ?' என்றனன். பையெனப்
6
பரி முடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து,      20
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கிச்
சென்றோன் மன்ற, அக் குன்று கிழவோனே.
7
பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து,
அவன் மறை தேஎம் நோக்கி, 'மற்று இவன்
மகனே தோழி!' என்றனள்.            25
அதன் அளவு உண்டு கோள், மதிவல்லோர்க்கே.    

செவிலித்தாய்க்குத் தோழி அறத்தொடு நின்றது.
தங்கால் முடக் கொற்றனார் பாடியது

“She is not well in mind, do you know”, the nursing mother asks friend-maid of the heroine lady. The friend-maid reveals some hints. 
Once we went to gather flower to wear. There, we saw Vengai-tree with flowers. It resembles doted tiger. “Tiger, tiger”, we cried. 
A man appears. He is wearing a garland made of water-lily on his chest. His hair-knot was decorated with sting made of red-flowers. He has applied Sandal past in his chest to smell sweetly. He bears shooting arrow in his bow. He spoke. “Where is the tiger beast, show me to drive away”. We stood ashamed. He continued. “You, girls of beauty, is there lie in your words, I wonder”. Then he disappeared. He is the ruler of the mountain. Then your daughter pointed the direction to me where he disappeared and said “he is really a Man”. Here is some information wise can read.  

A poem by: Kotranar, a lame, of Tangal village.   
The text is belongs to second century B.C. or earlier.  

வில்லும் அம்பும் ஏந்திக்கொண்டு வந்தான் 

2 comments:

  1. மிகவும் அருமையான விளக்கம். நன்றி

    ReplyDelete
    Replies
    1. சங்ககாலத் தமிழை எளிமையாக்கிப் புரிந்துகொள்வது நம் கடமை

      Delete