Pages

Sunday, 18 May 2025

மேழி விளக்கம் சொல்கிறது

மேழி விளக்கம் உட்பொருள் சுருக்கம் 

நூலாசிரியர்

கொங்கு தேசப் பூந்துறை நாட்டுச் சென்னிமலை முருகன் அருளால் பிறந்தவன் தேர்ச்சோழன். 

தேர்ச்சோழனுக்கு உரியது திருவிளங்கு நாடு. இது காவிரியின் கரையருகே திருமலையைக் கொண்டது. இங்குள்ள திருவெண்காடு என்னும் ஊரில், கார்காத்த வேளாளர் குலத்தில் பிறந்த சரவணையா இந்த நூலை இயற்றினார். 

இடும்பனிடம் முறையிடல்

தமிழ்நாட்டடில் மூவேந்தர் ஆட்சிக்குப் பின்னர் கொடுங்கோல் துட்டர் ஆட்சி நடந்தது. அப்போது அந்தணர் முதலான அனைவரும் துன்புற்றனர். அவர்கள் வேளாளர் தலைமையில் ஒன்றுதிரண்டு சென்னிமலை வந்து  இடும்பனிடம் முறையிட்டனர். 

உழவுக் கருவிகள், வீட்டிலும் காட்டிலும் புழங்கிவந்த ஏனங்கள், மாடு, எருமை, குதிரை முதலானவற்றுடன் காமாட்சியம்மன் அருளால், மைசூர், மலையாளம் முதலான நாடுகளில் நலமாக வாழ்ந்தோம். 

அரசர்கள் குறைந்த வரி வாங்கினர். அதனால் அரசர்களைக் காட்டிலும் மேம்பட்டவராய் வேளாளர்கள் கீர்த்தியுடன் வாழ்ந்துவந்தோம்.   

மூவேந்தர்களுக்குப் பின்னர் வந்த அரசர்களின் முன்னோடிகளாய் இருந்தவர்கள் துட்டர்கள். அதிக வரி வாங்கினர். எங்களது ஏனங்களை விற்று வரி கொடுத்தோம். 

பல வகையில் தண்டிக்கப்பட்டோம். நாட்டில் கொள்ளைகளும், கொலைகளும் மிகுந்தன.

ஏர், நிலம் முதலானவற்றை இழந்து பஞ்சைப் பராரிகளாய் ஊர் ஊராகத் திரிந்தோம். பசிக்குப் பழங்கஞ்சியும் கிடைக்காமல் வாடினோம். 

எனவே வேலவன் அன்றி வேறு துணை இல்லை என்று உன் உதவியை நாடி வந்துள்ளோம். 

என்றனர் 

இடும்பன் ஆறுதல் கூறுகிறான்

வேளாளர் வரலாறு

அஞ்சவேண்டாம். அறுகம்புல்லுக்குக் கேடு இல்லை. அதனை மேயும் விலங்குகளுக்கு அழிவு உண்டு. நீங்கள் அறுகம்புல் போன்றவர்கள். உயிரினங்களைக் காப்பாற்ற வந்தவர்கள். 

வேளாளன், வேளாள-நாச்சி இருவரும் ஆதியில் சிவனுக்கும் கங்கைக்கும் பிறந்தவர்கள். வேளாளன் கலைகள் அனைத்தையும் பயின்று இமயமலைச் சாரலில் இருந்தான். 

காராளன், காராள-நாச்சி இருவரும் திருமாலுக்குப் பூமாதேவியிடம் பிறந்தவர்கள். காராளன் துட்டர்களை அடக்கி நாட்டை ஆண்டுவந்தான். 

அசுரன் ஒருவன் ஊர்வசியைத் தூக்கிச் சென்றான். காராளன் ஊர்வசியைக் காப்பாற்றப் போரிட்டான். வேளாளனும் காராளனுக்குத் துணையாக வந்தான். இருவரும் மாமன் மைத்துனர். இருவரும் அசுரனைக் கொன்று ஊர்வசியைக் காப்பாற்றினர். தேவர்கள் மகிழ்ந்தனர். 

