Pages

Sunday, 18 October 2015

ஐங்குறுநூறு AinguruNuru 21-30 களவன் பத்து

களவன் பத்து

மருதம்

களவன் என்பது நண்டு.
நண்டு விளையாடுவதையும், நண்டை விளையாடும்படிச் செய்தும் வேடிக்கை பார்ப்பது இளமைப் பருவத்து வழக்கம்.
தலைவன் ஊர் நண்டு இப்படியெல்லாம் விளையாடும் என்று இந்தப் பத்துப் பாடல்களும் தெரிவிக்கின்றன.
நண்டின் செயல் தலைவன் செய்யும் செயல் போல் உள்ளது எனக் கண்டுகொள்வது இறைச்சிப் பொருள்.
தலைவியின் தாயை ‘அன்னாய்’ என விளித்துத் தோழி கேட்பதாகப் பாடல்கள் அமைந்துள்ளன.

Crabs living in mud-hole cut the crops and flowers to bury to eat. The hero of the clandestine love is the Man of the field-track of such kind. Felling on his relationship, the heroine, the lady of the narrator, the friend-maid reveals the relationship between her lady and her lover to the mother of of the lady.
She asks the mother of the lady why her lady-friend vanishing her beauty for him.
The questions are different ways of expressions convey one and the same meaning.
This is a kind of rhetoric expression.  

ஐங்குறுநூறு மூன்றாம் பத்து
பாடல் – 21-30
களவன் பத்து
புலவர் – ஓரம்போகியார்
திணை – மருதம்

பாடல் சொல் பிரிப்புப்பதிவு

21
          
முள்ளி நீடிய முது நீர் அடைகரைப்
புள்ளிக் களவன் ஆம்பல் அறுக்கும்
தண் துறை ஊரன் தெளிப்பவும்,
உண்கண் பசப்பது எவன்கொல்? அன்னாய்!'

முள்ளி என்னும் தாமரை பூத்திருக்கும் ஊரன் அவன்
ஆற்றுத் துறையில் வாழும் நண்டு ஆம்பல் பூக்களை அறுத்தெரிகிறது.
ஊரன் திருமணம் செய்துகொள்வேன் என்று தெளிவுபடுத்திவிட்டான்.
அப்படி இருக்கும்போது அவனை நினைத்து அவனைப் பார்க்கவேண்டும் என்று பசபசக்கிறதே, ஏன்?

'புறத்தொழுக்கம் எனக்கு இனி இல்லை' என்று தலைமகன் தெளிப்பவும், 'அஃது உளது' என்று வேறுபடும் தலைமகட்குத் தோழி சொல்லியது. 1

22      
அள்ளல் ஆடிய புள்ளிக் களவன்
முள்ளி வேர் அளைச் செல்லும் ஊரன்
நல்ல சொல்லி மணந்து, 'இனி
நீயேன்' என்றது எவன்கொல்? அன்னாய்!'

ஊரன் ஊரின் சேற்று வளையில் விளையாடும் நண்டு
அங்கிருக்கும் தாமரைக் கொடிகளை அறுத்தெரிகிறதே!
நல்ல சொல் பேசிய அவன்
இப்பாது ‘நீ எதற்கு’ என்று இருக்கிறானே!

களவினில் புணர்ந்து. 
பின்பு வரைந்து கொண்டு ஒழுகாநின்றதலைமகற்குப் 
புறத்தொழுக்கம் உளதாயிற்றாக, 
ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 2

23

முள்ளி வேர் அளைக் களவன் ஆட்டி,
பூக் குற்று, எய்திய புனல் அணி ஊரன்
தேற்றம் செய்து நப்புணர்ந்து, இனித்
தாக்கு அணங்கு ஆவது எவன்கொல்? அன்னாய்!

தாமரை வேரில் இருக்கும் நண்டை
நம்மோடு சேர்ந்து விளையாடச் செய்தும்,
பூக்களைப் பரித்துத் தந்தும்
என்னைத் தழுவிக் கூடினான்.
இப்போது என் நெஞ்சை வருத்தும் தெய்வமாகி இருப்பது ஏன்?

இதுவும் அது. 3

24   
       
தாய் சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு
பிள்ளை தின்னும் முதலைத்து அவன் ஊர்
எய்தினன் ஆகின்று கொல்லோ? மகிழ்நன்
பொலந் தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
நலம் கொண்டு துறப்பது எவன்கொல்? அன்னாய்! 5

தாயைச் சாகடித்து விட்டு குட்டி நண்டுகள் பிறக்கும்.
முதலை தான் பெற்ற பிள்ளையைத் தானே தின்னும்.
மகிழ்நன் ஊர் அப்படிப்பட்டது.
என் கைகள் வளையல் குலுங்க அவனைத் தழுவின.
அதன் இன்ப நலத்தை நினைத்துக்கொண்டு
அவன் இல்லாதபோது கழல்கின்றன.
ஏன்?

'பரத்தையருள்ளும் ஒருத்தியை விட்டு 
ஒருத்தியைப் பற்றி ஒழுகுகின்றான்' 
என்பது கேட்ட தோழி, 
வாயிலாய் வந்தார் கேட்ப, 
தலைமகட்குச் சொல்லியது. 4

25          

புயல் புறந்தந்த புனிற்று வளர் பைங் காய்
வயலைச் செங் கொடி களவன் அறுக்கும்
கழனி ஊரன் மார்பு பலர்க்கு
இழை நெகிழ் செல்லல் ஆக்கும் அன்னாய்!

