Pages

Monday, 3 February 2025

வளையாபதி | பாடல்கள் | 51

புறத்திரட்டு நூலில் உள்ளவை

வளையாபதிப் பாடல்கள் சுவை மிக்கவை என்று தக்கயாகப்பரணி உரைகாரர் குறிப்பிடுகிறார். இந்த உரை தோன்றிய 15 ஆம் நூற்றாண்டில் வளையாபதி நூல் இருந்திருக்க வேண்டும் என்பது இதனால் தெரிகிறது. 

மக்கட் பயந்து மனையறம் ஆற்றுதல்
தக்கது அறிந்தார் தலைமைக் குணம் என்ப
பைத்தரவு அல்குல் படிற்று உரையாளரொடு
துய்த்துக் களிப்பது தோற்றம் ஒன்று இன்றே. 

மக்களைப் பெற்று மனையறம் பேணுதல் தலைமைக் குணம். பொதுமகளுடன் களித்தல் தலைதூக்கும் குணம் ஆகாது.

மா என்று உரைத்து மடல் ஏறுப மன்றுதோறும்
பூ என்று எருக்கின் மலர் சூடுப புன்மை கொண்டே
பேய் என்று எழுந்து பிறர் ஆர்ப்பவும் நிற்ப காம
நோய் நன்கு எழுந்து நனிக் காழ்க்கொள்வது ஆயினக்கால் 

காம விதை முளைத்துவிட்டால் குதிரை என்று பனைமட்டைக் குதிரையில் ஏறி வருவர். அப்போது பூ என்று எருக்கம்பூவைச் சூடிக்கொள்வர். பேய் என்று பிறர் தூற்றுவது பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். 

ஆக்கம் படுக்கும் அருந்தளை வாய்ப் பெய்விக்கும் 
போக்கப் படுக்கும் புலை நரகத்து உய்ப்பிக்கும் 
காக்கப்படுவன இந்தியம் ஐந்தினுள்
நாக்கு அல்லது இல்லை நனி பேணுமாறே. 

5 புலன்களில் காக்க வேண்டிது நாக்கே. நாக்கால் பேசும் உரையே. நாக்கைக் காப்பாற்றாவிட்டால் செல்வம் அழியும். விலங்கிட்டுத் தண்டனை பெற வைக்கும். பிறரால் ஒதுக்கப்பட வைக்கும். நரகில் தள்ளும். 

உண்டியுள் காப்புண்டு உருபொருள் காப்புண்டு 
கண்ட விழுப்பொருள் கல்விக்குக் காப்புண்டு 
பெண்டிரைக் காப்பது இலம் என்று ஞாலத்துக்
கண்டு மொழிந்தனர் கற்று அறிந்தோரே 

உணவு, பெரிய பொருள், சிறந்த பொன் போன்ற பொருள், கல்வி  கற்க உதவும் சுவடி முதலானவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம். பெண்களை மட்டும் நம் பாதுகாப்பில் வைத்திருக்க முடியாது.

நாடும் ஊரும் நனி புகழ்ந்து ஏத்தலும் 
பீடு உறும் மழை பெய் எனப் பெய்தலும் 
கூடல் ஆற்றவர் நல்லது கூறுங்கால் 
பாடுங்கால் மிகு பத்தினிக்கு ஆவதே
(இது "பெய் எனப் பெய்யும் மழை" என்னும் திருக்குறளைத் தழுவியது) 

பத்தினிப் பெண்ணை நாடும், ஊரும் புகழ்ந்து பாராட்டும். அவள் பெய் என்றால் மழை பெய்யும்.

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல் 
உற்றார்க்கு உடம்பு மிகை அவை உள்வழிப்
பற்றா  வினையாய்ப் பலப்பல யோனிகள் 
அற்றாய் உழலும் ஆறிதற்கு அரிதே   
(இது குறுந்தொகை 17 ஆம் பாடலைத் தழுவியது.)
(இதில் திருக்குறள் முழுமையாக எடுத்தாளப்பட்டுள்ளது)

உடம்போடும் உறவோடும் பற்று இருந்தால் உயிரோடு வினைகள் பற்றிக்கொண்டு பிறவியில் பற்பல யோனி காலம் உழலவேண்டி வரும்.

மு அருணாசலம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு -  ஒன்பதாம் நூற்றாண்டு - பாகம் - 1 | அத்தியாயம் 2 | இலக்கிய ஆசிரியர் | வளையாபதி | (செய்திச் சுருக்கம்)

No comments:

Post a Comment