பின்னர் சிவனும் திருமாலும் தம் பிள்ளைத் திருமணம் செய்து கொடுத்தனர். காராளன் வேளாளநாச்சியை மணந்தான். வேளாளன் காராளநாச்சியை மணந்தான். 

(திருமணம், சீர்வரிசை - நூலில் காணலாம்)

மணமக்களுக்கு நீலமலைச் சாரல், காவிரி பாயும் நிலம், பட்டாப்பி என்னும் பரவை நதி பிறந்த எட்டாறு சூழ்ந்த நிலம் ஆகியவற்றைக் கொடுத்தனர். 

இந்திரன் முதலானோரும் பல சன்மானங்களைக் கொடுத்தனர். வேளாளன், காராளன் இருவரும் மேலும் பல அரச குமாரிகளை மணந்து மக்கள் செல்வத்துடன் வாழ்ந்தனர். 

நாடெல்லாம்

கலியுகத்தின் தொடக்கத்தில் உழவு செய்யும் வேளாளர் எண்ணிக்கை குறைந்தது. தமிழக மூவேந்தரும் வருந்தினர். நீலமலைச் சாரலுக்கு வந்தனர். வேளாளன், காராளன் இருவரையும் உதவுமாறு வேண்டிக்கொண்டனர். 

"கங்கை குலத்து அரசே! காராள மன்னவனே! எங்கள் நாட்டுக்கு வந்து வேளாண்மையைப் பெருக்க வேண்டும். விளந்ததில் 6-ல் 1 பங்கு வரியாகத் தந்தால் போதும். உங்களுக்கு நாங்கள் சரியாசனம் தருவோம். எங்கள் அவையில் நீங்கள் எங்களுக்குச் சமமான இருக்கையில் அமரலாம்" என்று சொல்லி வேண்டிக்கொண்டனர். 

இருவரும் ஒப்புக்கொண்டனர். முதலில் சோழநாட்டுக் காஞ்சிபுரம் வந்தனர். காமாட்சியை வணங்கினர். பின்னர் குளித்தலைக்கு வந்து காவிரியில் நீராடி செல்வியம்மனை வழிபட்டனர். 

48 ஆயிரம் குடிமக்களையும் கொங்கர் சோழர் பாண்டியர் எனப் பிரித்து, அவர்களில் உழவு செய்யும் 12 ஆயிரம் பேரைப் பசுங்குடிகள் என்று கொண்டு குடியேற்றினர். அவர்கள் நாட்டையும் அரசனையும் வளமுறச் செய்தனர். 

கொங்குமண்டல வேளாளர் வழியில் பலவகை வேளாளர்கள் தோன்றினர். 

சக்கரவர்த்திச் சோழனுக்குக் காராள குலக் கன்னியிடம் பிறந்தவர்கள் தொண்டை மண்ணடல வேளாளர். 

கார்காத்த வேளாளர்

இந்திரனுக்கும் பாண்டினுக்கும் இடையில் போர் மூண்டது. இந்திரன் மேகத்தைப் படையாக அனுப்பினான். பாண்டியன் மேகத்தைச் சிறையிலிட்டான். வேளாளர் மேகத்தைச் சிறையிலிருந்து விடுவிக்குமாறு வேண்டினர். பிணை வேண்டும் என்று பாண்டியன் கூற சோழநாட்டு வேளாளர் சிலர் பணையமாகப் பாண்டியனின் சிறையில் இருக்க ஒப்புக்கொண்டனர். அவர்களைச் சிறையில் வைத்துக்கொண்டு பாண்டியன் சிறையில் இருந்த மேகங்களை விடுவித்தான். அதனால் மழை பொழிந்தது. இப்படிப் பாண்டியன் சிறைக்கு வந்தவர் "கார் காத்த வேளாளர்" எனப்பட்டனர். 

இப்படி வந்த 5 வகை வேளாளர்களின் வழிவந்தவர் பலவகை வேளாளர்கள். அவர்கள் ஆங்காங்கே பேசும்  மொழியாலும் வேறுபட்டனர். 

இந்த வரலாற்றை இடும்பன் கூறினான். இடும்பன் முருகனிடம் முறையிட்டான். முருகன் அருளினான். வேளாளர் இன்னல் நீங்கிற்று. 


No comments:

Post a Comment