மழை பொழிந்து
காய் காய்க்கும் செந்நிற வயலைக் கொடியை
வயல் நண்டு அறுத்து விடும்.
இப்படிப்பட்ட வயலை உடையவன் ஊரன்.
அவன் மார்பு
பல மகளிரின் அணிகலன்களைக் கழன்று விழச் செய்து
அவர்களைத் துன்பத்தில் ஆழ்த்தும்.

இதுவும் அது. 5

26          

கரந்தைஅம் செறுவில் துணை துறந்து, களவன்
வள்ளை மென் கால் அறுக்கும் ஊரன்
எம்மும், பிறரும், அறியான்;
இன்னன் ஆவது எவன்கொல்? அன்னாய்!

வயலிலே கரந்தை வளர்ந்திருக்கும்.
அந்த வயலில் இருக்கும் வள்ளைக் கொடியின் மெல்லிய கால்களை
நண்டு அறுத்து விடும்.
இப்படிப்பட்ட வயலை [சேறு] உடையவன் ஊரன்.
அவன் என்னையும் நினைப்பதில்லை.
பிறரையும் தெரிந்துகொள்வதில்லை.
இப்படி இருக்கிறானே, ஏன்?

தலைமகற்கு வாயிலாகப் புகுந்தார், 
'நின் முனிவிற்கு அவன்பொருந்தாநின்றான்' என்றவழி, 
தலைமகட்குத் தோழி, 
'அவன்பாடு அஃது இல்லை' என்பதுபடச் சொல்லியது. 6

27          

செந்நெல்அம் செறுவில் கதிர் கொண்டு, களவன்
தண்ணக மண் அளைச் செல்லும் ஊரற்கு
எல் வளை நெகிழச் சாஅய்,
அல்லல் உழப்பது எவன்கொல்? அன்னாய்!

வயலில் விளைந்திருக்கும் நெற்கதிர்களை
நண்டு கொண்டு சென்று தன் மண்வளையில் பதுக்கிக்கொள்ளும்.
இப்படிப்பட்ட வயலை உடையவன் ஊரன்.
அவனுக்காக என் வளையல்கள் கழன்று துன்புறுகின்றனவே, ஏன்?

தலைமகன் மனைக்கண் வருங்காலத்து வாராது தாழ்த்துழி, 'புறத்தொழுக்கம் உளதாயிற்று' எனக் கருதி 
வருந்தும் தலைமகட்குத் தோழி சொல்லியது7.

28          

உண்துறை அணங்கு இவள் உறை நோய் ஆயின்,
தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு
ஒண் தொடி நெகிழச் சாஅய்,
மென் தோள் பசப்பது எவன்கொல்? அன்னாய்!

நண்டு சேற்றில் கோடு போடும் ஊரை உடையவன் அவன்
நீர் உண்ணும் துறையில் இவளுக்கு வருத்த நோய் என்றால்,
இவளது தோள்வளையல் கழன்று
இவளது தோளில் பசபசக்கும் ஊறல் ஏன்?

இற்செறிவித்த இடத்துத் தலைமகட்கு எய்திய வேறுபாடு கண்டு, 
'இது தெய்வத்தினான் ஆயிற்று' என்று, 
தமர் வெறி எடுப்புழி, 
அதனை விலக்கக் கருதிய தோழி 
செவிலிக்கு அறத்தொடு நின்றது. 8

29          

மாரி கடி கொள, காவலர் கடுக,
வித்திய வெண் முளை களவன் அறுக்கும்
கழனி ஊரன் மார்பு உற மரீஇ,
திதலை அல்குல் நின் மகள்
பசலை கொள்வது எவன்கொல்? அன்னாய்!                 5

மழை பொழிந்து காப்பாற்றுகிறது.
வயல் காவலர்கள் நடமாட்டமும் இருக்கிறது.
இருந்தும் வயலில் விதைத்த நெல்முளையை நண்டு அறுத்துக்கொண்டு செல்கிறது.
இப்படிப்பட்ட வயல் கொண்ட ஊரன் அவன்.
அவன் மார்பை உன் மகள் தழுவினாள்.
அதற்காக கோடுகள் இருக்கும் அல்குல் கொண்ட உன் மகள்
பசப்பு ஊர வேண்டுமா?

வரைவு எதிர்கொள்ளார் தமர் அவண் மறுப்புழி, 
தோழி செவிலிக்கு அறத்தோடு நின்றது. 9

30          

வேப்பு நனை அன்ன நெடுங் கண் களவன்
தண்ணக மண் அளை நிறைய, நெல்லின்
இரும் பூ உறைக்கும் ஊரற்கு இவள்
பெருங் கவின் இழப்பது எவன்கொல்? அன்னாய்!

நண்டுக்கு வேப்பம்பூ போன்ற கண்.
அதன் வையில் இருப்பதோ நெற்கதிர்ப் பூக்கள்.
அப்படிப்பட்ட வயலை உடையவன் ஊரன்.
அவனுக்காக இவள் அழகை இழப்பது ஏன்?

இதுவும் அது. 10

களவன் / நண்டு

No comments:

Post a Comment