Pages

Tuesday, 2 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 328

328. நெய்தல்

சிறு வீ ஞாழல் வேர் அளைப் பள்ளி
அலவன் சிறு மனை சிதைய, புணரி
குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன்
நல்கிய நாள் தவச் சிலவே; அலரே,
வில் கெழு தானை விச்சியர் பெருமகன்
வேந்தரொடு பொருத ஞான்றை, பாணர்
புலி நோக்கு உறழ் நிலை கண்ட
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே.

வரைவிடை வேறுபடும் கிழத்தியை, ''அவர் வரையும் நாள் அணித்து'' எனவும்,''அலர் அஞ்சல்'' எனவும் கூறியது.

பரணர் பாடல்

நண்டுவளை

கடலலையானது சிறுசிறு பூக்களைக் கொண்ட ஞாழல் மர வேர்ப்பகுதியில் இருந்த நண்டுவளை சிதையும்படி முரசு போல் முழங்கிக்கொண்டு மோதும் துறைவன் எனக்கு இன்பம் தந்த நாட்கள் சிலவே. 

ஆனால் அதுபற்றிப் பேசப்படும் அலரோ அரசன் விச்சியர் பெருமகன் தன் வில்லாளர் படையுடன் வேந்தரை எதிர்த்துப் போரிட்டபோது புலியை எதிர்த்துச் சிறிய காடைப்பறவை போரிடுவது போல் இருந்ததை கண்டு குறும்பூர் வாழ் மக்கள் ஆரவாரம் செய்தது போல் பெரிதாக உள்ளது.  
  
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment