புறத்திரட்டு நூலில் உள்ளவை
செந்நெல் அம் கரும்பிடோடு இகலும் தீஞ்சுவைக்
கன்னல் அம் கரும்புதான் கமுகைக் காய்ந்து எழும்
இன்னவை காண்கிலன் என்று பூகமும்
முன்னிய முகில்களால் முகம் புதைக்குமே
வளர்வதில் நெல் கரும்போடு போட்டி போடும். கரும்பு கமுகோடு போட்டி போடும். கமுகம் என்னும் பூக மரங்கள் வளர்ந்து மேகத்தில் மறைந்துகொள்ளும்.
உயர்குடி நனியுள் தோன்றல் ஊனம் இல் யாக்கை ஆதல்
மயல் அறு கல்வி கேள்வித் தன்மையால் வல்லர் ஆதல்
பெரிது உணர் அறிவே ஆதல் பேர் அறம் கோடல் என்று ஆங்கு
அரிது இவை பெறுத்தல் ஏடா பெற்றவர் மக்கள் என்பார்.
உயர்குடியில் பிறத்தல், ஊனமில்லா உடலைப் பெறுதல், கல்வி கேள்விகளில் வல்லவர் ஆதல், அறிஞர் ஆதல், அறம் செய்தல், ஆகிய இப் பெறுதற்கு அரிய பேறுகளைப் பெற்றவர் மக்கள் ஆவர்.
பள்ள முதுநீர்ப் பழகினும் மீன் இனம்
வெள்ளம் புதியது காணின் விருப்புறூஉம்
கள் அவிழ் கோதையர் காமனோடு ஆயினும்
உள்ளம் பிறிதா உருகலும் கொள் நீ
ஆழமான பழமையான நீரில் வாழ்ந்தாலும் மீன்கள் புதுவெள்ளம் வரக் கண்டால் மகிழும். அதுபோல, காமன் போன்ற கணவனோடு வாழ்ந்தாலும், மகளிர் மற்றொருவனைக் கண்டு விரும்புவர்.
சான்றோர் உவப்பத் தனிநின்று பழிப்ப காணார்
ஆன்று ஆங்கு அமைந்த குரவர் மொழி கோடல் ஈயார்
வான் தாங்கி நின்ற புகழ் மாசு படுப்பர் காமன்
தான் தாங்கி விட்ட கணை மெய்ப்படும் ஆயினக்ககால்.
காமன் கணை தாக்கும்போது, சான்றோர் மகிழும்படி தனியே வாழ்ந்தவரும் தனக்கு வரும் பழியைக் கண்டுகொள்ள மாட்டார்கள். தாய், தந்தை, குரு முதலான குரவர் சொல்வதைக் கேட்கமாட்டார்கள். தன் புகழ் மாசு படும்படி நடந்துகொள்வர்.
வாரி பெருகப் பெருகிய காதலை
வாரி சுருங்கச் சுருங்கி விடுதலின்
மாரி பெருகப் பெருகி அற அறும்
வார் புனல் ஆற்றின் வகையும் புரைய
வெள்ளம் பெருகும்போது ஆறு பெருகும். வெள்ளம் வராதபோது ஆறு காயும். அதுபோல மகளிர் செல்வம் தரும்போது பேரின்பம் தருவர். செல்வம் தராதபோது அவர் தரும் இன்பமும் சுருங்கும்.
நுண் பொருளானை நுகர்ந்திட்டு வான் பொருள்
நன்கு உடையானை நயந்தனர் கோடலின்
வம்பு இள மென் முலை வாள் நெடும் கண்ணவர்
கொம்பிடை வாழும் குரங்கும் புரைப
அறிவாளிகளை ஆசை பட்டு இன்பம் கண்ட மகளிர் பொருள் உள்ளவனைப் போற்றி இன்பம் தருவர். அவர்களின் முலையும் கண்ணும் கிளைக்குக் கிளை தாவும் குரங்கு.
மு அருணாசலம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு - ஒன்பதாம் நூற்றாண்டு - பாகம் - 1 | அத்தியாயம் 2 | இலக்கிய ஆசிரியர் | வளையாபதி | (செய்திச் சுருக்கம்)
No comments:
Post a Comment