Pages

Saturday, 31 May 2025

பாயிரம்

பாயிரம் என்பது ஆயிரம் என்பது போல் ‘இரம்’ என்னும் இடைச்சொல்லைக் கொண்டு முடியும் சொல். 

நூலின் தொடக்கத்தில் நூலைப் பற்றிக் கூறும் செய்தியைப் ‘பாயிரம்’ என்கிறோம்.

ஆயிர முகத்தா னகன்ற தாயினும் 
பாயிர மில்லது பனுவ லன்றே . (நன்னூல்)

ஒரு கோணத்தில் சொல்லாமல் ஆயிரக் கணக்கான கோணங்களில் விரித்துச் சொல்லும் நூலாக இருந்ததாலும் பாயிரம் இல்லாவிட்டால் அதனைப் பனுவல் (கருத்துப் பஞ்சால் நூற்று நெய்யப்பட்ட ஆடை) என்று கொள்ள முடியாது - என்பது இந்த நன்னூல் நூற்பா சொல்லும் கருத்து. 

இதற்கு விருத்தியுரை எழுதும் சங்கர நமச்சிவாயர் பாயிரம் இல்லாமல் நூல் நிரம்பாது என்னும்போது வெண்பா ஒன்றால் தெளிவுபடுத்துகிறார். 

மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும் 
ஆடமைத்தோள் நல்லார்க்கு அணியும் போல் - நாடிமுன் 
ஐதுரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும் 
பெய்துரையா வைத்தார் பெரிது 

  • மாடங்களில் தீட்டப்படும் சித்திரங்கள் போலவும்
  • கோயிலுக்குக் கட்டப்படும் கோபுரங்கள் போலவும்
  • அழகியர் மேனிக்கு அணிகலன்கள் போலவும்
அணிந்துரை என்னும் பாயிரம் நூலுக்குச் சேர்க்கப்படுகிறது 
என்று இந்த வெண்பா தெரிவிக்கிறது. 

No comments:

Post a Comment